லிட்டில் இந்தியா வட்டாரத்தில் ஆண்டுதோறும் கேம்பல் லேனிலும் பெர்ச் ரோட்டிலும் அமைக்கப்படும் தீபாவளிச் சந்தைகள், விழாக்காலத்தைக் குறிக்கும் சின்னங்களாகவே மாறிவிட்டன.
இருப்பினும், உணவுத் தயாரிப்புச் செலவு, வாடகைக் கட்டணம், மக்கள் நடமாட்டம் ஆகியவை சந்தைகளைப் பாதிக்கும் அம்சங்களாக இருந்து வருகின்றன. இது குறித்து கடைக்காரர்களும் வாடிக்கையாளர்களும் தங்களின் கருத்துகளைத் தெரிவித்தனர்.
செலவுகள் ஏற்ற இறக்கம்
சர்க்கரை, ‘சாக்லெட்’, காஃபி போன்றவற்றின் விலையேற்றத்தால் பலகாரங்களின் விலை பொதுவாக உயர்ந்திருப்பதாக ‘சிஎஸ்ஜி-சிஐஎம்பி’ நிதி அமைப்பின் பொருளியல் ஆய்வாளர் சோங் செங் வூன் தெரிவித்தார்.
“சமையல் எண்ணெய்யின் விலை சற்று குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக உணவு வகைகளின் விலையேற்றம் மெதுவடைந்து வருகிறது. இறைச்சி, கோழி, முட்டை, மீன் விலை கடந்த ஆண்டு உச்சத்தை எட்டிய பிறகு இந்த ஆண்டு சற்று குறைந்து வருகிறது,” என்றார் திரு சோங்.
உயர்ந்துவந்த அரிசி விலையும் ரொட்டி விலையும் சற்று நிலைப்பெற்றுள்ளதையும் திரு சோங் கூறினார்.
உணவு தொடர்பான தளவாடச் செலவுகள் ஏற்ற இறக்கமாக இருப்பதையும் சுட்டிய திரு சோங், அண்மையில் இந்தச் செலவுகளின் விலையேற்றம் உணவு விலையையும் பாதித்திருக்கக்கூடும் என்றார்.
கப்பல் மற்றும் விமான இறக்குமதிக்கான தளவாடச் செலவுகள் 30 முதல் 40 விழுக்காடு பெருகியுள்ளதாகவும் கடைக்காரர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையே, சர்க்கரையின் விலையேற்றத்தைச் சமாளிப்பது இவ்வாண்டு சவாலாக இருந்ததாக கேம்பல் லேன் சந்தையில் 10 ஆண்டுகளாக தீபாவளிப் பலகாரங்களை விற்றுவரும் ‘பாவாஸ் டெலிகசிஸ்’ கடையின் உரிமையாளர் ஃபாத்திமா பீவி கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
மூலப் பொருள்களின் விலை, ஆண்டுக்காண்டு உயர்ந்தாலும் விற்கும் பொருள்களின் விலையைத் தங்களால் உயர்த்த முடியவில்லை என்று குறிப்பிட்டார்.
சமூக ஊடகங்கள் மூலம் விற்பனை செய்து வருவதாகவும் கூறிய திருவாட்டி ஃபாத்திமா, வீட்டுத் தாய்மார்களும் முதியவர்களும் சந்தைக்கு நேரில் வந்து பலகாரங்களை வாங்குவதையே விரும்புவதாகக் கூறினார்.
“எங்களுக்கு நன்கு பழக்கப்பட்ட வாடிக்கையாளர்கள், குறிப்பாக வயதானவர்கள், விலை ஏற்றத்தால் அதிருப்தி அடைவதால் அவர்களுக்காக நாங்கள் விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது,” என்றார் திருவாட்டி ஃபாத்திமா.
மூல உணவுப் பொருள்களின் விலையேற்றத்தால் வர்த்தகச் செலவும் அதிகரித்துவிட்டதாக கேம்பல் லேனில் மற்றொரு பலகாரக் கடையான ‘லோட்டஸ் மென்டல்’ கடையின் உரிமையாளர் ரமேஷ் கூறினார்.
“ஆண்டுக்காண்டு சூழல் மேலும் சவால்மிக்கதாக உள்ளது. எனக்குத் தெரிந்தவர்களை நம்பி, என் வர்த்தக உறவுகளை வளர்த்தவாறு வியாபாரத்தைத் தக்க வைத்துக்கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.
விலையேற்றம் இருந்தபோதும் விழாக்காலத்தில் பண்டிகைக்காகச் செலவிட விரும்புவதை பெர்ச் ரோடு வாடிக்கையாளர் தனேஷ் குமார், 39, கூறினார். ஆண்டுக்கு ஒருமுறை இந்த விழா வருகிற பட்சத்தில் தாம் சிக்கனத்தைக் கருதவில்லை என்றார் அவர்.
இதற்கு மாறாக, கேம்பல் லேன் சந்தையில் பலகாரங்களை வாங்க வந்த அலுவலக நிர்வாகப் பணியாளர் டெய்சி, 63, விலையேற்றத்தின் தாக்கத்தைத் தாம் உணர்வதாகக் கூறினார்.
“பலருக்காகவும் இனிப்புப் பலகாரம் வாங்கும் பழக்கம் எனக்கு உள்ளதால் வாங்கும் அளவைக் குறைக்க முடியவில்லை. ஆயினும், விலை குறைவான பலகாரங்களைத் தேர்ந்தெடுத்து இயன்றவரை செலவைக் குறைக்க முயல்கிறேன்,” என்றார் திருவாட்டி டெய்சி.
வாடகை அதிகம், கூட்டம் குறைவு
கேம்பல் லேன் தீபாவளிச் சந்தையில் கிட்டத்தட்ட 20 கடைகள் உள்ளதாக லிஷா தலைவர் ரகுநாத் சிவா கூறினார்.
பெர்ச் ரோடு சந்தையில் ஏறத்தாழ 200 கடைகள் இருப்பதாகவும் சந்தையின் குத்தகையாளர்களான ‘எஸ்ஜி நைட் பசார் பிரைவட் லிமிட்டட்’ தெரிவித்தது. கிட்டத்தட்ட அனைத்து கடைகளும் வாடகைக்கு விடப்பட்டதாக அது கூறியது.
இதற்கிடையே, வருகையாளர்கள் இந்த முறை குறைந்திருப்பதாக தீபாவளிச் சந்தைக் கடைக்காரர்கள் சிலர் வருத்தத்துடன் கூறினர். அத்துடன், வாடகை மற்றும் மின்சார செலவுகள் ஆகியவற்றால் கடைக்கான இடங்கள் பல, குத்தகைக்கு எடுக்கப்படாமல் காலியாக உள்ளன.
27 ஆண்டுகளுக்கும் மேலாக பெர்ச் ரோட்டில் ஆடைக் கடை நடத்தி வரும் ஜெய் பிரகாஷ், 62, வெளிநாட்டினரின் வருகை அதிகளவில் சரிந்திருப்பதாகக் கூறினார்.
“மலேசியர்கள், இந்தோனீசியர்கள் பலர் இங்கு வந்தனர். எப்போதும் அவர்கள் ஏதாவது வாங்கிவிட்டுச் செல்வார்கள். வியாபாரம் முன்பு பரபரப்பாக இருந்த காலகட்டத்தில் பிற்பகல் இரண்டு மணி நேரத்திலும் கடைக்காரர்களான எங்களுக்கு அதிக வேலை இருக்கும். இப்போது நாங்கள் மாலை நான்கு, ஐந்து மணிக்கும் வேலை அதிகமின்றி வாடிக்கையாளர்களுக்காகக் காத்திருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.
முன்பு நாள்தோறும் 3,000 முதல் 4,000 வரையில் இருந்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, இப்போது சுமார் 300 ஆகிவிட்டதாக பாகிஸ்தானிலிருந்து 30 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூர் வந்த திரு ஜெய் பிரகாஷ் கூறினார்.
“வாடகை 6,000 வெள்ளி வரை உயர்ந்துள்ளது. என் துணிகள் அத்தனைக்கும் இரண்டு கடைகளுக்கான இடம் தேவைப்படுகிறது. குறைந்தது 12,000 வெள்ளி கட்டுகிறேன். ஆனால், வருவாய் அதிகம் இருக்காது என்ற கவலை,” என்று அவர் கூறினார்.
தீபாவளி மின் விளக்குகளையும் ஆபரணங்களையும் விற்கும் கடை உரிமையாளர் நிர்மலா தேவி, 6,000 வெள்ளி வாடகை மிகவும் அதிகம் என்றார்.
“அத்துடன் கம்பிச் சட்டங்களுக்கு 300 வெள்ளி, மின்சார வசதிக்கு 500 வெள்ளி ஆகியவற்றையும் கட்டுகிறேன். ஓர் உணவு கடைக்குத் தேவைப்படும் மின்சாரத்தைவிட வெகு குறைவான அளவில் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறேன், ஆனால் எந்த வேறுபாடுமின்றி நானும் அதே கட்டணத்தைக் கட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாதது,” என்று அவர் கூறினார்.
கடைக்காரர்களுக்குச் செலவு அதிகரித்தாலும் வாடிக்கையாளர்கள் அதிக மனநிறைவை உணர்வதில்லை என்று தம் மனைவியுடன் பெர்ச் ரோடு சந்தைக்குச் சென்றிருந்த வி. பசுபதி, 71, தெரிவித்தார்.
“பெர்ச் ரோடு சந்தைக்குள் போகும்போது ஒரே வெப்பம். இவ்வளவு பெரிய கூடாரத்தில் ஒரு சில காற்றாடிகளாவது பொருத்தியிருக்கலாம். இப்படி ஏற்பாடு செய்தால் வாடிக்கையாளர்கள் அதிக நேரம் இருக்க விரும்பாமல் வெளியேறிவிடுவார்கள்,” என்று ஓய்வுபெற்ற திரு பசுபதி கூறினார்.
அதிகரித்துவரும் வர்த்தகச் செலவால் கடைகளுக்கான வாடகை விலை 20 விழுக்காடு வரை குறைக்கப்பட்டதாக லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மரபுடைமைச் சங்கத்தின் தலைவர் ரகுநாத் சிவா தெரிவித்தார்.
ஜோகூரில் வியாபார நிலவரம்
ஜோகூர் பாருவில் டாமாய் ஜெயா, புத்தரி வங்சா, உலு திராம், மாசாய் எனத் தற்போது கிட்டத்தட்ட 20 தீபாவளிச் சந்தைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மலேசிய சுங்கத்துறைக்கு ஆக அருகில் இருக்கும் ஜாலான் உங்கு புவானிலுள்ள ஸ்ரீ ராஜமாரியம்மன் கோயிலுக்கு அருகில் தற்போது அமைந்துள்ள தீபாவளிச் சந்தை, சிங்கப்பூரர்கள் அதிகம் செல்லும் சந்தைகளில் ஒன்றாகும்.
வாடகை விலை அங்கு 3,500 ரிங்கெட்டிலிருந்து (S$1068.50) 4,000 ரிங்கெட்டுக்கு கூடியிருப்பதாக அந்த வட்டாரத்தில் 15 ஆண்டுகளாக இயங்கி வரும் ‘எட்வர்ட் குக்கிஸ்’ கடை உரிமையாளர் உஷா மாலதி தெரிவித்தார்.
வர்த்தகம் அடுத்து வரும் வாரங்களில் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்ப்பதாக அதே சந்தையில் 15 ஆண்டுகள் செயல்படும் ‘அனிஷ் என்டர்பிரைஸ்’ ஆபரணக் கடை உரிமையாளர் சந்திரன் கிருஷ்ணன், 58 தெரிவித்தார்.
“எங்கள் வாடிக்கையாளர்களில் 75 விழுக்காட்டினர் சிங்கப்பூரர்கள். தீபாவளிக்கு முன் இன்னும் அதிக சிங்கப்பூரர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்,” என்று அவர் கூறினார்.
தாம் 4,500 ரிங்கிட் வாடகை செலுத்தியதாகக் கூறினார் ‘அஷயா கொலெக்ஷன்’ ஆடைக்கடையின் உரிமையாளர் பாக்கியவதி கூறினார். பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் வியாபாரம் செய்யும் பட்சத்தில் வாடகையை ஏற்றாமல் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்றார் அவர்.
ஜோகூர் பாருவில் இளம் வியாபாரிகள் பலர் ‘டிக்டாக்’ போன்ற தளங்களைப் பயன்படுத்தி தீபாவளிப் பொருள்களை விற்றுவருவதாகக் குறிப்பிட்ட பாக்கியவதி, மின்னிலக்கத் தளத்தில் அவர்களுடன் போட்டியிட முடியவில்லை என்றார். ஆயினும், கடைக்கு நேரே சென்று வாங்குவதில் ஒரு தனிச் சிறப்பு உண்டு என்றார் அவர்.