எம் ஹோட்டல் சிங்கப்பூர் சிட்டி சென்டரில் தங்குவோரின் உடைமைகளைத் தூக்க உதவும் ஊழியராக (போர்ட்டர்) பணிபுரியும் ரூபேந்தரன் சில்வராஜன், 34, செய்வதைத் திருந்தச் செய்யும் குணமுடையவர்.
சுற்றுப்பயணிகளுக்கு உள்ளூர் இடங்களைப் பற்றி விளக்குவது, பெரிய குழுக்களின் பயணப்பெட்டிகளைச் சுமுகமாக இடமாற்றுவது, திருப்தியடையாத விருந்தினர்களுக்குப் பொறுமையுடன் உதவுவது என எந்த வேலையாக இருந்தாலும் அதை இவர் திறமையுடனும் நேர்த்தியுடனும் கையாள்கிறார்.
இது, இவருக்கு விருந்தினர்களின் பாராட்டை மட்டுமன்று, சக ஊழியர்களின் நம்பிக்கையையும் பெற்றுத் தந்துள்ளது.
ஒருமுறை, விருந்தினர் ஒருவர் தமது அலுவலக மடிக்கணினியை ஒரு டாக்சியில் மறந்து விட்டுச் சென்றபோது, திரு ரூபேந்தரன் தமது வேலை நேரம் முடிந்த பிறகும், சம்பந்தப்பட்ட டாக்சி நிறுவனத்தைத் தொடர்புகொண்டு, அன்றிரவே உரியவரிடம் மடிக்கணினி திரும்ப வந்து சேருவதை உறுதிசெய்தார்.
மற்றொரு தருணம், ஒரு விருந்தினரின் பயணப்பெட்டி ஹோட்டலுக்கு வந்தடைவதற்கு விமான நிறுவனத்தால் தாமதமானபோது, பொருள்களை விரைவாகக் கொண்டுவர முகவர்களுடன் இவர் ஒருங்கிணைந்து பணியாற்றினார்.
“எந்தக் கோரிக்கையாயினும் அதைப் பூர்த்திசெய்ய நான் எப்போதும் என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன். விருந்தினர்கள் திருப்தியுடன் விடைபெறுவதைப் பார்க்கும்போது எனக்கு மனநிறைவாக இருக்கும்,” என்றார் இவர்.
திரு ரூபேந்தரன் விருந்தோம்பலில் கொண்டிருக்கும் ஆர்வம், மலேசியாவில் தாம் மேற்கொண்ட சுற்றுலா, விருந்தோம்பல் மேலாண்மை பட்டயப் படிப்பால் தீவிரமானதாகக் குறிப்பிட்டார்.
கணினிவழி உரையாடலுக்குப் பதிலாக நேருக்கு நேர் பேசுவதை விரும்பும் இவர், சுற்றுலாத் தலங்களைப் பற்றித் தகவல் கூறுவது, போக்குவரத்து ஏற்பாடுகளில் உதவுவது என வருகையாளர்களுக்கு வழிகாட்டுவதில் மகிழ்ச்சி அடைவதாகச் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
ஜோகூர் பாருவில் வசிக்கும் இவர், தினந்தோறும் சிங்கப்பூர் வர நீண்டநேரம் பயணம் செய்ய வேண்டியிருந்தாலும், வேலைக்கு எப்போதும் உரிய நேரத்திற்கு முன்னரே வந்துவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
தமது சிறந்த சேவையைப் பாராட்டும் வகையில், 2025 ஜனவரியில் தமது பணியிடத்தில் ‘மாதத்தின் சிறந்த ஊழியர்’ விருதை திரு ரூபேந்தரன் பெற்றார். அத்துடன், 2025 தேசிய அளவிலான ‘சிறந்த ஊழியர்’ விருதையும் அண்மையில் பெற்றார்.
“இந்த அங்கீகாரத்தை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. எனக்கு ஆதரவளித்த மேலாண்மைக் குழுவுக்கும் சக ஊழியர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி,” என்று இவர் கூறினார்.
தேசிய தொழிற்சங்க காங்கிரஸ், உணவுப் பானங்கள் மற்றும் சார்புத் தொழிலாளர் சங்கம், சிங்கப்பூர் ஹோட்டல் சங்கம் ஆகியவை இணைந்து தொழிற்சங்கத்தின் இ2ஐ (வேலைவாய்ப்பு, பணியமர்த்தல் நிறுவனம்) ஆதரவுடன் இந்த விருதை வழங்கின.
இவ்வாண்டு மொத்தம் 91 பேர் விருதுபெற்றனர். 1985ல் தொடங்கப்பட்டதிலிருந்து இந்த விருதை ஆக அதிகமானோர் இவ்வாண்டு பெற்றனர்.
இன்று, மின்னிலக்கச் செயல்பாடுகளையும் தானியக்கத்தையும் அதிகம் சார்ந்திருக்கும் விருந்தோம்பல் துறையில், சிறந்த சேவை வழங்க உறுதியுடன் பணியாற்றும் ஊழியர்களையும் நிர்வாகிகளையும் இந்த விருது கௌரவிக்கிறது.
இந்த விருதுபெற்ற மற்றொருவர், ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ் சிங்கப்பூர் சிராங்கூன் ஹோட்டலில் பராமரிப்பு மேற்பார்வையாளராகப் பணியாற்றும் பிரவின் பிரையன் வனநாதன், 30. இவர் பகுதிநேர உதவியாளராகத் தனது பணியைத் தொடங்கி, பின்னர் நிரந்தரப் பணியாளராக நியமிக்கப்பட்டு, தற்போது மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார்.
அவரது மேலாளர், பணியைவிட்டு விலகியபோது, கிட்டத்தட்ட ஓராண்டுக்கு ஹோட்டலின் பராமரிப்புத் துறையை வழிநடத்த திரு பிரையன் தாமாக முன்வந்தார்.
தமக்கு அவ்வளவாக வழிகாட்டுதல் இல்லை என்றாலும், உயர்தரத் தூய்மையை இவர் தொடர்ந்து பின்பற்றினார். இவர் பொறுப்பேற்றதிலிருந்து ஹோட்டலின் தூய்மை மதிப்பெண்கள் தொடர்ந்து 90 விழுக்காட்டுக்குமேல் இருந்து வந்துள்ளன.
அன்றாடப் பணிகளைத் தாண்டி, ஹோட்டலின் நிலைத்தன்மை முயற்சிகளிலும் திரு பிரையன் முக்கியப் பங்கு வகித்து வருகிறார்.
மறுசுழற்சி செயல்முறைகளைச் செயல்படுத்தவும் தமது குழுவிற்கு ஹோட்டலின் பசுமைத் தங்குமிடத் திட்டத்தில் பயிற்சியளிக்கவும் ஊழியர்களின் பராமரிப்புத் தகவல் பரிமாற்றங்களை மின்னிலக்கத் தளத்திற்கு மாற்றவும் இவர் உதவினார்.
ஹோட்டல் அறைகளில் இருக்கும் பிளாஸ்டிக் தண்ணீர் புட்டிகளுக்குப் பதிலாக, குழாய்களில் நீர் வடிகட்டிகளைப் பொருத்துவதற்கும் இவர் முக்கிய பங்கு வகித்தார்.
“நிலைத்தன்மை மிகவும் முக்கியமானது. ஏனெனில், அது சுற்றுச்சூழலைக் காப்பதோடு கழிவுகளையும் குறைக்கிறது. ஆரம்பத்தில் மாற்றங்களுக்குப் பழக சிறிதுகாலம் எடுத்துக்கொண்டாலும், வழிகாட்டுதலுடன் எங்கள் குழுவினர் அதைப் பூரணமாக ஏற்றுக்கொண்டனர்,” என்றார் இவர்.
தமது தலைமைத்துவத் திறனுக்காகவும் புத்தாக்கச் சிந்தனைகளுக்காகவும் திரு பிரையன் ‘2024ன் சிறந்த சக ஊழியர்’ என்ற விருதையும் தமது பணியிடத்தில் பெற்றார்.
“சுத்தமான அறைகளை உறுதிசெய்வது போன்ற சிறிய செயல்கள்கூட விருந்தினர்களின் பார்வையில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்,” என்றார் திரு பிரையன்.