தானம் கொடுத்தவருக்கு இதுதான் மரியாதையா?

வாசகர் குரல்

தானம் கொடுத்தவருக்கு இதுதான் மரியாதையா?

2 mins read
ce209764-4685-4c68-bc5f-b045e33343ed
கவிஞர் மா.அன்பழகன் - கோப்புப் படம்
Google News Preferred Icon

கவிமாலைக் காப்பாளர் திரு. மா. அன்பழகன் அண்மையில் காலமானார். அவரது இறுதி நிகழ்ச்சிக்கு நான் சென்றிருந்தேன். அவர் தாம் இறந்த பிறகு தமது நல்லுடலை மருத்துவ ஆராய்ச்சிக்குத் தானமாக வழங்க வேண்டும் என்று தமது குடும்பத்தினரிடம் கூறியிருந்ததால் அவர்களும் அவ்வாறே ஏற்பாடு செய்தனர்.

ஆனால் அன்றைய தினம் இரவு சுமார் 8.45 மணிக்கு வந்த மருத்துவத் துறையினர் திரு. அன்பழகன் அவர்களின் நல்லுடலைப் பெற்றுச் சென்ற விதம் வேதனை அளிப்பதாக இருந்தது.

வந்தவர்கள், பெட்டியுடன் உடலை எடுத்துச் சென்றிருக்கலாம். செல்ல வேண்டிய இடத்திற்குச் சென்ற பிறகு பெட்டியை அவர்கள் கழித்துக் கட்டியிருக்கலாம். அல்லது அவ்வாறு அவர்களால் செய்ய இயலவில்லை என்றால், இறுதிச் சடங்கை நடத்திய நிறுவனத்திடம் பெட்டியுடன் நல்லுடலைக் கொண்டுவந்து தருமாறு கேட்டுக்கொண்டிருக்கலாம். அவர்கள் நல்லுடலை ஒப்படைத்த பிறகு உரிய முறையில் பெட்டியை கழித்துக் கட்டியிருப்பார்கள்.

ஆனால் வந்தவர்கள் ஒரு தூக்குப் படுக்கையுடன் (ஸ்டெரட்சர்) வந்து, அதைக் கீழே வைத்து, அதன் மீது ஒரு வெள்ளைத் துணியை விரித்து, நல்லுடலைப் பெட்டியிலிருந்து எடுத்து, அந்தத் துணியின்மீது வைத்து, சுருட்டி முடிச்சுப் போட்டு, பொட்டலம் கட்டி எடுத்துச் சென்றார்கள்.

மனைவி, மக்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் என நூற்றுக்கு மேற்பட்டோர் முன்னிலையில் அவர்கள் இவ்வாறு செய்தது அனைவருக்கும் வேதனை அளிப்பதாகவும் மரியாதைக் குறைவாகவும் தோன்றியது.

இந்தியர்கள் பொதுவாக தங்கள் அன்புக்குரியவர்களை இறுதி யாத்திரையில் அனுப்பும்போது மரியாதையுடன், சிறப்பாக அனுப்பி வைக்கவேண்டும் என்று எண்ணுவர். ஆனால் பொட்டலம் கட்டி எடுத்துச் சென்றது சரியாகத் தோன்றவில்லை.

இதுதான் அவர்களின் நடைமுறை என்றால் இதை அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்.

ஏனெனில், தாங்கள் இறந்த பிறகு தங்கள் நல்லுடலையும் தானம் கொடுக்க விரும்புவோர் அன்றைய காட்சியைக் கண்ட பிறகு தங்கள் எண்ணத்தைக் மாற்றிக்கொள்ளக்கூடும்.

மருத்துவத் துறை இது பற்றிப் பரிசீலிக்குமா?

நா. ஆண்டியப்பன் மேனாள் தலைவர் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

வாசகர் குரல் பகுதிக்கு கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: tamilmurasu@sph.com.sg
குறிப்புச் சொற்கள்