இளைய தலைமுறைப் பட்டதாரிகளின் தொழில்திறன்களை மேம்படுத்துவதற்கு ராயல் கிங்ஸ் குழுமம் தனது நிறுவன சமூகப் பொறுப்புணர்வு பங்களிப்புமூலம் நிதியுதவி வழங்கியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற ‘முக்மின் திறன்கள்’ தொடக்க விழா நிகழ்ச்சியில், சமூகத்திற்குப் பயனளிக்கும் வகையில் பட்டதாரிகள் தத்தெடுப்புத் திட்டத்திற்காக ராயல் கிங்ஸ் குழுமம் 25,000 ரிங்கிட்(S$7,825) நிதியுதவி வழங்கியது.
இவ்விழாவில் ராயல் கிங்ஸ் குழுமத்தினர், மலேசிய உயர்கல்வி அமைச்சர் ஸாம்ப்ரி அப்துல் காதிரிடம் அத்தொகைக்கான காசோலையை வழங்கினர்.
மலேசிய இளையர்களின் பணித்திறனை மேம்படுத்தவும் தொடர்ச்சியான வாழ்நாள் கற்றல் வாய்ப்புகளை உருவாக்கவும் ‘முக்மின் திறன்கள்’ ஒரு முக்கியத் தளமாக விளங்கி வருகிறது.
இந்தத் தளத்தின்கீழ் இயங்கும் பட்டதாரிகள் தத்தெடுப்புத் திட்டத்தின்மூலம், கல்வி பயின்று வெளிவரும் பட்டதாரிகளுக்குத் தேவையான தொழிற்பயிற்சிகளும் வேலைவாய்ப்பு முன்னுரிமைகளும் அளிக்கப்படவுள்ளன.
இது குறித்துக் கருத்துரைத்த குழும நிர்வாகிகள், “கல்வி, திறன்மேம்பாடு, சமூக முன்னேற்றம் ஆகியவற்றின் மூலமே வலுவான எதிர்காலத்தை உருவாக்க முடியும். இளையர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் இந்த நன்முயற்சியில் கைகோப்பதில் ராயல் கிங்ஸ் குழுமம் பெருமிதம் கொள்கிறது,” எனத் தெரிவித்தனர்.


