தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மீண்டும் சாதித்த 142 போர்விமானப் படைப்பிரிவு

2 mins read
தலைசிறந்த போர்விமானப் படைப் பிரிவாகத் தொடர்ச்சியாக இரண்டாம் ஆண்டாக 142 பிரிவு வாகைசூடியது. ஜூலை 1ஆம் தேதி நடக்கும் சிங்கப்பூர் ஆயுதப் படை தின அணிவகுப்பில் தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் அவ்விருதை வழங்குவார்.
08f2dea2-9273-455a-8fac-46cc088f2b0f
சிங்கப்பூர் ஆயுதப் படையின் சிறந்த பிரிவுப் போட்டியில் தலைசிறந்த போர்விமானப் படைப் பிரிவாக 142 பிரிவு வெற்றி பெற்றுள்ளது. படத்தில் (இடமிருந்து) கேப்டன் கோ காய் ஜியெ, மூன்றாம் ராணுவ நிபுணர் ‌ஷ்யாம் ரோஹித்குமார், மேஜர் முகமது இஸ்கந்தர், மூன்றாம் சார்ஜண்ட் செபஸ்டியன் யோங், கேப்டன் ஹென்ட்ரிக் போர்னர். - படம்: சாவ்பாவ்

சாங்கி விமான நிலையத்திலிருந்து ஏப்ரல் 5ஆம் தேதி, 2018ல் கிளம்பிய ஸ்கூட் TR634 விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் பற்றிய தகவல் கிடைத்ததும் உடனடியாகச் செயலில் இறங்கினார் சிங்கப்பூர்க் குடியரசு ஆகாயப் படையின் மூன்றாம் ராணுவ நிபுணர் ஷ்யாம் ரோஹித்குமார், 43.

142 போர்விமானப் படைப் பிரிவுத் தளவாடங்களை நிர்வகித்து வந்த ஷ்யாம், தரைக் குழுவினருடன் தொடர்புகொண்டு இரண்டு எஃப்-15எஸ்ஜி போர்விமானங்கள் புறப்படுவதற்கு ஆயத்தப்படுத்தினார்.

அவர்களின் துரிதச் செயல்பாட்டினால், TR634 விமானத்தைப் பாதுகாப்பாகச் சாங்கி விமான நிலையத்துக்கு வழிநடத்திச் செல்ல முடிந்தது.

அதை நினைத்துப் பார்க்கையில் இன்றும் மனமலர்ச்சியடைகிறார், தற்போது 142 போர்விமானப் படைப் பிரிவின் தளப்பத்திய தலைவராகப் பணியாற்றும் ‌‌ஷ்யாம். இவ்வாறு 2019ல் ஸ்கூட் TR385, 2023ல் ஸ்கூட் TR16, 2024ல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் AXB684 எனப் பல விமானங்களையும் முக்கிய தருணங்களில் இடைமறித்துப் பாதுகாப்பை உறுதிப்படுத்திய பெருமை 142 போர்விமானப் படைப்பிரிவைச் சேரும்.

2024ல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் AXB684 விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் ஏற்பட்டதும் உடனடியாகப் புறப்பட்ட எஃப்-15எஸ்ஜி குழுவினர் கேப்டன் ஹென்ட்ரிக் போர்னர் (இடம்), கேப்டன் கோ காய் ஜியெ.
2024ல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் AXB684 விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் ஏற்பட்டதும் உடனடியாகப் புறப்பட்ட எஃப்-15எஸ்ஜி குழுவினர் கேப்டன் ஹென்ட்ரிக் போர்னர் (இடம்), கேப்டன் கோ காய் ஜியெ. - படம்: சாவ்பாவ்

கடந்த ஆண்டில் பல அம்சங்களிலும் அது சிறந்து விளங்கியதால் அதற்கு மற்றொரு பெருமையும் கிட்டியுள்ளது.

சிங்கப்பூர் ஆயுதப் படையின் சிறந்த பிரிவுப் போட்டியில் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாகவும், மொத்தத்தில் நான்காவது ஆண்டாகவும் (2001, 2019, 2024, 2025) 142 படைப்பிரிவு சிறந்த போர்விமானப் படைப்பிரிவு விருதை வென்றுள்ளது.

எஃப்-15எஸ்ஜி போர்விமானங்களை இயக்கும் 142, 149 படைப்பிரிவுகள், எஃப்-16 போர்விமானங்களை இயக்கும் 140, 143, 145 படைப் பிரிவுகள், ஆகியவற்றில் தலைசிறந்த படைப் பிரிவாக 142 படைப் பிரிவு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

எஃப்-15எஸ்ஜி சிங்கப்பூரில் அறிமுகமானபோது அதில் முதன்முதலாகப் பயிற்சிபெற்ற ஆகாயப் படையினரில் ஒருவரான ‌ஷ்யாம், அந்த அனுபவம்மூலம், 149 பிரிவையும் புதுப்பிக்கப்பட்ட 142 பிரிவையும் தொடங்க உதவினார். 142 பிரிவின் தளபத்திய தலைவராகப் பணியாற்றும் ‌ஷ்யாம், 23 ஆண்டுகளாகப் போர்விமானங்களைப் பராமரித்து வருகிறார்.
எஃப்-15எஸ்ஜி சிங்கப்பூரில் அறிமுகமானபோது அதில் முதன்முதலாகப் பயிற்சிபெற்ற ஆகாயப் படையினரில் ஒருவரான ‌ஷ்யாம், அந்த அனுபவம்மூலம், 149 பிரிவையும் புதுப்பிக்கப்பட்ட 142 பிரிவையும் தொடங்க உதவினார். 142 பிரிவின் தளபத்திய தலைவராகப் பணியாற்றும் ‌ஷ்யாம், 23 ஆண்டுகளாகப் போர்விமானங்களைப் பராமரித்து வருகிறார். - படம்: ரவி சிங்காரம்

“இப்படைப் பிரிவில் நாங்கள் புதிய எஃப்-15எஸ்ஜி ஆகாயப் படையினருக்குப் பயிற்சியளிக்கிறோம். அதே சமயம், எந்நேரமும் நம் வான்வெளியைப் பாதுகாக்க ஆயத்த நிலையில் இருக்கிறோம்”, நேரடிப் பயிற்சிகள், பாவனைப் பயிற்சியகம் போன்றவைமூலம் தொடர்ந்து நம்மை மேம்படுத்துகிறோம்.

“1974ல் பணியாற்றிய ஏ-4 விமானக்குழுவினரும் இன்றுவரை நம் குழுவினருக்குப் பயிற்சி வழங்குகின்றனர். அதனால் அவர்களுடையை நெறிகள் தலைமுறைகள் கடந்து நிற்கின்றன,” என்றார் 142 படைப்பிரிவுக்கான ஆணை அதிகாரி மேஜர் முகமது இஸ்காந்தர், 37.

பல மைல்கல்களைக் கடந்துள்ள 142 படைப் பிரிவு

32 முன்னாள் அமெரிக்க ‘ஏ-4பி ஸ்கைஹாக்’ போர்விமானங்களோடு பிப்ரவரி 1974ல் 142 படைப் பிரிவு தொடங்கப்பட்டது. தேசிய தின அணிவகுப்பில் பறந்த ஆகப் பெரிய விமான அணிவகுப்பு என 1976ல் ஏற்படுத்திய சாதனையில் 142 படைப் பிரிவும் பங்கேற்றது.

1988ல் புதிய ‘ஏ-4எஸ்யு சூப்பர் ஸ்கைஹாக்’ போர்விமானங்கள் பொது அறிமுகம் கண்டன. முப்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சேவைக்குப் பின் மார்ச் 2005ல் அந்த ஏ-4 ஸ்கைஹாக் ரக விமானங்கள் ஓய்வுபெற்றன.

மார்ச் 2016ல் 142 படைப் பிரிவு, சிங்கப்பூரின் இரண்டாம் எஃப்-15எஸ்ஜி படைப் பிரிவாக மறுமலர்ச்சியடைந்தது. இன்று 142 படைப்பிரிவு வான் அச்சுறுத்தல்களை முறியடிக்கத் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது.

குறிப்புச் சொற்கள்