பாரம்பரிய வணிகங்களின் வட்டார வளர்ச்சி: பிரதமர் லாரன்ஸ் வோங்

பாரம்பரிய வணிகங்களின் வட்டார வளர்ச்சி: பிரதமர் லாரன்ஸ் வோங்

2 mins read
722349e1-b783-4c95-9f4e-93c9f6da10b3
மலாய் பண்பாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் லாரன்ஸ் வோங். - படம் : தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு
Google News Preferred Icon

மலாய் சமூகத்தின் பண்பாட்டுப் பெருமையையும் உள்ளூர் பாரம்பரிய வணிகங்கள் வட்டார அளவில் அடைந்து வரும் வெற்றியையும் பிரதமர் லாரன்ஸ் வோங் இவ்வாண்டுக்கான தமது தேசிய தினப் பேரணி உரையில் பாராட்டியுள்ளார்.

கடந்த ஓராண்டாக தாம் மலாய் சமூகத்துடன் இணைந்து நோன்பு துறப்பு நிகழ்வுகளிலும் பல்வேறு பண்பாட்டு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டதாகக் குறிப்பிட்டார். மேலும், மலாய் மொழியைக் கற்றுக்கொள்ள தமக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வரும் மலாய் சமூகத்தினருக்குத் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார் பிரதமர்.

ஆழமான வேர்களும் தேசிய அடையாளமும்

மறுசீரமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்ட மலாய் மரபுடைமை நிலையத்தையும் கம்போங் கிளாம் பகுதியைச் சுற்றி முதன்முறையாக நடைபெற்ற கலாசாரப் பேரணியையும் பார்வையிட்டபோது, மலாய் சமூகத்தின் பாரம்பரியப் பெருமிதத்தை நேரில் காண முடிந்ததாகப் பிரதமர் தமது உரையில் கூறினார்.

கம்போங் கிளாம் பகுதி நமது வட்டாரத் தொடர்புகளையும் பகிரப்பட்ட வரலாற்றுப் பாரம்பரியத்தையும் நினைவூட்டும் சிறப்புமிக்க இடமாகும் என்றும் அவர் சுட்டினார். மலாய் மொழி சிங்கப்பூரின் தேசிய மொழியாகவும் சிங்கப்பூர் தேசிய உறுதிமொழியின் ஓர் அங்காகவும் சிங்கப்பூர் ஆயுதப் படையின் அதிகாரபூர்வ கட்டளை மொழிகளில் ஒன்றாகவும் திகழ்கிறது. 

சிங்கப்பூர் அமைந்துள்ள வட்டாரச் சூழலில், சிங்கப்பூரர்கள் மலாய் மொழியைக் கற்றுக்கொள்வதும் மலாய்ப் பண்பாட்டைப் புரிந்துகொள்வதும் அண்டை நாடுகளுடனான உறவை வலுப்படுத்தி, புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்க உதவும் என்று அவர் மேலும் பகிர்ந்துகொண்டார்.

‘பொண்டோக் அபாங்’

பாரம்பரியத் தொடர்புகள் எவ்வாறு புதிய வணிகச் சந்தைகளைத் திறக்கின்றன என்பதற்கு ‘பொண்டோக் அபாங்’ (Pondok Abang) நிறுவனத்தைச் சான்றாகப் பிரதமர் குறிப்பிட்டார்.

திரு. அப்துல் ரஹ்மான் யாத் அலி என்பவரால் ஒரே ஒரு சிறு உணவுக் கடையாக அது தொடங்கப்பட்டது. சமையலின் தனித்துவமான சுவையால் வணிகம் விரிவடைந்து, பல கிளைகள் கொண்ட மத்தியச் சமையலறையுடன் கூடிய உணவு விநியோக நிறுவனமாக உருவெடுத்தது.

தற்போது அவரது மகன் ஹசன் அந்நிறுவனத்தை வழிநடத்துகிறார். மரபுசார் மலாய் உணவுகளுக்கான தேவை, வட்டார அளவில் அதிகரிப்பதை உணர்ந்து, அதனை முன்னணி ஹலால் உணவு தயாரிப்பு நிறுவனமாக அவர் மாற்றியுள்ளார். ‘பொண்டோக் அபாங்’ தற்போது புருணை மற்றும் மலேசியாவிலும் தனது சேவையைத் தொடங்கியுள்ளதோடு, மேலும் பல அண்டை நாட்டுச் சந்தைகளுக்கும் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

வாழ்க்கைச் செலவின உயர்வு, வேலைவாய்ப்புகள், பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த மக்களின் கவலைகளைப் புரிந்துகொள்வதாகத் தெரிவித்த பிரதமர், ‘பகிரப்படும் சுமை, பாதியாகக் குறையும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப, உலகளாவிய மாற்றங்களையும் சவால்களையும் அனைவரும் ஒன்றாக இணைந்து எதிர்கொண்டு வெற்றிபெறுவோம் என்று உறுதியளித்தார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்சமூகம்மலாய்தேசிய தினப் பேரணி உரை 2026பிரதமர்National Day Rally 2026