மாணவர்களின் சிந்தனையைத் தூண்டி, செயல்பாட்டை ஊக்குவித்த ஆய்வுப் போட்டி

மாணவர்களின் சிந்தனையைத் தூண்டி, செயல்பாட்டை ஊக்குவித்த ஆய்வுப் போட்டி

3 mins read
e2ff568b-06b9-4e6e-a9c8-cdd56ea098fe
மொழியைக் காக்க எதிர்காலத் திட்டங்களை விளக்கிய மாணவர்கள் செல்வம் பிரினீத், குமார் இன்பராம். - படம்: காமாட்சி

தமிழ் மொழியை வாழும் மொழியாக வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அதற்கு இளம் தலைமுறையினர் ஆற்ற வேண்டிய கடமைகளை உள்ளடக்கிய ஆய்வுகளை மாணவர்கள் பொதுமக்கள்முன் படைத்தனர்.

தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக, மொழியின் மீதான ஈடுபாட்டை அதிகரிக்கும் வண்ணம், அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம், ‘ஈடுபாட்டுடன் பாடுபடுவோம்’ எனும் கருப்பொருளில் ஆய்வுகளைப் படைக்கும் போட்டியை நடத்தியது.

‘மொழியை இழந்தோமெனில் முகவரி இழந்தோம்’, ‘என்ன செய்யப்போகிறோம்’, ‘தமிழுக்கு என் கடமை’, ‘சமூக ஊடகங்களில் தொடர் உள்ளீடு’ ஆகிய தலைப்புகளில் வெற்றிபெற்ற மாணவர்கள் தங்கள் ஆய்வுகளைப் படைத்தனர்.

உயர்நிலை 1,2, உயர்நிலை 3,4, தொடக்கக் கல்லூரி என மூன்று பிரிவுகளிலும் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா ஏப்ரல் 19ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் நடைபெற்றது.

முதற்கட்டமாக, மார்ச் 29ஆம் தேதி நடைபெற்ற போட்டியில், 16 பள்ளிகளைச் சேர்ந்த 74 மாணவர்கள் பங்கேற்றனர். ஆறு நடுவர்கள்முன் மாணவர்கள் தங்கள் ஆய்வுகளைப் படைத்தனர்.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்குப் பற்றுச்சீட்டுகள் பரிசாக வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர் முனைவர் சுப. திண்ணப்பன், அன்றாடம் தமிழ் முரசு நாளிதழைப் படித்து, உலக நடப்புகளைத் தமிழில் தெரிந்துகொள்வதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

சிறப்பு விருந்தினர்கள், சிறப்புப் பேச்சாளர்களுடன் ஏற்பாட்டுக் குழுவினர்.
சிறப்பு விருந்தினர்கள், சிறப்புப் பேச்சாளர்களுடன் ஏற்பாட்டுக் குழுவினர். - படம்: காமாட்சி

தொடர்ந்து, அன்றாடம் ஒரு குறள் படித்தல், வாரம் ஒரு சொற்பொழிவைக் கேட்டல், மாதம் ஒரு தமிழ் நூல் வாசித்தல், ஆண்டுக்கு ஒரு தமிழ்க் கூட்டத்தில் பங்கேற்றல் ஆகியவை மூலம் தொடர்ந்து மொழியுடன் ஈடுபட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

ஆண்டுதோறும் இந்நிகழ்ச்சியில் ஒரு சிறப்புப் பேச்சாளரின் உரையும் இடம்பெறும். அவ்வகையில், இவ்வாண்டு த.ஸ்டாலின் குணசேகரன் சிறப்புரையாற்றினார்.

“போட்டியாக மட்டுமல்லாமல், மாணவர்கள் ஆராய்ச்சி செய்து, அதனை நடைமுறைப்படுத்தும் நோக்கில் ஆய்வுப் போட்டியைத் தொடர்ந்து 12 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். இது, 13வது ஆண்டு. குறிப்பாக, கடந்த ஆண்டு செயற்கை நுண்ணறிவு குறித்து படைத்த மாணவர் க.ஹரிஹரசுதன், இவ்வாண்டு ‘தமிழுக்கு என் கடமை’ எனும் ஆய்வைப் படைத்ததுடன், மொழி சார்ந்த இணையத்தளத்தை வடிவமைத்துள்ளார். இது பெருமையளிக்கும் ஒன்று,” என்றார் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்க வாழ்நாள் உறுப்பினரும் ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான சண்முகம் அபிராமி, 46.

உயர்நிலை 1, 2ஆம் பிரிவில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவர்கள் செல்வம் பிரினீத், குமார் இன்பராம், “இளையர்கள் தமிழில் பேசுவதன் அவசியத்தை வலியுறுத்தி எங்கள் படைப்பு அமைந்திருந்தது. எங்கள் ஆசிரியரின் உதவியுடன் தயார் செய்தோம். ஆங்கிலத்தில் இருந்த பல தரவுகளைத் தமிழில் மொழிமாற்றம் செய்து பயன்படுத்தினோம். சமூகத்தில் விழிப்புணர்வை விதைக்க முயன்றோம்,” என்றனர்.

“இப்போட்டிக்காகக் கலந்துரையாடி, தயாரித்துப் பயிற்சி செய்தோம். தமிழ் மொழி நீடித்திருப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் அதனை மாணவர்கள் எவ்வாறு காக்கலாம் என்பது குறித்தும் சொன்னோம். தாய்மொழியைப் புறக்கணித்தால் நமது அடையாளம் எவ்வாறு பாதிக்கப்படும் என்றும் விளக்கினோம். அதற்காக எடுக்கப்படும் பல முயற்சிகளையும் எடுத்துக்காட்டினோம்,” என்றனர் உயர்நிலை 3,4ஆம் பிரிவில் பங்கேற்ற ஜெயபாலன் நரேன்ராம், பிரத்யுன் அசோக்ராஜ்.

தமது மகன் கதிர் இனியன் இப்போட்டியில் பங்கேற்று, அதனால் பல புதிய சொற்களையும் தகவல்களையும் கற்றதில் மகிழ்ச்சி என்று கூறினார். கோகிலவேணி வடிவேல், 39. தாமும் அவருடன் இணைந்து கற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்