செய்தியாளர் குரல்: பண்டிகைகள் கொண்டாடுவதில் புரிந்துணர்வு தேவை

செய்தியாளர் குரல்: பண்டிகைகள் கொண்டாடுவதில் புரிந்துணர்வு தேவை

1 of 4
படம்: ஆர்ச்சர்ட் சாலை வர்த்தகச் சங்கம்
படம்: த.கவி
படம்: ஆர்ச்சர்ட் சாலை வர்த்தகச் சங்கம்
படம்: ஆர்ச்சர்ட் சாலை வர்த்தகச் சங்கம்

07 Nov 2026 - 5:40 am

2 mins read

ஆர்ச்சர்ட் சாலைக்குச் சென்றால் கிறிஸ்துமஸ் பண்டிகை வந்துவிட்டதோ என்ற எண்ணம் தோன்றக்கூடும்.

கட்டட முகப்புகளில் வண்ணமயமான கிறிஸ்துமஸ் படங்கள் மிளிர்கின்றன. வணிக வளாகங்களில் கிறிஸ்துமஸ் பாடல்கள் ஒலிக்கின்றன. அதிகாரபூர்வமான சாலை ஒளியூட்டு விழா நவம்பர் 17ஆம் தேதிதான் நடைபெறவுள்ளது என்றாலும் அதற்கான ஏற்பாடுகள் இப்போதே தொடங்கிவிட்டன.

பண்டிகைகளை பலநாள் முன்கூட்டியே கொண்டாடுவது உற்சாகமானது, தொழில்துறைக்கு உவப்பானது என்றபோதும், இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான ஓர் அம்சம் உள்ளது.

ஞாயிற்றுக்கிழமைதான் (நவம்பர் 8) தீபாவளி.

தீபாவளிக்கு முன்பே கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் பொதுவெளியில் இடம்பெறுவது புதிதன்று. ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகை ஆண்டிறுதி வணிகக் கொண்டாட்டங்களின் நிழலில் மறைந்துவிடுகிறதா என்ற அதிருப்தியைப் பொதுமக்கள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வெளிப்படுத்துவது வழக்கமாகிவிட்டது.

வெவ்வேறு பண்டிகைகள் அடுத்தடுத்து வந்த சூழல்களைச் சிங்கப்பூர் இதற்கு முன்பும் எதிர்கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, 2004 முதல் 2006ஆம் ஆண்டு வரை தீபாவளியும் நோன்புப் பெருநாளும் சில நாள்கள் இடைவெளியில் வந்தபோது, ‘தீபராயா’ என்ற பெயரில் இரு பண்டிகைகளும் இணைந்து கொண்டாடப்பட்டன. அப்போது அலங்காரங்கள் ஒரே காலகட்டத்தில் இடம்பெற்றது இயல்பானதே.

ஆனால், இவ்வாண்டு நவம்பர் 8ஆம் தேதி இடம்பெறும் தீபாவளிக்கும் கிறிஸ்துமஸுக்கும் இடையே கிட்டத்தட்ட ஒன்றரை மாதத்துக்கும் மேலான இடைவெளி உள்ளது. அப்படியிருக்க, தீபாவளி வருவதற்கு முன்பே கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான ஏற்பாடுகள் முன்னுரிமை பெறும்போது, இரு பண்டிகைகளுக்கும் சமமான முக்கியத்துவம் வழங்கப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.

வணிக நிறுவனங்களுக்கு கிறிஸ்துமஸ் காலம் மிக முக்கியமான வாய்ப்பாக இருப்பதால், அதற்கான ஏற்பாடுகளில் அதிக முதலீடு செய்யப்படுவது வழக்கம். ஆனால், ஒரு பண்டிகையின் வணிக மதிப்புதான் அதன் கலாசார முக்கியத்துவத்தையும் பொது வெளியில் அதற்குக் கிடைக்கும் இடத்தையும் தீர்மானிக்க வேண்டுமா?

சிங்கப்பூரில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் இடம்பெறுவதை மறுக்கமுடியாது. ஆண்டுதோறும் லிட்டில் இந்தியா பண்டிகைக் கோலத்தில் ஒளிர்கிறது. தீவு முழுவதும் உள்ள சமூக மன்றங்களும் இந்தியர் நற்பணிச் செயற்குழுக்களும் கொண்டாட்டங்களை முன்னெடுக்கின்றன.

எனவே, லிட்டில் இந்தியாவில் தீபாவளி ஒளியூட்டு இருக்கும்போது, ஆர்ச்சர்ட் சாலை கிறிஸ்துமசுக்கு மட்டுமே உரியதாக இருப்பதில் என்ன தவறு என்று சிலர் வாதிடலாம்.

ஆனால், ஆர்ச்சர்ட் சாலை என்பது ஒரு சாதாரண வணிக வீதியன்று. அது சிங்கப்பூரின் தேசிய அடையாளங்களில் ஒன்றாகும்.

சிறுபான்மைச் சமூகங்களின் பண்டிகைகளைக் குறிப்பிட்ட வட்டாரங்களுக்குள் மட்டுமே சுருக்கிவிடக்கூடாது. தேசிய அளவில் அனைவருக்குமான பொது இடங்கள், ஒரு பண்டிகைக்கு மட்டும் முன்னுரிமை அளித்துவிட்டு மற்றொன்றை ஓரங்கட்டுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தக்கூடாது.

கிறிஸ்துமஸ் சிங்கப்பூரில் பரவலாகக் கொண்டாடப்படுவதைப்போல, தீபாவளியையும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கான கொண்டாட்டமாக மட்டும் பார்க்காமல், சிங்கப்பூரர்கள் அனைவரும் அறிந்து, பங்கேற்று, மகிழும் பண்டிகையாக மேலும் விரிவுபடுத்தலாம்.

ஒரு பண்டிகைக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காக மற்றொரு பண்டிகையின் முக்கியத்துவத்தைக் குறைக்க வேண்டியதில்லை. அனைத்துப் பண்டிகைகளுக்கும் உரிய இடத்தையும் மதிப்பையும் சமமாக வழங்குவதில்தான் சிங்கப்பூரின் பன்முகப் பண்பாட்டுக்கான உண்மையான பெருமை அடங்கியுள்ளது.

கிறிஸ்துமஸ் அலங்காரங்களுக்கு இடையே தீபாவளி விளக்குகளின் ஒளி மங்காமலிருப்பதை உறுதிசெய்வது முக்கியமல்லவா?

குறிப்புச் சொற்கள்
தீபாவளிதீபாவளி 2026கிறிஸ்துமஸ்ஒளியூட்டுகொண்டாட்டம்பண்பாடுசிங்கப்பூர்