90 ஆண்டுகளுக்கு முன்பு மாத இதழாகத் தொடங்கி, இன்று நாளிதழாகச் சமூகத்தின் குரலாய் ஒலித்துக்கொண்டிருக்கிறது தமிழ் முரசு.
நடப்பு விவகாரங்களைப் பதிவிடும் செய்தித்தாளாக இருந்தாலும், அன்றுமுதல் இன்றுவரை தமிழ்க் கவிதைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து அவற்றை வளர்ப்பதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகிறது தமிழ் முரசு.
1950களிலிருந்து கவிதைகளுக்கென்று ஒரு தனிப் பக்கம் ஒதுக்கப்பட்டு, ஒவ்வொரு வாரமும் கவிஞர்கள் அனுப்பும் கவிதைகள் வெளியிடப்பட்டன.
வளரும் கவிஞர்களுக்குப் பேராதரவு
அனைத்து கவிஞர்களுக்கும் நாம் எழுதுவது கவிதையா என்ற தயக்கம் தொடக்கத்தில் இருக்கும் என்று பகிர்ந்துகொண்டார் 24 ஆண்டுகளாகத் தமிழ் முரசுக்கு கவிதை எழுதிவரும் திரு பனசை நடராஜன், 49.
“தொடக்கநிலையில் இருக்கும் வளரும் கவிஞர்களின் கவிதைகளை வெளியிடும்போது, அவர்களிடத்தில் மேலும் பல கவிதைகளையும் இலக்கியங்களையும் படித்து, தம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை பிறக்கிறது. அந்த ஆசையே ஒரு சிறந்த கவிஞனை உருவாக்குகிறது,” என்று கவிஞர்களின் வளர்ச்சியில் தமிழ் முரசின் இன்றியமையாத பணியை நயம்பட விளக்கினார் திரு நடராஜன்.
தமிழ் முரசின் முன்னாள் ஆசிரியர் வை.திருநாவுக்கரசு தன் கவிதைகளைப் படித்துப் பாராட்டியது உண்டு என்று நினைவுகூர்ந்தார் கவிஞர் நெப்போலியன், 53.
“சமயம், அரசியல் சார்பற்ற சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, நம்பகத்தன்மைக்குச் சிக்கல் வராமல் கவிதைகள் எழுத அறிவுரை சொல்லி அவர் வழிகாட்டினார்,” என்று திரு நெப்போலியன் கூறினார்.
1994இல் புதுக் கவிதைகள் எழுதத் தொடங்கி, தமிழ் முரசுக்கு அனுப்பிவரும் திரு நெப்போலியன், பிறகு எழுத்தாளராகவும் திரைப்படப் பாடலாசிரியராகவும் உருவெடுத்தார்.
தொடர்புடைய செய்திகள்
அடையாளத் தேடலில் பெரும்பங்கு
கவிஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு தளமாக அமைவதோடு, அவர்களுக்கான அங்கீகாரத்தை தேடிக் கொடுத்தது தமிழ் முரசு.
“தமிழ் முரசில் கவிதை எழுதத் தொடங்கிய பிறகுதான், தமிழ்ச் சமூகத்தில் ஓர் அடையாளம் கிடைத்தது. என் எழுத்துத் திறமைக்கு ஓர் உந்துசக்தியாக இருந்தது தமிழ் முரசு,” என்றார் 25 ஆண்டுகளாகத் தமிழ் முரசுக்கு கவிதை எழுதி அனுப்பிவரும் திரு இரா. சத்திக்கண்ணன், 56.
தமிழோடு ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொடுத்த தமிழ் முரசு, தம் கவிதைகளை மட்டுமின்றி, தம் கற்பனைத்திறன், படைப்பாற்றல், சமுதாய நோக்கு என அனைத்தையும் அங்கீகரிப்பதாக இவர் உணர்கிறார்.
“நான் கவிஞன் ஆனதற்கு காரணமே தமிழ் முரசுதான்,” என்று உறுதியுடன் கூறினார் யூசுப் ராவுத்தர் ரஜித், 76.
சிங்கப்பூர் சீமை என்ற தலைப்பில் அவரின் முதல் கவிதை 1993ஆம் ஆண்டு தமிழ் முரசில் வெளியானது.
இன்றுவரை ஏறத்தாழ 250 கவிதைகளைத் தமிழ் முரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அக்கவிதைகள் தன் ஐந்து கவிதை நூல்களில் இடம்பெற்றுள்ளதாகவும் திரு ரஜித் பகிர்ந்துகொண்டார்.
“சிங்கப்பூரில் உள்ள கவிஞர்களுக்கெல்லாம் மேடை அமைத்துக் கொடுத்ததே தமிழ் முரசுதான்,” என்றார் அவர்.
“1994லிருந்து வாரந்தோறும் தமிழ் முரசில் என் கவிதை வந்துகொண்டிருந்தது. அதன் விளைவாகத்தான் என் படைப்புகளின் எண்ணிக்கை இன்று முப்பதை நெருங்கிக்கொண்டிருக்கின்றன,” என்றார் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ.
ஓரிரு ஆண்டுகள் கவிதை எழுதியதை நிறுத்தியதும், பலரும் அதுபற்றித் தம்மிடம் வினவியதாகவும், அந்த அங்கீகாரத்தை தமக்குக் கொடுத்தது தமிழ் முரசுதான் என்றும் அவர் பகிர்ந்துகொண்டார்.
மரபுக் கவிதைகளின் பாரம்பரியத்தைக் காத்தல்
மரபுக் கவிதைகளை எழுதும்போது குறிப்பிட்ட விதிகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.
‘வெண்பா’ என்ற கவிதை வகையில் எத்தனைச் சொற்கள், அச்சொற்களில் எத்தனை அசைகள் இருக்க வேண்டும் என்பது பற்றி ஒரு கட்டுரை தமிழ் முரசில் வெளியானது.
“அதன் பின்னர் வெண்பா எழுதும் போட்டிகள் தொடங்கி வைக்கப்பட்டன. அதற்குப் பின், நான் வெண்பா எழுதவும் கற்றுக்கொண்டேன்.” என்று தம் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் மூத்த கவிஞர் க.து.மு. இக்பால்.
‘வெண்பா புலவர்களுக்குப் புலி’ என்ற ஒரு கவிஞரின் கூற்றை நினைவுகூர்ந்து, “தமிழ்க் கவிதைகளிலேயே, அதிக இலக்கண வரம்புகள் இருப்பது வெண்பாவில்தான்,” என்றார் அவர்.
வெண்பாப் போட்டிகள் மட்டுமின்றி, 1960களில் தமிழர் திருநாளை முன்னிட்டு மற்ற கவிதைப் போட்டிகளையும் தமிழ் முரசு நடத்தியது.
“16 வயதிலிருந்து ஒன்றுவிடாமல் அனைத்துப் போட்டிகளுக்கும் என் கவிதைகளை அனுப்பி வைப்பேன்,” என்று தமிழ் முரசில் தொடங்கிய தன் கவிதை பயணத்தை விவரித்தார் திரு இக்பால்.
1960களில் தமிழ் முரசில் கவிதை பயணத்தைத் தொடங்கி, 1999இல் தமிழவேள் விருது, 2001இல் தென்கிழக்காசிய எழுத்தாளர்கள் விருது, 2014இல் கலாசாரப் பதக்கம் எனப் பல விருதுகள் பெற்றுள்ளார் திரு க.து.மு.இக்பால்.
புதுக்கவிதைகளுக்கு முக்கியத்துவம்
1980களில் புதுக்கவிதைகள் சிங்கப்பூரில் விரிவாகச் சிறகடிக்கத் தொடங்கியபோது, அந்த மாற்றத்தையும் தமிழ் முரசு அங்கீகரித்தது.
பெரும்பாலும் மரபுக் கவிதைகள் எழுதும் சிங்கப்பூரின் வளர்ந்த கவிஞர்கள் புதுக்கவிதைகள் எழுதத் தொடங்கியபோது அக்கவிதைகளும் வெளியிடப்பட்டன.
“புதுக்கவிதைகள் புகழ்பெறத் தொடங்கிய காலத்தில் மிகுந்த எதிர்ப்பு கிளம்பியது. இருந்தாலும், தொடர்ந்து புதுக்கவிதைகள் வெளியிடப்பட்டன,” என்றார் திரு அமீருதீன், 55.
1987இல் கவிதை எழுதத் தொடங்கிய இவர், 1989லிருந்து தமிழ் முரசுக்குக் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறார்.
புதிய கவிஞர்களுக்கு ஊக்குவிப்பு
உள்ளூர் கவிஞர்களுக்கும் இளங்கவிஞர்களுக்கும் முக்கியத்துவம் அளித்து, புதிய கவிஞர்களின் தொடக்கக் காலக் கவிதைகளையும் தமிழ் முரசு வெளியிட்டது.
“1998இல் தமிழ் முரசில் அச்சேறிய என் முதல் கவிதைதான் என்னைக் கவிஞாக உணரவைத்து, அந்தப் பாதையில் தொடரச்செய்தது.” என்றார் வெளிநாட்டு ஊழியராகச் சிங்கப்பூருக்கு வந்து இங்குப் பணியாற்றிக் கொண்டிருக்கும் சி.கருணாகரசு.
அன்றுமுதல் இன்று வரை 27 ஆண்டுகளாகத் தமிழ் முரசுக்கு அவர் கவிதைகள் எழுதி வருகிறார்.
அண்மையில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அழகப்பா கல்வி நிலைய முன்னாள் மாணவர் குழுவும் தமிழ் முரசும் இணைந்து வெளிநாட்டு ஊழியர்களுக்குக் கவிதை போட்டியை நடத்தின.
அந்தக் கவிதைப்போட்டியில் முதல் பரிசான $1,000 வெள்ளியை திரு கருணாகரசே தட்டிச் சென்றார்.
“தமிழ் முரசின் அறிமுகத்தால் சிங்கைக் கவிஞர்களுடனும் தமிழ் அமைப்புகளுடனும் தொடர்பு ஏற்பட்டது. இதனால், இலக்கிய மேடைகளில் கவிதை வாசிக்க நிறைய வாய்ப்புகள் கிடைத்தன,” என்று தம் கவிதைப் பயணத்தில் தமிழ் முரசின் முக்கியப் பங்கை அவர் குறிப்பிட்டார்.
இதுமட்டுமின்றி, மாணவர்களுக்கான கவிதைப் போட்டிகள், முக்கிய, கொண்டாட்ட நாள்களை முன்னிட்டு கவிதைப் போட்டிகள் எனச் சிங்கப்பூரில் தமிழ் கவிதை வளர்க்க தமிழ் முரசு எடுத்துள்ள முயற்சிகள் பற்பல.
“அரைப்பக்கமாக இருந்தாலும் முழுப்பக்கமாக இருந்தாலும், அன்றுமுதல் இன்றுவரை தமிழ் முரசில் கவிதைகள் வெளியாவது நிற்கவில்லை,” என்று மெச்சினார் கவிஞர் நெப்போலியன்.