சிங்கப்பூர்ப் பாரம்பரியமாகும் ரங்கோலி கோலக் கலைஞர் விஜயலட்சுமியின் அயரா முயற்சி

3 mins read
0a0d136b-feaa-4b00-9fb9-4fbc930978e1
கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்ட திருவாட்டி விஜயலட்சுமி மோகன், 30,000க்கும் மேற்பட்ட ரங்கோலிகளை இதுவரை உருவாக்கியுள்ளார்.  - படம்: யோகிதா அன்புச்செழியன்
multi-img1 of 4

வண்ணங்களால் மாயம் செய்யும் இந்தியக் கோலக் கலையை, பல இன சிங்கப்பூர் சமூகத்தின் தனித்துவமான பாரம்பரியமாக்கி வருகிறார் 66 வயது திருவாட்டி விஜயலட்சுமி (விஜயா) மோகன்.

இந்திய நிகழ்வுடன், பல இன சமூக நிகழ்வுகள், விழாக்களிலும் ரங்கோலிக் கோலம் முக்கியத்துவம் பெற்று வருகிறது. அதற்கு முக்கியக் காரணம் சிங்கப்பூரின் ரங்கோலிக் கலைஞர் திருவாட்டி விஜயா மோகன்.

சிங்கப்பூரிலும் வெளிநாடுகளிலும் 60 ஆண்டுகளில் 30,000க்கும் மேற்பட்ட ரங்கோலிகள், கின்னஸ் சாதனை, சிங்கப்பூர் சாதனை என்று திருவாட்டி விஜயா அடைந்துள்ள சிகரங்கள் பல.

வாம்போ சமூக மன்றத்தில் 2003ஆம் ஆண்டு 2,756 சதுர அடி பரப்பளவில் அவர் போட்ட ரங்கோலி கோலம் உலகக் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

2003ஆம் ஆண்டில் வாம்போ சமூக மன்றத்தில் தமது சாதனை ரங்கோலி கோலத்தை உருவாக்கிக்கொண்டிருக்கும் திருவாட்டி விஜயா.
2003ஆம் ஆண்டில் வாம்போ சமூக மன்றத்தில் தமது சாதனை ரங்கோலி கோலத்தை உருவாக்கிக்கொண்டிருக்கும் திருவாட்டி விஜயா. - படம்: விஜயலட்சுமி மோகன்

ரங்கோலியின் அழகை அனைத்து இனத்தவருக்கும் வயதினருக்கும் கொண்டுசெல்ல ‘சிங்கா ரங்கோலி’ என்ற குழுவை 2015ஆம் அண்டு திருவாட்டி விஜயா தொடங்கினார். பள்ளிகளிலும் சமூகமன்றங்களிலும் பயிலரங்குகளை நடத்தி நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு ரங்கோலி போட திருவாட்டி விஜயா பயிற்சியளித்தார்.

இளம் தலைமுறையினரிடம் ரங்கோலி கலையை அறிமுகம் செய்வதன் மூலம் அதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்ல முடியும் என்பது திருவாட்டி விஜயலட்சுமியின் நம்பிக்கை.

ஐந்து வயதில் திருவாட்டி விஜயாவுக்கு ரங்கோலி மீது ஏற்பட்ட ஆர்வம் இன்று அதில் புதுமைகளையும் தொழில்நுட்பத்தையும் புகுத்தும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

இளையர்களை ஈர்க்க தத்ரூபமான சூழலைக் காட்டும் மிகை மெய்நிகர் தொழில்நுட்பம் வழி (augmented reality) ரங்கோலிக்‌ கலையை திருவாட்டி விஜயா கற்பிக்கிறார்.

தமது சகோதரரைப் பார்க்க சிங்கப்பூருக்கு முதன்முறையாக 1979ல் வந்திருந்த திருவாட்டி விஜயா.
தமது சகோதரரைப் பார்க்க சிங்கப்பூருக்கு முதன்முறையாக 1979ல் வந்திருந்த திருவாட்டி விஜயா. - படம்: விஜயலட்சுமி மோகன்

“விடியும் முன் எழுந்து வீட்டு வாசலைக் கழுவி, அரிசி மாவால் அம்மா கோலம் போடுவார். அதைப் பார்க்க நானும் காலையில் எழுந்துவிடுவேன். கோலத்தின் வடிவமும் நுட்பமும் என்னை மிகவும் கவர்ந்தன,” என்று நினைவுகூர்ந்த அவர், எங்குச் சென்றாலும் ஒவ்வொருநாளும் காலையில் வீட்டு வாசலில் கோலம் போட்டுவிடுவார்.

திருவாட்டி விஜயாவின் ரங்கோலிப் படைப்புகளும் புது பரிமாணத்தை எடுத்துள்ளன. பிளாஸ்டிக் கரண்டிகள், வளையல்கள், ‘பாஸ்தா’ வகைகள், பிஸ்தா ஓடுகள், பனிக்கூழ் குச்சிகள் என்று பொதுவாகக் காணப்படும் பொருள்களைக் கொண்டு ரங்கோலியில் புதுமைகளை அவ்வப்போது திருவாட்டி விஜயா புகுத்துவார்.

சிறுவர்களுக்காக ரங்கோலி பயிலரங்கு ஒன்றை ஆசிய நாகரீக அரும்பொருளகத்தில் 2006ஆம் ஆண்டில் திருவாட்டி விஜயா நடத்தினார்.
சிறுவர்களுக்காக ரங்கோலி பயிலரங்கு ஒன்றை ஆசிய நாகரீக அரும்பொருளகத்தில் 2006ஆம் ஆண்டில் திருவாட்டி விஜயா நடத்தினார். - படம்: விஜயலட்சுமி மோகன்

இந்தியா, ஜப்பான், பெல்ஜியம், ஐக்கிய அரபு சிற்றரசுகள், அமெரிக்கா போன்ற நாடுகளில் நடைபெற்ற அனைத்துலக நிகழ்ச்சிகளிலும் சிங்கப்பூரின் தேசிய தினப் பேரணி, சிங்கே ஊர்வலம் ஆகியவற்றிலும் திருவாட்டி விஜயாவின் ரங்கோலி படைப்புகள் இடம்பெற்றுள்ளன.

கலைகள் வழி மனோவியல் சிகிச்சை அளிப்பதில் (art therapist) முறையான பயிற்சி பெற்ற திருவாட்டி விஜயா, சிறப்புத் தேவையுள்ளோர், மூத்தோர், மனநல சவால்களை எதிர்கொள்வோர் உள்ளிட்டவர்களுக்கு ரங்கோலி பயிலரங்குகளையும் நிகழ்ச்சிகளையும் நடத்துகிறார்.

முதியவர்களுக்காக ரங்கோலி பயிலரங்கு ஒன்றை எஸ்பிளனேடில் 2010ஆம் ஆண்டில் திருவாட்டி விஜயா நடத்தினார்.
முதியவர்களுக்காக ரங்கோலி பயிலரங்கு ஒன்றை எஸ்பிளனேடில் 2010ஆம் ஆண்டில் திருவாட்டி விஜயா நடத்தினார். - படம்: விஜயலட்சுமி மோகன்

“மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, ரங்கோலிக்கு கவனத்தையும் படைப்பாற்றலையும் மேம்படுத்தும் ஆற்றலும் உண்டு. ஒருவர் என்ன உணர்கிறாரோ அதில் கவனம் செலுத்தி கோலம் வரைய முயலும்போது மன நலம் மேம்படுகிறது,” என்றார் திருவாட்டி விஜயா.

தமிழ்நாட்டில் திருச்சியில் பிறந்து திருமணத்திற்குப் பின் மும்பை சென்று, 1992ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் குடியேறியதிலிருந்து, இந்நாட்டிற்கு ஏற்ப ரங்கோலிக் கலையை மாற்றியமைக்கத்து வருகிறார் திருவாட்டி விஜ­யா.

சிங்கப்பூரின் வாழும் மரபுடைமைக்குப் பங்களித்ததற்காகவும் ரங்கோலிக் கலையைப் பாதுகாப்பதில் ஆற்றிய பங்கிற்காகவும் தேசிய மர­பு­டை­மைக் கழ­கத்தின் தொட்­டு­ணர முடி­யாத கலா­சார மர­பு­டைமை அங்­கீ­கா­ர விருதைத் திருவாட்டி விஜயா (ஏப்ரல் 2) பெற்றுக்கொண்டார்.

30,000க்கும் மேற்பட்ட ரங்கோலிகளை உருவாக்கியுள்ள 66 வயது திருவாட்டி விஜயா.
30,000க்கும் மேற்பட்ட ரங்கோலிகளை உருவாக்கியுள்ள 66 வயது திருவாட்டி விஜயா. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ரங்கோலியின் சிகிச்சை நலன்கள் பற்றிய முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் திருவாட்டி விஜயா.

ரங்கோலியின் பலன்களை அறிவியல் ரீதியாக மெய்ப்பிக்கும்போது இக்கலையின் முக்கியத்துவமும் அதன் மீதான ஆர்வமும் அதிகரிக்கும் என்று நம்பும் திருவாட்டி விஜயலட்சுமி, சிங்கப்பூரின் தனித்துவமான ரங்கோலிக் கலையை நிலைநிறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளிலும் அயராது ஈடுபட்டு வருகிறார்.

குறிப்புச் சொற்கள்