பாரம்பரிய கர்நாடக இசையை இன்றைய இளந்தலைமுறையினரும் கொண்டாடி மகிழும் வகையில் புதிய பரிமாணத்தில் இடம்பெறவிருக்கிறது ‘ரசா: டிரடிஷன் ரீ-இமேஜிண்ட்’ (Rasa: Tradition Re-imagined) இசை நிகழ்ச்சி.
புகழ்பெற்ற வீணைக் கலைஞர் ராஜேஷ் வைத்யாவும் கர்நாடகக் குரலிசைக் கலைஞர் சந்தீப் நாராயணும் இணைந்து வழங்கும் இசை விருந்து சிங்கப்பூர் விக்டோரியா திரையரங்கில் அக்டோபர் 25ஆம் தேதி இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.
மேடையில் பிறக்கும் இசை ஊற்று
சமூக ஊடகம் வழியாகத் தொடங்கிய இவர்களின் நட்பு, இன்று குரல் கீதமும் வீணை நாதமும் இயல்பாகப் பின்னிப் பிணையும் இசையாக மலர்ந்துள்ளது.
கச்சேரியின் தலைப்பான ‘ரசா’வில் ஒரு ரகசியம் ஒளிந்துள்ளது. இருவரின் பெயர்களின் முதல் எழுத்துகளும் இணைந்ததில் உருவெடுத்த இத்தலைப்பு, இசையின் நவரசங்களையும் வெளிப்படுத்தும் நாதவெளியை உருவாக்கவுள்ளது.
தங்களது இசைப் பயணம் குறித்துத் தமிழ் முரசிடம் பேசிய சந்தீப் நாராயண், “நாங்கள் கர்நாடக இசையின் தனித்துவத்தையோ ராகங்களையோ மாற்றப்போவதில்லை. அதன் படைப்பு முறையில் மட்டுமே புதுமையைப் புகுத்தவுள்ளோம். ‘எலக்ட்ரிக் கித்தார்’, ‘டிரம்ஸ்’ போன்ற நவீன இசைக்கருவிகளை கர்நாடக இசையோடு சேர்க்கும்போது, அதன் அசல் வீச்சு குறையாமல் மேலும் மெருகேறுகிறது. 21ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ற வகையில் இசையை அழகாக வடிவமைத்து வழங்கவுள்ளோம்,” என்றார்.
கர்நாடக இசை என்றால் வயலின், மிருதங்கம் மட்டுமே மேடையில் இடம்பெற வேண்டும் என்ற வழக்கமான பிம்பத்தை உடைத்து, வேகமும் துடிப்பும் நிறைந்த இசை அனுபவத்தை வழங்குவதே ‘ரசா’ நிகழ்ச்சியின் நோக்கம் என ராஜேஷ் வைத்யா கூறினார்.
“சென்னையில் எங்கள் முதல் நிகழ்ச்சி நடைபெற்றபோது, ‘இது “ராக்” கச்சேரியா, கர்நாடக இசை நிகழ்ச்சியா?’ என்று பலரும் வியந்து பாராட்டினர். அதே சங்கமத்தைச் சிங்கப்பூர் ரசிகர்களுக்கும் கொண்டுசேர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்,” என்றார் அவர்.
சிங்கப்பூர் மக்களுக்குப் பாரம்பரிய இசையில் உள்ள ஆர்வம் குறித்துப் பாடகர் சந்தீப் நாராயண் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.
“சில ஆண்டுகளுக்குமுன் நான் இங்கு வந்தபோது, இங்குள்ள ஒரு கோயிலுக்குச் சென்றிருந்தேன். அங்கு நாள்தோறும் நாதசுவரமும் தவிலும் வாசிக்கப்படுவதைக் கேட்டு நான் மிகவும் வியப்படைந்தேன். அன்றாட வழிபாட்டில்கூடப் பாரம்பரியக் கலைகளுக்கு மதிப்பளித்து, பண்பாட்டு வேர்களைப் பாதுகாத்துவரும் சிங்கப்பூர் மக்களின் பக்தி உணர்வும் இசைப்பற்றும் என்னை மிகவும் கவர்ந்தது,” என்று அவர் மனமாரப் பாராட்டினார்.
சிங்கப்பூர் உணவின்மீது காதல்
இசைமீது அளப்பரிய காதல் கொண்ட இந்த வல்லவர்கள் இருவரும் சிங்கப்பூரின் சுவையான உணவுவகைகள் குறித்துப் பேசத் தொடங்கியதும் மிகுந்த உற்சாகமடைந்தனர்.
“எனக்கு உணவுதான் இங்கு மிகவும் பிடிக்கும். சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களுக்கு வரும்போது, அங்குள்ள சாலையோர உணவையும் பலவகையான உணவுக் கலாசாரத்தையும் மிகவும் ரசிப்பேன்,” என்றார் சந்தீப் நாராயண். இம்முறை சிங்கப்பூர் வருகையில், நண்பர்கள் பலரும் பரிந்துரைத்துள்ள புகழ்பெற்ற உணவகங்கள் சிலவற்றில் உணவைச் சுவைத்துப் பார்க்கவும் அவர் ஆவலுடன் இருக்கிறார்.
ராஜேஷ் வைத்யாவைப் பொறுத்தவரை, சிங்கப்பூரில் சோயாவைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுவகைகள் என்றால் கொள்ளைப் பிரியம். மேலும், இங்குள்ள சைவ உணவகங்கள் சில அவர் மனத்தில் நீங்கா இடம்பிடித்துள்ளன.
“நான் உள்ளே நுழைந்ததுமே, அங்குள்ள ஊழியர்களுக்கு நான் என்ன சாப்பிடுவேன் என்பது தெரிந்துவிடும். ‘அண்ணா, வாங்க!’ என்று வரவேற்று, நான் கேட்பதற்கு முன்பே உணவைத் தயாராக வைத்துவிடுவார்கள்,” என்று அவர் சிரித்தபடி சொன்னார்.
இசையின் புரிதலில் மலரும் புதுமை
இருவரின் இசையிலும் விவேகமும் துடிப்பும் வெளிப்படுவதால், அவர்களுக்கிடையே மேடையில் சவால் சுற்று நிகழுமா என்ற எதிர்பார்ப்பு இசைப் பிரியர்களிடையே எழுவது இயல்புதான். அதற்குப் பதிலளித்த ராஜேஷ் வைத்யா, “இது போட்டியன்று; ஒருவரது இசை மற்றொருவருக்கு உற்சாகம் அளிக்கும் தருணம். இந்த இசைப் புரிதலே ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைத் தரும்,” என்றார்.
டைமண்ட் பெர்ல் என்டர்டெயின்மென்ட் ஏற்பாட்டில் நடைபெறும் இந்ந இசை நிகழ்ச்சிக்கு ‘சிஸ்டிக்’ தளம் அல்லது ‘https://www.sistic.com.sg/events/rasa1026’ என்ற இணையத்தளம் வழியாக நுழைவுச்சீட்டுகளைப் பெறலாம்.
