பெருந்திரளானோரை ஈர்த்த ‘கடல்நாகப் படகு’ விழா

பெருந்திரளானோரை ஈர்த்த ‘கடல்நாகப் படகு’ விழா

3 mins read
39cf4f31-7e2d-4fca-832a-7e18b8b14001
ஸ்மித் சாலையில் இடம்பெற்ற கடல்நாக நடனம். - படம்: சிவாணி சக்திவேல்

கடல்நாகப் படகு விழாவை ஒட்டி விண்ணதிரும் மேளதாளங்கள், கம்பீரமான சிங்க நடன அசைவுகள், உற்சாகம் பொங்கிய மக்கள் கூட்டத்தின் ஆரவாரம் எனச் சைனாடவுன் வட்டாரத்தின் ஸ்மித் சாலை திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.

ஜூன் 13ஆம் தேதி நடைபெற்ற 'ஹேப்பி கடல்நாகப் படகு விழா’ (Happy Dragon Boat Festival), சிங்கப்பூரின் சீனப் பாரம்பரியத்தையும் சமூகப் பிணைப்பையும் பறைசாற்றியது.

இக்கொண்டாட்டத்தில், சிங்கப்பூரர்கள், சுற்றுலாப் பயணிகள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகள், பயிலரங்குகள் போன்றவற்றில் ஈடுபட்டனர்.

விடாமுயற்சி, நேர்மை, சகிப்புத்தன்மை ஆகியவற்றின் அடையாளமாகக் கருதப்படும் புகழ்பெற்ற சீனக் கலைஞர் சு யுவானின் (Qu Yuan) நினைவைப் போற்றும் வகையிலும், சீன வரலாற்றுக் கதைகளை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச்செல்லும் நோக்கோடும் இவ்விழா திட்டமிடப்பட்டது.

மேடை நிகழ்ச்சிகளும் துடுப்புச் சவாலும்

விழா மேடையில் பிற்பகல் 1 மணி முதல் மாலை 6 மணி வரை பல்வேறு பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கடல்நாக நடனம், சிங்க நடனம் ஆகியவற்றுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. அவற்றைத் தொடர்ந்து, சீனப் பாரம்பரிய இசைக்கருவி வாசிப்பு, சீனக் கவிதை வாசிப்பு ஆகிய நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

மாலையில், பாரம்பரியச் சீன ஓபரா (Traditional Chinese Opera) மேடையேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளைக் காண்பதற்குப் பொதுமக்கள் பலர் மேடைக்கு அருகில் திரண்டிருந்தனர்.

மேடை நிகழ்ச்சிகளுக்கு இணையாக, பொதுமக்கள் பலரைக் கவர்ந்த மற்றொரு நிகழ்ச்சியாக அமைந்தது ‘கடல்நாகத் துடுப்பு வலிக்கும் சவால்’ (Dragon Boat Rowing Challenge).

இதற்காகச் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்த துடுப்பு இயந்திரங்களில் (rowing machines) பங்கேற்பாளர்கள் தங்களின் துடுப்பு வலிக்கும் திறனைச் சோதித்துப் பார்த்தனர்.

கடல்நாகத் துடுப்பு வலிக்கும் சவாலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
கடல்நாகத் துடுப்பு வலிக்கும் சவாலில் ஈடுபட்ட பொதுமக்கள். - படம்: சிவாணி சக்திவேல்

குறிப்பிட்ட நேரத்திற்குள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டிய பங்கேற்பாளர்களுக்கு 10 வெள்ளி மதிப்பிலான பற்றுசீட்டுகளும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

கலாசார விளையாட்டுகளும் இருமொழிக் கண்காட்சியும்

மேடை நிகழ்ச்சிகள் தவிர, வந்திருந்த பார்வையாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்கும் வகையில் பல இலவசக் கலாசார நடவடிக்கைகளுக்கும் விளையாட்டுகளுக்கும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

‘டம்ப்ளிங்’ எனப்படும் அரிசித் தின்பண்டத்தைச் சுண்டி வீசும் விளையாட்டு, பாரம்பரிய மீன்பிடி விளையாட்டு இரண்டிலும் பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

மேலும், சீனர்களின் பாரம்பரிய ‘ஹான்ஃபூ’ (Hanfu) ஆடையை அணிந்து படம் எடுத்துக் கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. இந்த ஆடையை அணிந்து எடுத்த புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, அதனை விழாவின் ஏற்பாட்டாளர்களிடம் காட்டிய பங்கேற்பாளர்களுக்குச் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த ஆண்டு விழாவின் மற்றொரு முக்கிய அங்கமாக, சுன் யாட் சென் நன்யாங் நினைவு மண்டபம் (Sun Yat Sen Nanyang Memorial Hall) வழங்கிய இருமொழிக் கண்காட்சி அமைந்தது.

துவான் வூ விழாவின் புராணக் கதைகள், உள்ளூர் கடல்நாகப் படகுப் பந்தயத்தின் வரலாறு, பல்வேறு வகையான பாரம்பரிய அரிசித் தின்பண்டங்கள் (டம்ப்ளிங்) குறித்த தகவல்களைப் பார்வையாளர்கள் இக்கண்காட்சியின் மூலம் அறிந்துகொண்டனர்.

நிகழ்ச்சி குறித்துப் பேசிய சைனாடவுன் வர்த்தகச் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் லிம் யிக் சுவான், “சுவையான உணவுகள், பாரம்பரியக் கலை வடிவங்கள், கலாசார அனுபவங்கள் ஆகியவை சங்கமிக்கும் ஒரு முக்கியப் பண்பாட்டு மையமாக ஸ்மித் சாலை திகழும் என்று நம்புகிறோம்,” என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்