காலஞ்சென்ற கவிஞரும் தமிழ்ச் சமூக ஆர்வலருமான திரு மா. அன்பழகனின் நினைவாக, ‘புதுமைத்தேனீ’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை (ஏப்ரல் 27) நடைபெற்ற அமரர் அன்பழகனின் நினைவேந்தல் நிகழ்ச்சியின்போது இந்த அறிவிப்பு வெளியானது.
சிங்கப்பூரில் தமிழ்க் கவிதைப் புனைவையும் வாசிப்பையும் மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வரும் கவிமாலை அமைப்பின் காப்பாளராகப் பல்லாண்டுகள் பணியாற்றிய புதுமைத்தேனீ மா. அன்பழகன், அண்மையில் தமது 83வது வயதில் காலமானார்.
கவிமாலை அமைப்பின் உறுப்பினர்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதியைப் பயன்படுத்தி, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த விருது வழங்கப்படும் என அவ்வமைப்பின் தலைவர் இன்பா, தமிழ் முரசு நாளிதழிடம் தெரிவித்தார்.
ஆண்டுதோறும் தமிழ்மொழி விழாவின்போது கவிமாலை அமைப்பு, தமிழ்ச் சான்றோருக்கான கணையாழி விருதையும் அரும்பும் கவிஞர்களுக்கான தங்க முத்திரை விருதையும் வழங்கிச் சிறப்பித்து வருகிறது.
திரு அன்பழகனுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சி, சிராங்கூன் சாலையில் உள்ள முஸ்தஃபா சென்டர் அருகிலுள்ள சென்ட்ரியம் ஸ்குவேர் கடைத்தொகுதியில் நடைபெற்றது. கிட்டத்தட்ட 340 பேர் திரண்டிருந்த அந்த நிகழ்ச்சியில், சிங்கப்பூரின் மூத்த தமிழ் எழுத்தாளர்கள், கல்விமான்கள், வணிகர்கள் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
தமிழ்ச் சமூக ஆர்வலர்கள் பிச்சினிக்காடு இளங்கோ, நா. ஆண்டியப்பன், எம்இஎஸ் (MES) குழும இயக்குநர் அப்துல் ஜலீல், புரோப்நெக்ஸ் (PropNex) நிறுவனத் தலைவர் இஸ்மாயில் கஃபூர்,‘ஜோதி ஸ்டோர்’ ராஜகுமார் சந்திரா, ஹரிகிருஷ்ணன் முத்துசாமி, ஷாநவாஸ், முத்துகிருஷ்ணன், இறை. மதியழகன், முனைவர் இரத்தின வேங்கடேசன், த. தனபால்குமார், சி. கருணாகரசு, நெப்போலியன், மஹ்ஜபீன் உள்ளிட்ட பலர் மேடையேறி உரையாற்றினர்.
அமரர் அன்பழகனின் கனிந்த பார்வை மற்றும் புன்னகையின் நினைவுகளைத் தாங்கியிருந்த பங்கேற்பாளர்களுக்கு இடையே, திரையில் காட்டப்பட்ட அவரது நிழற்படம் செயற்கை நுண்ணறிவால் (ஏஐ) உயிர்பெற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
திரைத்துறைத் தயாரிப்பாளராகவும் இருந்த திரு அன்பழகன், தமிழக அரசியலிலும் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியச் சூழலிலும் ஆழமான முத்திரையைப் பதித்திருப்பதாகப் பேச்சாளர்கள் குறிப்பிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
திரு அன்பழகனின் கோரிக்கையை ஏற்றுத் தமிழகச் சட்டமன்றத்தில் திருக்குறள் கூறித் தொடங்கும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுவது, 2003ல் அவருக்குச் சிங்கப்பூரில் ‘முத்தமிழ் காவலர்’ விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது போன்ற தகவல்கள் நிகழ்ச்சியில் பகிரப்பட்டன.
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, நடிகர்கள் சிவகுமார், பொன்வண்ணன் உள்ளிட்டோர் காணொளி வாயிலாகத் திரு அன்பழகனின் பணிகளைப் பாராட்டி தங்களது இரங்கலைத் தெரிவித்தனர்.
கொள்கை அளவில் மட்டுமன்றி, திரு அன்பழகன் சிறந்த குடும்ப நண்பராகவும், பிறர் நலனுக்காகப் பாடுபட்ட ‘பல்கலைக் கொள்கலன்’ போலவும் திகழ்ந்ததாக முனைவர் வீரமணி குறிப்பிட்டார்.
“இந்த நிகழ்ச்சிக்குப் பலரும் வந்திருந்தது தங்களது சொந்த உறவினரின் இழப்பிற்குத் திரண்டிருந்ததுபோல இருந்தது,” என்று சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முன்னாள் தலைவர் நா. ஆண்டியப்பன் கூறினார்.
தமிழாசிரியர் சங்கத்தின் செயலாளராகத் தாம் பொறுப்பேற்றபோது, கவிமாலையின் முக்கிய நிகழ்ச்சி ஒன்றில் சிறப்புப் பேச்சாளராகத் தம்மைத் திரு அன்பழகன் அழைத்ததைத் திரு தனபால்குமார் உருக்கத்துடன் பகிர்ந்துகொண்டார்.
“நான் சற்றே தயங்கியபோது, இளந்தலைமுறையினர் முன்வர வேண்டும் என்று உரிமையோடு ஊக்கம் கொடுத்தார்.
“என்னைச் சமூகத்திற்கு அறிமுகம் செய்து, சமூகத்தோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பையும் பொறுப்பையும் வழங்கியவர் அவரே,” என்று திரு தனபால்குமார் நினைவுகூர்ந்தார்.

