அறிவைக் கொண்டாடவும் வாழ்நாள் கற்றலை ஊக்குவிக்கவும் செயல்படும் ‘ராய்ஹான் இல்மு’ (அறிவைக் கொண்டாடுவோம் என்று பொருள்படும் மலாய்ச் சொற்கள்) இயக்கம் 11 வட்டாரங்களுக்கு விரிவாக்கம் காண்கிறது.
மெண்டாக்கி அமைப்பின் சார்பில் முன்னெடுக்கப்படும் மலாய்/ முஸ்லிம் சமூகத்தின் இந்த முக்கிய இயக்கம் இதுவரை மூன்று வட்டாரங்களில் நடைபெறுகிறது. தற்போது தெம்பனிஸ், ஜூரோங், பாசிர் ரிஸ், ஜாலான் காயு, கம்போங் கிளாம், தோ பாயோ, உட்லண்ட்ஸ், மார்சிலிங், பொங்கோல் உள்ளிட்ட 11 வட்டாரங்களுக்கு இது விரிவடைகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டுமுதல் ஆண்டுதோறும் ஒரு மாதம் செயல்படும் இத்திட்டம், இவ்வாண்டு முதன்முறையாக, ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மூன்று மாதங்கள் நடைபெறவுள்ளது. இந்த இயக்கம் ஜூன் 13ஆம் தேதியன்று ‘நமது தெம்பனிஸ் நடுவ’ வளாகத்தில் நடைபெறவுள்ள ‘ராய்ஹான் இல்மு @ ஹார்ட்லேண்ட்ஸ்’ நிகழ்ச்சியில் அதிகாரபூர்வமாகத் தொடங்கப்படும்.
ஏறத்தாழ 90 பங்காளிகளின் ஆதரவுடன் செயல்படும் இத்திட்டம் 100க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை உள்ளடக்கும் என்று விஸ்மா மெண்டாக்கியில் நடைபெற்ற ‘ராய்ஹான் இல்மு 2026’ நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது.
மே 30ஆம் தேதியன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இதனை அறிவித்த மெண்டாக்கியின் தலைமை நிர்வாக அதிகாரி பெரோஸ் அக்பர், “இவ்வாண்டு ராய்ஹான் இல்மு இயக்கத்தைக் குடியிருப்புகளுக்குள் இன்னும் ஆழமாகக் கொண்டு செல்கிறோம். கற்றல் அன்றாட வாழ்க்கைக்குப் பொருத்தமானதாகவும் எளிதானதாகவும் இருக்க வேண்டும். பிள்ளைகளின் தன்னம்பிக்கையை ஊக்குவித்தல், பிள்ளைகளுக்கு உதவும் நோக்கில் பெற்றோர்க்கு ஆதரவளித்தல், ஊழியர்கள் புதிய திறன்களைப் பெறுதல் ஆகியவற்றில் அது கவனம் செலுத்தும்,” என்றார்.
அதிகமான மக்கள் தங்கள் வீடுகளிலோ, வட்டாரத்தின் அருகிலோ கற்றல் அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்யும் வகையில் இவ்வட்டாரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அமைப்பு கூறியது.
மெண்டாக்கி 2030 பணித்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட நான்கு கருப்பொருள்களில் இந்த நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்படும்.
தன்னம்பிக்கைமிக்க கற்போர், வலுவான குடும்பங்கள், எதிர்கால ஆயத்தநிலை கொண்ட பணியாளர்கள், செழிக்கும் சமூகம் ஆகிய கருப்பொருள்களில் இவை அமையும்.
தொடர்புடைய செய்திகள்
இத்திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியையடுத்து, ஜூலை மாதம் 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதிவரை, கற்றலின் எதிர்காலம், தொழில்நுட்பத்தின் பங்கு குறித்துக் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும் மெண்டாக்கி கருத்தரங்கம் உள்பட நான்கு நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.
“இந்நிகழ்ச்சியில் இடம்பெற்ற, ஆளில்லா வானூர்தி போன்ற இருவழித்தொடர்பு அனுபவத்தை என் மகன்கள் இருவரும் ரசித்தனர். ஈராண்டுகளாக இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறோம். எந்திரனியல் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை ஊக்கத்துடன் கற்கவும், புதிதாக சிந்திக்கவும் இவை ஊக்குவிக்கின்றன,” என்றார் இதில் பங்கேற்ற நூர் ஃபாத்திமா காஜா மன்சூர்.

