இசை, நடனம், கலை நிகழ்ச்சிகள் எனக் களைகட்டிய தீபாவளிக் கொண்டாட்டத்தில் கிட்டத்தட்ட 1,800 வெளிநாட்டு ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 15) உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
பெஞ்சூரு பொழுதுபோக்கு நிலையத்தைச் சார்ந்த தங்குவிடுதிகளில் வசிக்கும் ஊழியர்களுக்காக நடைபெற்ற இந்நிகழ்ச்சியை லாபநோக்கற்ற அமைப்பான ‘ஐடிஎஸ்சிசி’, இந்திய நிர்வாகக் கல்விக்கழகங்களின் சிங்கப்பூர் முன்னாள் மாணவர்கள் சங்கம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
சிங்கப்பூரின் வளர்ச்சிக்குத் தோள்கொடுக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்புகளை அங்கீகரித்து, அவர்களைக் கொண்டாடும் நோக்கில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் சிங்கப்பூருக்கான இந்தியத் தூதரகத்தின் தூதரக விவகாரங்களுக்கான ஆலோசகர் சந்தீப் ஜாக்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற ஊழியர்களுக்கு இரவு உணவுப் பொட்டலங்களுடன், அன்றாடத் தேவைக்கான அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய அன்பளிப்புப் பைகளும் வழங்கப்பட்டன.
விரிவடையும் சமூகப் பணி
தொடர்ந்து பத்தாவது ஆண்டாக வெளிநாட்டு ஊழியர்களுக்காக இத்தீபாவளிக் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்து வருவதாக ‘ஐடிஎஸ்சிசி’ அமைப்பின் தலைவர் பிரகாஷ் ஹேதம்சாரியா தெரிவித்தார்.
ஒவ்வோர் ஆண்டும் நிகழ்ச்சியின் அளவை விரிவுபடுத்தி, ஊழியர்களுக்கு மகிழ்ச்சியளித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இவ்வாண்டு இந்த கூட்டாண்மை மூலம், ஊழியர்களின் தேவைகளுக்கு ஏற்ற ஆக்கபூர்வமான திட்டங்களைச் செயல்படுத்த முடியும் என்றார்.
சிங்கப்பூரின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் வெளிநாட்டு ஊழியர்களின் பங்கு இன்றியமையாதது என்பதைச் சுட்டிய ஐஐஎம் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் சந்தீப் திங்ரா, அவர்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
“சிங்கப்பூர் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வீடுகள், சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்புகளை உருவாக்குவதில் நமது வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பெரும் பங்குண்டு.
“அவர்களில் பலர் தங்கள் குடும்பங்களைப் பிரிந்து தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், ஒளித் திருநாளில் எவரும் தனிமையை உணராமல் இருப்பதை உறுதிசெய்யவும் ‘சங்கம்’ நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது,” என்றார் அவர்.
இந்த ஆண்டு நிகழ்ச்சியில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்களது அனுபவங்களை மேடையில் பகிர்ந்துகொண்டது கூடுதல் சிறப்பாக அமைந்தது.
2027ன் தொடக்கத்திலிருந்து பெஞ்சூரு பொழுதுபோக்கு நிலையத்துடன் இணைந்து பணியிடப் பாதுகாப்புப் பயிற்சிகளையும் ஆங்கில உரையாடல் பட்டறைகளையும் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
காலை முதல் களமிறங்கிய தொண்டூழியர்கள்
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்துப் பேசிய ‘ஐடிஎஸ்சிசி’ அமைப்பின் துணைத் தலைவர் ஆர்த்தி நாயுடு, 100க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் காலை 10 மணிக்கே வருகை தந்து உணவுப் பொட்டலங்களையும் பரிசுப் பைகளையும் தயார் செய்ததாகக் கூறினார்.
“குடும்பத்தைப் பிரிந்து வாழும் இந்தச் சகோதரர்கள் நமது நாட்டுக்காக ஆற்றும் உழைப்புக்கு நாம் செலுத்தும் சிறிய நன்றிக்கடனாக இந்நிகழ்ச்சி அமைகிறது,” என்றார் அவர்.
நேரடி இசைக்குழுவின் இன்னிசையுடன் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் ஐஐஎம் முன்னாள் மாணவர்கள், வெளிநாட்டு ஊழியர்கள் எனப் பலரும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். அவர்களின் நிகழ்ச்சிகள் அரங்கில் இருந்தோரின் பலத்த கரவொலியைப் பெற்றன.
பல்வேறு மொழிகளில் பாடல்களைப் பாடி நிகழ்ச்சியில் பங்கேற்ற தொண்டூழியரும் பாடகியுமான சுவேதா ரவி, இசையின் மூலம் மக்களை ஒன்றிணைப்பது குறித்துப் பேசினார்.
“குடும்பங்களைப் பிரிந்து இங்கு வந்து பணிபுரியும் இந்தச் சகோதரர்களுக்கு இசை வழியாக மகிழ்ச்சியைக் கொண்டுசேர்க்க விரும்பினோம். அனைவரையும் ஒன்றிணைக்கும் ஆற்றல் இசைக்கு உண்டு. இவர்களுடன் இணைந்து பாடல்களைப் பாடி மகிழ்ந்தது மிகுந்த மனநிறைவை அளித்தது,” என்று அவர் தெரிவித்தார்.
சொந்த ஊர் திருவிழாவில் கலந்துகொண்ட உணர்வு
கடந்த 13 ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் பணியாற்றி வரும் பாதுகாப்புக் கண்காணிப்பாளரான குமரேசன் முருகன், 46, இங்குள்ள அமைப்புகள் வெளிநாட்டு ஊழியர்களின் நலனில் காட்டும் அக்கறையைப் பாராட்டினார்.
“தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாள்களில் குடும்பத்தை விட்டுத் தூரமாக இருக்கிறோம் என்ற உணர்வே ஏற்படாத அளவுக்கு இங்குள்ள அமைப்புகள் எங்களை அன்போடு கவனித்துக்கொள்கின்றன.
“நண்பர்களுடன் ஒன்றுகூடி சொந்த ஊரில் நடைபெறும் திருவிழாவில் கலந்துகொண்டதைப் போன்ற மனநிறைவை அளித்தது,” என்று அவர் கூறினார்.
மேடையில் தமிழ்ப் பாடல்கள் பாடி பார்வையாளர்களைக் கவர்ந்த மின் கருவியியல் (Electrical Instrument) ஊழியர் சக்திவேல் தருண்காந்த், 27, இத்தகைய மேடை வாய்ப்புகள் தங்களுக்கு ஊக்கமளிப்பதாகக் கூறினார்.
“பொழுதுபோக்கு நிலையங்களில் இதுபோன்று நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகள் மனதுக்கு உற்சாகம் அளிக்கின்றன. வெளி உலகுக்குத் தெரியாமல் இருக்கும் எங்களது திறமைகளை வெளிப்படுத்த இத்தகைய மேடைகள் சிறந்த வாய்ப்பாக அமைகின்றன,” என்று அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் கடந்த நான்கு ஆண்டுகளாக வசித்து வரும் பாதுகாப்புக் கண்காணிப்பாளர் ந. கதிரேசன், 35, இங்குள்ள பாதுகாப்பு நெறிமுறைகளையும் பல்வேறு கலாசாரங்களைச் சேர்ந்த மக்களிடையே நிலவும் நல்லிணக்கத்தையும் பாராட்டினார்.
“பல்வேறு கலாசாரங்களையும் மொழிகளையும் சேர்ந்த மக்கள் ஒரே இடத்தில் பாதுகாப்பாகவும் ஒற்றுமையாகவும் பணியாற்றுவது பெருமையளிக்கிறது. இத்தகைய கொண்டாட்டங்களில் பங்கேற்பது எங்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது,” என்று அவர் கூறினார்.
கலை நிகழ்ச்சிகள், அதிர்ஷ்டக் குலுக்கல், சிறப்பு அங்கீகாரங்கள் எனப் பல்வேறு அம்சங்களுடன் இனிதே நிறைவடைந்த ‘சங்கம்’ தீபாவளிக் கொண்டாட்டம், வெளிநாட்டு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியையும் மறக்க முடியாத நினைவுகளையும் பரிசளித்தது.
