ஆர்எஸ்வி பியூட்டி அமைப்பு, சிறப்புத் தேவையுடையோருக்கான சங்கம் (APSN), தங்ளின் பள்ளியுடன் இணைந்து ‘ரன்வே ஃபேஷன் ஃபார் எ காஸ் 2026’ என்ற நிதி திரட்டும் ஆடை அலங்கார அணிவகுப்பை ஞாயிற்றுக்கிழமை (மே 17) லெமன் கிராஸ் உணவகத்தில் நடத்தின.
அழகுப் போட்டிகளில் பங்கேற்று, பட்டங்கள் வென்று, நடுவராகவும் செயல்பட்ட பன்முகத் திறமையாளர்களான 46 வயது நஸ்ரின் சையது ஸக்ரியா, 52 வயது வனேசா ஜாக்குலின் டி குரூஸ், 56 வயது சபா அலி அல்காதிப் ஆகியோர் ஆர்எஸ்வி பியூட்டி அமைப்பின்கீழ் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஏட்ரியன் ஆங், மக்கள் கழகப் பிரதிநிதிகள் குமார், பியூஷ் சர்மா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
ஆடை அலங்கார அணிவகுப்பு மட்டுமன்றி சிறப்பு தேவையுடைய பிள்ளைகளின் பியானோ கீபோர்டு வாசிக்கும், நடனமாடும் திறமைகளையும் வெளிப்படுத்தும் ஒரு தளமாக இந்த நிகழ்வு அமைந்தது.
சிறப்புத் தேவைகளைக் கொண்ட பிள்ளைகள் பராம்பரிய ஆடைகள் அணிந்து பவனி வந்தவர்களுடனும், தங்களின் தாயார்களுடனும் கைகோர்த்து மேடையில் பெருமிதத்துடன் நடந்து தங்களின் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்வின் மூலம் திரட்டப்பட்ட நிதி, சிறப்புத் தேவையுடையோருக்கான சங்கத்தைச் சேரும்.
“வழக்கமான ஆடை வடிவமைப்பு நிகழ்ச்சிகள் அழகை மட்டுமே மையமாகக் கொண்டவை, ஆனால் சமூகத்தில் உள்ள பெரியவர்களும் குழந்தைகளும் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காகவே, பலதரப்பட்ட நாட்டினரையும் ஒன்றிணைத்து அனைவரையும் உள்ளடக்கிய இந்தத் தனித்துவமான மேடையை உருவாக்கினோம்” என்று திருவாட்டி நஸ்ரின் குறிப்பிட்டார்.
மேலும், சிறப்பு தேவையுள்ள பிள்ளைகள் சிலருக்கு சிறிதளவு சத்தம் கேட்டாலும் அதிக மனஉளைச்சல் ஏற்படும்.
தொடர்புடைய செய்திகள்
ஆகவே, அவர்கள் அணிவகுப்பில் பங்கேற்கும் ஒலியைக் குறைத்து, சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
நிகழ்விடத்தில் சில வணிகர்கள் சேலைகள் போன்ற பல்வேறு ஆடைகளையும் ஆபரணங்களையும் விற்பனைக்கு வைத்திருந்தனர்.
தனது இந்திய பாரம்பரிய ஆடை அணிகலன் கடையை அமைத்திருந்த 59 வயது மார்கரட் எலிஸ் தனது ‘மேக்ஸ் சாரி பிளாஸ்ட்’ வணிக அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
“தொழில்முனைவு என்பது எப்போதுமே லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்கக் கூடாது. சமூகத்திற்குத் திரும்பக் கொடுப்பதும் இத்தகைய அர்த்தமுள்ள நிகழ்வுகளின்மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் முக்கியம்,” என்று மார்கரெட் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
இந்நிகழ்வில் ஐந்து ஆடை வடிவமைப்பாளர்களின் கைவண்ணத்தில் உருவான ஆடைகளை 32 பேர் அணிந்து அணிவகுத்து வந்தனர்.
14 வயது இரட்டைப் பெண்களான வைணவி ஆசைத்தம்பி, வைஷ்ணவி ஆசைத்தம்பியின் தாயாரான சுமி இசக்கியப்பன், 45, சமூகத்தின் பார்வையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
“சிறப்புத் தேவையுடைய குழந்தைகளைக் காணும்போது சமூகம் அவர்களைத் தனிமைப்படுத்தாமல், அவர்களும் நம்மிடையே வாழ்பவர்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இத்தகைய நிகழ்வுகள்மூலம் மதியிறுக்கம் பற்றிய புரிதல் பொதுமக்களிடம் முதலில் ஆழமாகப் பதிய வேண்டும்,” என்றார் அவர்.
சமூகத்துடன் ஒன்றிணையவே தன் பிள்ளைகளை இங்கு அழைத்து வந்ததாக அவர் கூறினார்.
மதியிறுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள 9 வயது ஶ்ரீயனின் தந்தையான 41 வயது சதீஷ் மோகன், தொடக்கத்தில் இருந்த தயக்கங்களை உடைத்து தன் மகனை இந்த வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததாகக் கூறினார்.
“பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் கூட்ட நெரிசலில் இருந்தும் பொது வெளிச்சத்தில் இருந்தும் ஒதுக்கியே வைக்கிறார்கள். குழந்தைகளை வெளியில் கொண்டு வந்து அவர்களாலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஒரு முன்மாதிரியாக வழங்க வேண்டும்,” என்று அவர் அழுத்தமாகச் கூறினார்.
ஸ்ரீயனின் அம்மாவான 41 வயது பிரித்தி சதீஷ் மோகன், “சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளின் தேவையைச் சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்கள் பொது இடங்களில் கட்டுப்பாடுகளின்றி சுதந்திரமாகப் பழக முடியும். இந்தச் சமூகத்தில் நாம் மட்டும் தனியாக இல்லை, நம்மைப் போன்ற பிற குழந்தைகளும் இருக்கிறார்கள் என்ற மக்களின் எண்ணம் ஒரு பெரிய சமூக உணர்வைத் தருகிறது,” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

