சிங்கப்பூர் அறிவியல் நிலையத்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய எந்திரனியல் (ரோபோட்டிக்ஸ்) குறித்த நான்கு நாள் திருவிழாவான ‘ரோபோஃபெஸ்ட் 2026’ வியாழக்கிழமை (ஏப்ரல் 09) தொடங்கியது. இன்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) வரை அது நடைபெறும். கல்வி, தகவல், மின்னிலக்க மேம்பாட்டுத் துணை அமைச்சர் ஜாஸ்மின் லாவ், விழாவை அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைத்தார்.
பொதுமக்களிடையே, குறிப்பாக மாணவர்களிடையே செயற்கை நுண்ணறிவு சார்ந்த எந்திரனியல் குறித்த புரிதலை ஏற்படுத்துவதும் இத்தொழில்நுட்பம் எவ்வாறு அன்றாட வாழ்வில் மனிதர்களுக்குத் துணையாக இருக்கிறது என்பதை விளக்குவதும் அதன் நோக்கம்.
இதில் குத்துச்சண்டை, காற்பந்தாட்டம், நடனம் ஆகியவற்றில் ஈடுபடும் இயந்திர மனிதக் கருவிகளுக்கும் இயந்திர நாய்க்கும் தனித்தனியே சிறப்புக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுடன் திரைவழியாக ஆளில்லா விமானங்களை இயக்கிப் பார்ப்பதற்கான கூடமும் நிறுவப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய அறிவியல் மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தாம் முன் சீ, “தொழில்நுட்பம் வளர்ந்துவரும் வேகத்தைப் பார்த்து, அச்சப்படத் தேவையில்லை. இயந்திர மனிதக் கருவிகள் நமக்குப் பதிலாக நியமிக்கப்படுவதற்கு அல்ல. மாறாக நமது திறன்களை மேம்படுத்தவே அவை உருவாக்கப்பட்டுள்ளன. மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்கும் உள்ள இடைவெளியைக் குறைப்பதே ரோபோஃபெஸ்டின் முக்கிய நோக்கம்,” என்று குறிப்பிட்டார்.
மேலும், ஆறு புதிய இயந்திர மனிதக் கருவிகள், பொதுமக்களுக்கு வழிகாட்டியாகச் செயல்படும் முன்னோடித் திட்டம் குறித்தும் அவர் தெரிவித்தார். இத்திருவிழா பொதுமக்களுக்கு புதிய கற்றல் அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

