தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் பலரும் லிட்டில் இந்தியா கடைத்தொகுதிகளிலோ இணையத்தளங்களிலோ புத்தாடைகளை வாங்கும் வேளையில் ஓர் எளிய சேலையைத் தமது தூரிகையால் கலைப்படைப்பாக மாற்றியுள்ளார் முழுநேரக் கலைஞரான கஸ்தூரி சஞ்சய் நாயர், 28.
பாரம்பரிய இந்திய உடைகள், அலங்காரப் பொருள்களில் பரவலாகக் காணப்படும் மயில், தாமரை போன்ற வடிவங்களைவிட, தமக்கே உரிய நவீன வடிவங்கள் இவருக்கு மிகவும் பரிச்சயமானவை.
முழு நிலவின் ஒளியில் ஓவியம் வரைந்துகொண்டே நடனமாடுவது போன்ற காட்சியை இவர் சேலையில் வரைந்துள்ளார்.
தன்னை முழுமையாகப் பிரதிபலிக்கும் தனிப்பட்ட ஓர் ஆடையை அணிய விரும்பியதாகக் கூறினார் திருவாட்டி கஸ்தூரி.
“கலை, நடனம் என்ற எனது இரண்டு முக்கிய அடையாளங்களை இந்தச் சேலை இணைக்கிறது,” என்று இவர் சொன்னார்.
அத்துடன், கையால் உருவாக்கப்படும் இரு ஆடைகள் ஒருபோதும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது என்றும் தம்மைப் போன்ற மற்றொரு கலைஞரால் அதே வடிவத்தை மீண்டும் உருவாக்க இயலாது என்றும் திருவாட்டி கஸ்தூரி குறிப்பிட்டார்.
கிட்டத்தட்ட 36 மணி நேரம் செலவிட்டு உருவாக்கப்பட்ட இந்தச் சேலையில், துணிகளுக்குப் பயன்படும் தனித்துவமான வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டு வெப்பத்தின்மூலம் நிலைநிறுத்தப்பட்டன.
வரையும்போது சாயம் சிதறிவிடாமல் கவனமாகக் கையாள்வதே மிகப் பெரிய சவாலாக இருந்ததாகக் கூறிய திருவாட்டி கஸ்தூரி, எதிர்பாராத பிழைகள் ஏற்பட்டாலும் அவற்றை வடிவமைப்போடு இணைத்துக்கொள்ளும் உத்தியைக் கையாண்டதாகச் சொன்னார்.
“இதன் மதிப்பு, பொருள்களின் விலையை மட்டும் உள்ளடக்கியதன்று. இதற்குப் பின்னால் நேரம், கற்பனைத் திறன், தனித்துவமான சிந்தனை ஆகியவையும் அடங்கும்,” என்றார் இந்தக் கலைஞர்.
இது கையால் வரையப்பட்டது என்பதால் சேலையைச் சற்றுக் கூடுதல் கவனத்துடன் கையாள வேண்டும் என்று இவர் சுட்டிக்காட்டினார்.
“குளிர்ந்த நீரில், மிதமான அளவுக்குச் சலவைத்தூள் சேர்த்து மென்மையாகக் கையால் துவைக்க வேண்டும். அழுத்தித் தோய்ப்பதையும் நீண்ட நேரம் ஊற வைப்பதையும் தவிர்ப்பது அவசியம்,” என்று திருவாட்டி கஸ்தூரி கூறினார்.
தமது முயற்சிக்குப் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் இவர் சொன்னார்.
எதிர்காலத்தில் மணப்பெண்கள், வாடிக்கையாளர்களின் வாழ்க்கை அனுபவங்களைத் தனித்துவமாகச் சித்திரிக்கும் ஆடைக் கலைப்படைப்புகளை உருவாக்க இவர் திட்டமிட்டுள்ளார்.
“பாரம்பரியக் கலையைத் தாண்டி சிந்திக்கும்போது, எத்தனை சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதை இந்த முயற்சி எனக்கு உணர்த்தியுள்ளது,” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் இந்தப் புதுமைக் கலைஞர்.
