சிங்கப்பூர் ரசிகர்களைக் கவர்ந்த ‘ரசா’

கர்நாடக இசைக்குக் கிடைத்த வரவேற்பு

சிங்கப்பூர் ரசிகர்களைக் கவர்ந்த ‘ரசா’

படம் : பரத்வாஜ் பாலாஜி

30 Oct 2026 - 8:14 am

4 mins read

கர்நாடக இசையின் தொன்மை மாறாமல் நவீன இசைக்கருவிகளை இணைத்து அரங்கேறிய ‘ரசா: டிரடிஷன் ரீ-இமேஜின்ட்’ (Rasa: Tradition Re-imagined) இசை நிகழ்ச்சி சிங்கப்பூர் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

முதன்முறையாகச் சிங்கப்பூரின் விக்டோரியா திரையரங்கில் அக்டோபர் 25ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), ‘டைமண்ட் பெர்ல் என்டர்டெயின்மென்ட்’ ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வீணைக் கலைஞர் ராஜேஷ் வைத்யாவும் கர்நாடகக் குரலிசைக் கலைஞர் சந்தீப் நாராயணும் இணைந்து இசை விருந்து படைத்தனர். 

இரவு 7.40 மணியளவில் தொடங்கிய இந்தக் கச்சேரி ஏறத்தாழ இரண்டு மணி நேரத்திற்கு நடைபெற்றது. கிட்டத்தட்ட 500 இசைப்பிரியர்கள் இதில் பங்கேற்றனர்.

கலைஞர்கள் ராஜேஷ் வைத்யா (நடுவில்), சந்தீப் நாராயண் (இடது) இருவருடன் தமிழ் முரசு செய்தியாளர் அகல்யா மணியம்.
கலைஞர்கள் ராஜேஷ் வைத்யா (நடுவில்), சந்தீப் நாராயண் (இடது) இருவருடன் தமிழ் முரசு செய்தியாளர் அகல்யா மணியம். - படம் : செய்யது இப்ராஹிம்

‘ரசா’ இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அக்டோபர் 26ஆம் தேதி ராஜேஷ் வைத்யா, சந்தீப் நாராயணன் இருவரும் தமிழ் முரசுக்குச் சிறப்பு நேர்காணல் அளித்தனர்.

கலைஞர்களின் அனுபவமும் அறிவுரையும் 

சென்னை, பெங்களூரு நிகழ்ச்சிகளுக்குப் பிறகு சிங்கப்பூரில் முதன்முறையாக ‘ரசா’ இசை நிகழ்ச்சியைப் படைத்த இருவருக்கும், இங்குள்ள ரசிகர்களின் இசை ரசனை வியப்பளித்தது.

சிங்கப்பூரில் பெரும்பாலானோர் தமிழ்ப் பாடல்களையே விரும்புவார்கள் என எதிர்பார்த்ததாகக் கூறிய சந்தீப் நாராயண், நிகழ்ச்சியில் இந்திப் பாடல்களுக்கும் ரசிகர்கள் வரவேற்பளித்தது மகிழ்ச்சியளித்ததாகக் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியின் இறுதியில் இடம்பெற்ற ‘என்னப்பனல்லவா’ பாடலுக்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பையும் ராஜேஷ் வைத்யா நினைவுகூர்ந்தார்.

“இசை தொடங்கியவுடன் அதன் ராகத்தை அடையாளம் கண்ட ரசிகர்கள், பாடல் ஒலிப்பதற்கு முன்பே பலத்த கரவோசை எழுப்பினர். அந்த அளவுக்கு ரசிகர்களுக்கு இசையின் அறிமுகமும் பரிச்சயமும் இருந்தது எங்களுக்கு மனநிறைவை அளித்தது என அவர் தெரிவித்தார்.

கர்நாடக இசையைக் கற்கும் இளையர்கள், அங்கீகாரத்தையும் பாராட்டையும் எதிர்பார்ப்பதைவிட இசையின் மீதான ஆர்வத்துடன் தொடர்ந்து பயிலவேண்டும் என்பது கலைஞர்கள் இருவரின் அறிவுரையாக அமைந்தது.

“இசையைக் கற்கத் தொடங்கும் இளையர்கள் பலர், ஓரளவு தேர்ச்சி பெற்றதும் இடையில் ஓய்வு எடுத்துக்கொள்கிறார்கள். இத்தகைய இடைவெளி மீண்டும் இசைப் பயணத்தைத் தொடர்வதில் சிரமத்தை ஏற்படுத்தும்,” என்றார் ராஜேஷ் வைத்யா. 

தபேலா, ‘கீபோர்ட்’, ‘எலக்ட்ரிக் கித்தார்’, ‘டிரம்ஸ்’ எனப் பல இசைக்கருவிகளைக் கையாளும் இளம் கலைஞர்கள் ஒரே குழுவாக இணைந்து நிகழ்ச்சியில் இசையைத் தொகுத்துவழங்கினர். அவர்களில் சிலருக்குக் கர்நாடக இசைப் பயிற்சிப் பின்னணி இல்லாவிட்டாலும், இசையின் உணர்வைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப வாசித்ததாகச் சந்தீப் நாராயண்  விளக்கினார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற ‘ரசா’ நிகழ்ச்சியில், வீணைக் கலைஞர் ராஜேஷ் வைத்யாவும் கர்நாடகக் குரலிசைக் கலைஞர் சந்தீப் நாராயணும் இணைந்து இசை விருந்து படைத்தனர். ‘ரசா’ இசைக் குழுவின் முன்னணி கித்தார் இசைக் கலைஞர் ஜான் பால்.
சிங்கப்பூரில் நடைபெற்ற ‘ரசா’ நிகழ்ச்சியில், வீணைக் கலைஞர் ராஜேஷ் வைத்யாவும் கர்நாடகக் குரலிசைக் கலைஞர் சந்தீப் நாராயணும் இணைந்து இசை விருந்து படைத்தனர். ‘ரசா’ இசைக் குழுவின் முன்னணி கித்தார் இசைக் கலைஞர் ஜான் பால். - படம் : ஆர் கே ஃபோட்டோகிராஃபி

குறிப்பாக, கர்நாடக இசையின் ராகங்களை முறையாக அறிந்திராத முன்னணி கித்தார் கலைஞர் ஜான் பால், சந்தீப் நாராயணன் பாடிய ராகத்தின் இசை நுணுக்கங்களைக் கேட்டு அதற்கேற்பத் தனது பங்களிப்பை வழங்கியதை அவர் பாராட்டினார்.

ரசிகர்களின் பார்வையில் ‘ரசா’

கச்சேரியில் தங்களை மிகவும் கவர்ந்த தருணங்களைப் பற்றி ‘ரசா’வைக் கண்டு களித்த சிலர் பகிர்ந்துகொண்டனர். 

நிகழ்ச்சியில் ராஜேஷ் வைத்யா ஒரு கையை வீணையின்மீது ஊன்றியபடி, தலையை உள்ளங்கையில் சாய்த்துக்கொண்டு, மறுகையால் மின்னல் வேகத்தில் வீணையை வாசித்ததை ரசிகர்கள் நினைவுகூர்ந்தனர் .
நிகழ்ச்சியில் ராஜேஷ் வைத்யா ஒரு கையை வீணையின்மீது ஊன்றியபடி, தலையை உள்ளங்கையில் சாய்த்துக்கொண்டு, மறுகையால் மின்னல் வேகத்தில் வீணையை வாசித்ததை ரசிகர்கள் நினைவுகூர்ந்தனர் . - படம் : பரத்வாஜ் பாலாஜி

“வீணை வாசித்துக்கொண்டிருந்த ராஜேஷ் வைத்யா, ஒரு கையை வீணையின்மீது ஊன்றியபடி, கன்னத்தை உள்ளங்கையில் சாய்த்துக்கொண்டு, மறுகையால் மின்னல் வேகத்தில் வீணையை வாசித்தார். அவரது இயல்பான, நிதானமான பாவனையையும் இசையின் வேகத்தையும் கண்டு அனைவரும் வியந்தனர். பொம்மையுடன் விளையாடும் சிறுவனைப்போல, மேடையில் வீணையுடன் அவர் உற்சாகமாக விளையாடிக்கொண்டிருந்ததைப் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது,”  எனப் பாண்டிச்செல்வி, 59, சிரித்துக்கொண்டே கூறினார்.   

“எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய ‘காற்றினிலே வரும் கீதம்’ பாடலை அவர்கள் முற்றிலும் புதுமையான பாணியில் வழங்கினர். அப்பாடலுக்கு வீணை இசையையும் குரலிசையையும் மாறி மாறி இணைத்த விதம் வியப்பூட்டியது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘ஆ’ என்ற ஆகார ஒலியைத் தொடர்ந்து பயன்படுத்தி, குரலில் ஏற்ற இறக்கங்களுடன் சில நிமிடங்கள் ஆலாபனை செய்த பாடகர் சந்தீப் நாராயண்.
‘ஆ’ என்ற ஆகார ஒலியைத் தொடர்ந்து பயன்படுத்தி, குரலில் ஏற்ற இறக்கங்களுடன் சில நிமிடங்கள் ஆலாபனை செய்த பாடகர் சந்தீப் நாராயண். - படம் : பரத்வாஜ் பாலாஜி

கர்நாடக இசையைப் பயின்றுவரும் சுவாமிநாதன், 29,  “சந்தீப் நாராயணின் குரலிசை என்னை மெய்மறக்கச் செய்தது. குறிப்பாக, ‘ஆ’ என்ற ஆகார ஒலியைத் தொடர்ந்து பயன்படுத்தி, குரலில் ஏற்ற இறக்கங்களுடன் சில நிமிடங்கள் அவர் நிகழ்த்திய ஆலாபனை  அரங்கில் ஆழ்ந்த அமைதியை ஏற்படுத்தி பார்வையாளர்களைக் கட்டிப்போட்டது,” என்றார். 

“இதுபோன்ற இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, அனுபவமிக்க கலைஞர்களின் படைப்புகளைக் கேட்டு ரசிப்பது மிகவும் அவசியம். அது கர்நாடக இசையைக் கற்பவர்களின் ஆக்கபூர்வமான பயிற்சிக்கும் மேடைப் படைப்பாற்றலுக்கும் ஊக்கமளிக்கும்,” எனவும் சுவாமிநாதன் கூறினார். 

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சந்தீப் நாராயணின் குரலில் ‘யுகலா நர்த்தனம்’ பாடல் ஒலிக்க, அதனுடன் அனிருத் இசையமைத்த ‘ராகா ஆஃப் ரிவெஞ்ச்’ எனும் திரைப்படப் பின்னணி இசையை வீணையில் வாசித்து இணைத்தார் ராஜேஷ் வைத்யா. தொடர்ந்து, ‘கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன்’, ‘உன்னைக் காணாது நான் இன்று நான் இல்லையே’ போன்ற கர்நாடக ராகங்களைக் கொண்ட திரைப்படப் பாடல்களை  வீணையில் வாசித்து அசத்தினார் ராஜேஷ் வைத்யா. இத்தகைய புதுமையான பரிமாணத்துடன் கர்நாடகப் பாடல்கள் நிகழ்ச்சியில் இடம்பெற்றது தம்மைப் போன்ற இளையர்களுக்குச் சுவாரசியமாக இருந்தது என வளர்ந்து வரும் பாடகி சுவாதி, 24, பகிர்ந்துகொண்டார். 

“வழக்கமான நிகழ்ச்சிகளுக்கு அப்பால், மக்களுக்கு வேறுபட்ட அனுபவங்களை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ‘ரசா’ நிகழ்ச்சியைச்  சிங்கப்பூரில் ஏற்பாடு செய்தேன். இந்த நிகழ்ச்சிக்குக் கிடைத்த ஆக்ககரமான வரவேற்பு தொடர்ந்து புதிய முயற்சிகளில் ஈடுபட எனக்கு ஊக்கமளிக்கிறது,” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் டைமண்ட் பெர்ல் என்டர்டெயின்மென்டின் நிறுவனர், சிந்துஜா, 24. 

மரபிசையின் தனித்துவத்தை நவீன இசை வடிவங்களுடன் இணைத்த ‘ரசா’, சிங்கப்பூர் இசை ரசிகர்களுக்கு நினைவில் நிற்கும் அனுபவமாக அமைந்தது என்றால் அது மிகையில்லை.

குறிப்புச் சொற்கள்