புதுப்பொலிவுடன் ஈசூன் மரபுடைமைப் பாதை

புதுப்பொலிவுடன் ஈசூன் மரபுடைமைப் பாதை

2 mins read
ad31ca35-09ec-47c9-a88c-78cac7d57012
புதிதாகத் திறக்கப்பட்டுள்ள ஈசூன் மரபுடைமைப் பாதை, நினைவலைகளை மீட்டெடுக்க உதவுவதாக முன்னாள் நீ சூன் வாசி திரு அசோகன் ராகவன் கூறினார். - படம்: த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

ஈசூன் வட்டாரத்தின் வரலாற்றையும் அவ்வட்டார மக்களின் வாழ்வியலையும் பறைசாற்றும் வண்ணம் அறிமுகம் கண்டுள்ளது ஈசூன் மரபுடைமைப் பாதை.

முன்னதாக ஈசூன்-செம்பவாங் மரபுடைமைப் பாதையாக 2010ல் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் 2021ல் அப்பாதை மூடப்பட்டது.

தற்போது ஈசூன் வட்டாரத்திற்கெனச் சிறப்பாகத் திறக்கப்பட்டுள்ள பாதையில் 17 மரபுடைமைத் தலங்கள், எட்டுப் பாதைக் குறிப்பான்கள், மக்கள் தாங்களாகவே வட்டாரத்தைச் சுற்றிப் பார்க்க உதவும் இரண்டு வழிகளெனப் பல புதிய அம்சங்கள் அடங்கியுள்ளன.

அந்த மரபுடைமைப் பாதை, 1960களிலும் 70களிலும் நீ சூன் கிராமத்தில் வசித்தோருக்குத் தங்கள் நினைவலைகளை மீட்டெடுக்க நல்லதொரு வாய்ப்பை அமைத்துத் தந்துள்ளதாகத் திரு அசோகன் ராகவன், 74, கூறினார்.

“நான் 1963ல் நீ சூன் தொடக்கப்பள்ளியில் படித்துவந்தபோது திரு லீ குவான் யூ எங்கள் பள்ளிக்கு வந்திருந்தார். அப்போது அவருடன் கைகுலுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது,” என்று முகமலர்ச்சியுடன் அவர் நினைவுகூர்ந்தார்.

“சிங்கப்பூர் மலேசியாவிடமிருந்து 1965ஆம் ஆண்டு பிரிந்தவுடன் திரு லீ குவான் யூ பிரதமராகப் பொறுப்பேற்று முதலில் அதிகாரபூர்வமாகச் சென்றது நீ சூனிலுள்ள ஸ்ரீ நாராயண மிஷனுக்குத்தான்,” என்றார் அவர்.

அத்தகைய வரலாற்றுச் சிறப்புடைய வட்டாரத்திற்கு அந்தப் புதிய பாதை அங்கீகாரமளிக்கும் வண்ணம் அமைந்துள்ளதாக அவர் கூறினார்.

“முன்பு, இந்த வட்டாரம் முழுதும் அத்தாப்பு வீடுகளாகத்தான் இருக்கும். சாலைகளிலும் தெருக்களிலும் தெருவிளக்கு இல்லாமல் இருண்டுடிருக்கும்.

“காலப் போக்கில், இங்குப் பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. நான் பார்த்து வளர்ந்த பல இடங்களும் அம்சங்களும் இப்போது இங்கு இல்லை,” என்றார் திரு அசோகன்.

1970களில் நீ சூனிலிருந்து கிளமென்சியூ அவென்யூவிற்கும் அங்கிருந்து பின்னர் அங் மோ கியோவிற்கும் இடம்பெயர்ந்தாலும், நீ சூனின் நினைவுகளை என்றும் தம் மனத்திலிருந்து அழிக்க முடியவில்லை என்று அவர் பகிர்ந்துகொண்டார்.

இன்றும் அவர் தமது சிறுவயது நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதுடன் அவ்வப்போது நீ சூன் வட்டாரத்தில் நடைப்பயணங்களும் மேற்கொள்கிறார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்