மனத்தளவில் அதிக அழுத்தம், நிதிச்சுமை, குடும்பக் கட்டமைப்பின் சரிவு என அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து இதயத் துடிப்பையே தடை செய்தபோதிலும் வலிமையைத் திரட்டி, தமக்காக, தம் குடும்பத்துக்காக, சமூகத்துக்கு எடுத்துக்காட்டாக வாழ்வதற்காக மீண்டெழுந்துள்ளார் பிரேம்நாத் சுப்பிரமணியம், 44.
“வாழ்வில் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க முடியாது. தொடர்ந்து நேர்மறை மாற்றங்களில் கவனம் செலுத்தி, உழைத்து வந்தால், ஒருநாள் நினைத்தபடி வாழ்க்கை மாறும் என்பதற்கு நானே சான்று,” என்றார் 40 வயதுக்கு மேல் புதிய கல்வி பயின்று அதில் சிறந்து விளங்கியதுடன், மீள்திறனுக்கான விருதும் வென்றுள்ள அவர்.
கடந்த 2023ஆம் ஆண்டு, தமது 42 வயதில் சிங்கப்பூர் நிர்வாகக் கல்விக்கழகத்தில் ‘எம்பிஏ’ படிப்பில் சேர்ந்து, உன்னதத் தேர்ச்சி பெற்றுள்ள பிரேம், மீள்திறனுக்கான ‘சிம்’ தலைவர் விருதும் (SIM Chairman’s Award for Resilience) பெற்றுள்ளார்.
முதுகலைப் பட்டம், புவிசார் நுண்ணறிவு, செயற்கைக்கோள் படிமவியல், பகுப்பாய்வுத் துறையில் பணி, குடும்பம், குழந்தை என எதுவும் அவருக்கு எளிதாகக் கிடைத்துவிடவில்லை.
அடுத்தடுத்து விழுந்த அடிகள்
29 வயது இளையராக, பொறியியல் வல்லுநராக வேண்டும் எனும் கனவை நோக்கிப் பயணித்துகொண்டிருந்தபோது தடையாய் வந்தது தந்தையின் பணியிட விபத்து.
“தந்தையின் வருமானத்தில் தடையின்றிச் செயல்பட்டு வந்த சாதாரணக் குடும்பத்திற்கு சிரமமென்றால் என்னவென்று உணர்த்திய காலகட்டம் அது,” என நினைவுகூர்ந்தார் பிரேம்.
தமது படிப்பை இடைநிறுத்தம் செய்துவிட்டு குடும்பத்துக்கு உதவ வேலைக்குச் சென்றார். நிலமை சற்றே சரியாக, படிப்பை முடித்துப் பணியில் சேர்ந்தார்.
குடும்பம் மீண்டுவரும் நேரத்தில், தந்தைக்கு வயிற்றில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட, குடும்பம் இடிந்துபோனது.
தொடர்புடைய செய்திகள்
சில ஆண்டுகளில் தந்தை இறந்துபோக, தாய், சகோதரர், சகோதரி அடங்கிய குடும்பத்தின் பொறுப்பை ஏற்றார் பிரேம். குடும்பத்தின் நிதி நிலையை மேம்படுத்த நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் (Events management) ஒன்றைத் தொடங்கினார்.
“நிறுவனத்தை நடத்துவதற்குத் தேவையான வலிமை என்னிடம் இருந்தது. என் குறைகளைச் சுட்டவும், அதனைச் சரிசெய்யவும் ஏதுவான ஆதரவு இல்லை. குறைகளைச் சரிசெய்யாமல் விட்டதால் தொழிலிலும் இழப்பு ஏற்பட்டது,” என்று குறிப்பிட்டார் பிரேம்.
சுமைகள் அழுத்த, 2015ஆம் ஆண்டு, 34 வயதில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ‘ஆஞ்சியோபிளாஸ்டி’ சிகிச்சை மேற்கொண்டு மீண்ட அவர், “என் வாழ்வில் மிகவும் கடினமான காலகட்டம் அது,” என்றார்.
அடுத்தடுத்த ஆண்டுகளில் குடும்பத்திலும் சிக்கல் ஏற்பட்டு, மூன்று ஆண்டுகளுக்கும் குறைவாகவே நீடித்த இவரது மணவாழ்வும் முறிந்தது.
“சிரமத்தை எதிர்கொண்டபோதெல்லாம், எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கவேண்டும் என நினைக்காத நாள் இல்லை,” என்ற பிரேம், “ஒருவேளை, அனைத்தையும் கடந்து வந்து இளையர்களுக்கு என் கதையைச் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தானோ,” என்று சொல்லிப் புன்னகைத்தார்.
மாற்றம் ஏற்படுத்தும் முயற்சி
முதலில் உடல் நலத்தில் கவனம் செலுத்தத் தொடங்கிய பிரேம், நடைப்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடுகளை மேற்கொண்டார். பிறர் 40 வயதுகளில் தொடங்கும் வாழ்க்கை முறையை 30 வயதுகளில் தொடங்கினார் இவர்.
வலிமையைத் திரட்டி, வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டு, 2022ஆம் ஆண்டு தொடங்கிய துறைக்கே மீண்டும் வந்து சேர்ந்தார்.
தமக்கு நன்கு பரிச்சயமான தொழில் என்றாலும், துறை மேம்பட்டுள்ளதை உணர்ந்து, தம்மையும் மேம்படுத்திக்கொள்ள மேலும் படிக்க முடிவெடுத்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு மீண்டும் திருமணமாகி வாழ்விலும் வசந்தம் வீசத் தொடங்கியது.
“நான் படித்துக்கொண்டிருந்தபோது, என் மனைவியும் பட்டயக் கல்வி மேற்கொண்டிருந்தார். அவர் கருவுற்று தம்மையும் கவனித்துக்கொண்டு, படிப்பையும் கவனிக்க வேண்டியிருந்தது. எங்கள் இருவருக்கும் வருங்காலத்திற்கான திறன்களை மேம்படுத்திக்கொள்வதன் அவசியம் புரிந்திருந்தது,” என்றார்.
“ஒருவரையொருவர் ஊக்குவித்ததால் அது சாத்தியமானது,” என்றும் சொன்னார்.
நாற்பது வயதில் கல்வி கற்பது எளிதல்ல. மூளை அதற்குச் சற்றும் பழகியிருக்கவில்லை,” என்று சிரித்துக்கொண்டே சொன்ன அவர், முழுநேரப் பணி, குழந்தைப் பராமரிப்பு என அனைத்தையும் நிர்வாகம் செய்வது கூடுதல் கடினமாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.
“மீள்திறனுக்கான ‘சிம்’ தலைவர் விருது பெற்றது பெருமைக்குரியது,” என்றார்.
இவ்விருதுக்கும் உடன் வரும் உதவி நிதிக்கும் ஏற்பாடு செய்யப்பட்ட நேர்முகத் தேர்வுக்காக, வாழ்வில் மீண்டும் நினைவுகூரவே விரும்பாத பக்கங்களைப் புரட்ட வேண்டியிருந்ததாகச் சொன்னார்.
“அவை மனத்தைக் கனக்கச் செய்தாலும், மீண்டு வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து, அவை தந்த அனுபவத்துக்கும் பாடங்களுக்கும் நன்றி சொல்கிறேன்,” என்றார்.
“இளையர்கள் தங்களுக்கான துறையைத் தேர்ந்தெடுக்காமல், திறனைக் கண்டறிய வேண்டும், பலம் பலவீனங்களைக் கண்டறிந்தால் வெற்றி நிச்சயம்,” என்றும் கருத்துரைத்தார் பிரேம்.
காலத்துக்கேற்றபடி திறன்களை வளர்த்துக்கொண்டே இருப்பதும் மிக முக்கியம் என வலியுறுத்தினார் அவர்.

