தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாடல்களின் கதை பேசும் சுபஸ்ரீ தணிகாசலம்

3 mins read
47494fb2-c304-4756-9fb2-5d172528e665
சுபஸ்ரீ தணிகாசலம். - படம்: பே. கார்த்திகேயன்

கொவிட்-19 பெருந்தொற்றின்போது உலகின் பல்வேறு பகுதிகளிலுள்ள இசைக்கலைஞர்களை மெய்நிகர் வழி ஒன்றிணைத்து காலத்தால் அழியாத தமிழ்த் திரைப்பாடல்களை அதன் பின்னணிக் கதையுடன் கோத்து வழங்கி இணைய உலகில் பிரபலமானவர் சுபஸ்ரீ தணிகாசலம்.

‘குவாரென்டின் ஃபிரம் ரியாலிட்டி’ எனும் அந்தக் காணொளித் தொடரில் இதுவரை ஏறத்தாழ 700 காணொளிகளை வெளியிட்டு இசைப்பிரியர்கள் மத்தியில் பெருவரவேற்பைப் பெற்றுள்ளார் இவர்.

வெவ்வேறு பகுதிகளில் இருந்து அனுப்பப்படும் காணொளிகளைத் தொகுத்து பாடலாக்குவதுடன், ஒவ்வொரு பாடல் குறித்த சுவாரசியமான தகவல்களையும் காணொளிகளில் பகிர்வது இவரது தனிச்சிறப்பு.

“நான் ஒரு இசைப் பிரியர். எனக்குப் பிடித்ததை, தெரிந்ததை மக்களுக்குச் சொல்ல ஆசைப்பட்டேன். பெரும் இலக்கின்றி விருப்பத்தின் பேரில் விதைத்தது விருட்சமாகியுள்ளது மகிழ்ச்சி,” என்று புன்சிரிப்புடன் சொன்னார்.

மூன்று வயதிலிருந்தே இவருக்கு இசை மீது இருந்த ஆர்வத்திற்குத் தீனி போட்டது இவரது ஊடகப் பணி. தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு தொலைக்காட்சி ஒளிவழிகளுக்கு இசை நிகழ்ச்சிகள் வடிவமைத்த இவருக்கு இசையமைப்பாளர்கள், கலைஞர்கள், இசை மேதைகள் பலருடன் பழகும் வாய்ப்பு அமைந்தது.

“கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி அனைவரிடமும் பாடல்கள் உருவான விதம், அதற்குப் பின்னால் உள்ள உழைப்பு குறித்து கேட்டறிவது எனக்குப் பிடித்தமான ஒன்று,” என்று சொன்ன இவர், அவர்கள் மூலம் கேட்டறிந்த கதைகளைக் காணொளிகளில் பகிர்வதாகச் சொன்னார்.

மேலும், “ஒரு பாடலுக்குப் பல பரிமாணங்கள் உண்டு. அதன் வரிகளில் தொடங்கி அது வெளிப்படுத்தும் உணர்வு, இசைக்கோப்பின் பாணி என அனைத்தும் முக்கியமானவை. அதில் இசைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு இசைக் கருவிக்கும் முக்கியத்துவம் உண்டு,” என்றார்.

பெரும்பாலும் பாடல் கேட்பவர்கள் இவற்றை உன்னிப்பாகக் கவனித்துச் சிலாகிப்பதில்லை என்றும் அதனை விளக்கிச் சொல்ல வாய்ப்பாக காணொளி அமைகிறது என்றும் இவர் கூறினார்.

“கர்நாடக இசையை அனைவரையும்போல ஒரே பாணியில் கற்காமல், ஒரு பாடல் பாடி, அதன் நுணுக்கங்களை கவனித்து, அதன் ராகத்தை உணர்வது, அதே ராகத்தில் அமைந்த பிற பாடல்களைக் கவனித்துக் கற்பது உள்ளிட்டவை மூலம் இசை பயின்றேன். அந்த முறை பார்ப்போருக்கு சுவாரசியமளிக்கும் எனும் எண்ணத்தில் உருவானது இக்காணொளித் தொடர்,” என்றார் சுபஸ்ரீ.

“வெவ்வேறு இடங்களில் இருந்து வெவ்வேறு முறையில் காணொளி எடுத்து அதை ஒரே காணொளியாக்குவது எளிதன்று,” என்று சொன்ன இவர், தங்கள் தொகுப்பாளர் அப்பணியைச் சிறப்பாகச் செய்வதாகவும் குறிப்பிட்டார்.

ஒரு பாடலைத் தேர்ந்தெடுத்து, அதற்கேற்ற குரல் கொண்ட பாடகர்கள், கருவி வாசிப்பவர்களைத் தேர்ந்தெடுத்து, இவரே பாடி அனுப்பி, அவற்றுக்கு வாசித்து அனுப்பச் சொல்லி, பின்னர் பாடகர்களின் குரலுடன் இணைக்கிறார்.

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், முதல் மூன்று காணொளிகளைப் பார்த்து பாராட்டியது மறக்க முடியாதது என்று சொன்ன இவர், தமது காணொளித் தொடர் மூலம் பல இளம் கலைஞர்களின் திறமை வெளிவருவதில் பெருமை என்று சொன்னார்.

தற்போது பல இசைக்கலைஞர்களை முழு நேரமாகப் பணியமர்த்தியுள்ளதாகச் சொன்ன இவர், பல்வேறு நாடுகளுக்குச் சென்று புதுமையான வகையில் நிகழ்ச்சிகளும் நடத்தத் தொடங்கியுள்ளார்.

அதன் ஒரு பகுதியாக, ‘திரையிசையில் திருமால் பக்தி’ எனும் நிகழ்ச்சியை சிங்கப்பூரில் தமது குழுவினருடன் நடத்தினார். அதில் திருமால் பக்தி தொடர்பான திரையிசைப் பாடல்கள், அதன் பின்னணிக்குக் கதைகளைப் பகிர்ந்தது மக்களிடம் வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து பல நாடுகளுக்கும் சென்று நிகழ்ச்சிகளை நடத்தவுள்ள இவர், திரையிசைக் களஞ்சியம் ஒன்றை உருவாக்க வேண்டும் என விழைகிறார். அதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளதாகவும் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்