கற்றலுக்கு வயதும் இனமும் பொருட்டல்ல என்பதற்கு 65 வயது திருவாட்டி சந்திரிகா மனோகரன், எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.
கடந்த ஒன்றரை ஆண்டாக திருவாட்டி சந்திரிகா, ‘சீகோங்’ எனப்படும் சீன பாரம்பரிய உடற்பயிற்சியில் முழு மனத்தோடு ஈடுபட்டு வருகிறார். திருவாட்டி சந்திரிகா, ‘சீகோங்’ உடற்பயிற்சியை அன்றாடம் தவறாமல் செய்துவருகிறார்.
‘சீகோங்’ என்பது மெதுவான, நிதானமான அசைவுகளைக் கொண்ட ஒரு வகை விழிப்புணர்வுப் பயிற்சியாகும். ஆழமான மூச்சிழுப்பு, தியானம் ஆகியவற்றை இணைத்து உடலின் உயிர்சக்தியை வளர்க்கவும் சமநிலைப்படுத்தவும் உதவும் பண்டைய சீனக் கலையாக இது உள்ளது.
சிங்கப்பூரில் சீன மூத்தோர் பலர் பூங்காக்களிலும் அடுக்குமாடி வீடுகளின் அடித்தளங்களிலும் ‘தைச்சி’ உடற்பயிற்சி செய்து பார்த்திருப்போம்.
‘தைச்சி’யைப் போல ‘சீகோங்’ உடற்பயிற்சி செய்யும் மூத்தோர் பெரும்பாலும் சீன இனத்தவர்களே.
இந்தியராக இருந்தாலும் சீன மூத்தோர் ஈடுபடும் உடற்பயிற்சியில் சேர்வதில் தமக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்று திருவாட்டி சந்திரிகா கூறினார்.
“ஒன்றைக் கற்றுக்கொள்ள முடிவெடுத்துவிட்டால் இன வேறுபாடுகளைப் பற்றி நாம் கவலைப்படக்கூடாது. என்னைப் போலப் பலரும் இதில் ஈடுபட முன்வர வேண்டும்,” என்று அவர் கூறினார்.
ஓய்வுபெற்ற திருவாட்டி சந்திரிகா முன்னதாக கல்வியாளராகப் பணிபுரிந்தவர். ‘சீகோங்’ உடற்பயிற்சி தொடங்கிய பேராசிரியரைப் பற்றி நூலகத்திற்குச் சென்று புத்தகங்கள் படித்துள்ள அவர், தம் குழுவினருடன் அதைப் பற்றிப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
யோகா பயிற்சி பெற்றுள்ள திருவாட்டி சந்திரிகா, ‘சீகோங்’கில் ஈடுபடத் தொடங்கிய பிறகு சில சவால்களைச் சந்தித்தார்.
“தடுமாற்றமின்றி ஒரு காலில் நிற்பது போன்றவற்றில் தொடக்கத்தில் சிரமங்கள் கண்டேன். ஆனால் நாளடைவில் என் உடலின் மையப் பகுதி வலுவடையத் தொடங்கியது,” என்று திருவாட்டி சந்திரிகா கூறினார்.
யோகாவிற்கும் ‘சீகோங்’கிற்கும் பல ஒற்றுமைகள் இருப்பதாகத் தெரிவித்த திருவாட்டி சந்திரிகா, வாரயிறுதிகளில் வீட்டில் பயிற்சியில் ஈடுபடுகிறார்.
‘சீகோங்’ உடலின் அசைவுத்தன்மை, உடல் தோற்ற அமைப்பு போன்றவற்றைச் சீராக வைத்திருக்க உதவுவதாக திருவாட்டி சந்திரிகா குறிப்பிட்டார். அத்துடன், மனம் தெளிவாக இருப்பதாகவும் இதில் ஈடுபட்ட பின்னர் தாம் மூப்படைதல் பற்றி நினைப்பதில்லை என்றும் கூறினார்.
திருவாட்டி சந்திரிகாவின் பயிற்றுவிப்பாளர் திருவாட்டி டான், 64, ‘சீகோங்’ சிங்கப்பூரில் 2000ல் அறிமுகப்படுத்தப்பட்டதாகச் சொன்னார்.
“உடல் உறுப்புகளுக்கு நல்ல ஆதரவு அளித்து நீண்ட வாழ்க்கையை ‘சீகோங்’ பயிற்சி ஊக்குவிக்கிறது. மூத்தோர் தயக்கமின்றி இதில் ஈடுபடலாம்,” என்று திருவாட்டி டான் கூறினார்.
“சிங்கப்பூரில் நாம் அனைவரும் நம் கலாசாரக் கூறுகளைப் பகிர்ந்துகொண்டு வாழ்கிறோம். அந்த விதத்தில் சந்திரிகா எங்களுடன் சேர்ந்த போது எனக்கு மிகவும் பெருமிதமாக இருந்தது. இந்தியராக இருந்தாலும் சீன இனத்தவரின் உடற்பயிற்சியில் ஈடுபடுவதில் எந்தத் தவறும் இல்லை. உடல் ஆரோக்கியத்தைப் பேண எதுவும் தடையன்று,” என்று திருவாட்டி சந்திரிகாவுடன் சீகோங் செய்யும் 70 வயது திருவாட்டி டான் வீ கிங் குறிப்பிட்டார்.

