அழகான மணவாழ்க்கை முறிந்து, பிள்ளைகளைப் பிரிந்து, சில காலம் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகி, சிறைவாசம் அனுபவித்து, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கற்பனைப் புனைகளிலும் காணமுடியாத துன்பங்களையும் சோதனைகளையும் அனுபவித்தவர் சரஸ்வதி ஏஞ்சல், 44.
எல்லாவற்றிலும் போராடி மீண்டு வந்ததுடன், போதைப் புழக்கத்துக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பலர் வாழ்வில் ஒளியேற்றி வருகிறார் இந்தச் சிங்கப்பெண்.
நல்ல வேலை, குடும்பம் தொண்டூழியம்
இளம்வயதில் கல்வி, பணி, தொண்டூழியம் எனத் துடிப்புடன் வளைய வந்தவர் சரஸ்வதி. சிண்டா அமைப்பில் சிறந்த தொண்டூழியராகச் செயல்பட்டு விருதும் வென்றிருக்கிறார்.
மனிதவள அமைச்சில் பணி, திருமணம், இரு மகன்கள் எனச் சீராகச் சென்ற இவரது வாழ்வைப் புரட்டிபோட்டது கணவருடன் ஏற்பட்ட பிரிவு.
பிரிவின் துக்கத்தைத் தாள முடியாமல் மன அழுத்தத்துக்கு ஆளானார் சரஸ்வதி. பிள்ளைகளையும் பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டதால், தாங்க முடியாத துயரத்தில் இருந்த அவரது வாழ்வில் வேரொருவர் நுழைந்தார். அவர் போதைப்பழக்கம் உடையவர் என்பது தெரியவந்ததும் சரஸ்வதி மேலும் மனம் நொந்து போனார்.
“முதல் திருமணம்தான் சரியாக அமையவில்லை. இந்த உறவு நீடிக்க வேண்டும் என விரும்பி அவரைத் திருத்த நினைத்தேன். எதிர்பாராதவிதமாக நானும் அந்தப் பாதையில் விழுந்துவிட்டேன்,” என்று கூறினார்.
வாழ்க்கையை உணர வைத்த சிறைவாசம்
உயர்நிலைப் பள்ளிக்காலத்தில் சாங்கி சிறையைச் சுற்றிப் பார்க்கச் சென்றபோது, மீண்டும் அவ்விடத்துக்குச் செல்லக் கூடாது என நினைத்ததை நினைவுகூர்ந்த சரஸ்வதி, “42 வயதில் சிறைக்குச் செல்ல நேர்ந்தது. வாழ்க்கை என்றால் என்ன என்பதை உணர்ந்த தருணம் அது,” என்றார்.
பணியில் சிறந்திருந்த அவரைப் போதைப் புழக்கம் தடுமாற வைத்தது. பணியில் கவனம் செலுத்த முடியாமல் போனது. “காலையில் எழ முடியாது, சுறுசுறுப்பு இல்லாமல் இருப்பேன். அடிக்கடி வேலையிலிருந்து விடுப்பு எடுக்கத் தொடங்கினேன்,” என்றார் சரஸ்வதி.
தொடர்புடைய செய்திகள்
அலுவலகத்தில் அவரது மாற்றங்கள் கவனிக்கப்பட, ஒருநாள் போதைக்கு ஆட்பட்ட நிலையில் பிடிபட்டார் சரஸ்வதி. தொடர்ந்து அவருக்கு ஓராண்டு சிறை விதிக்கப்பட்டது. ஏழு மாத காலம் சிறைவாசம், ஐந்து மாத காலம் போதையர் மறுவாழ்வு நிலைய வாசம் எனும் நிலை.
“சிறைவாசம், மனதளவில் நரக வேதனையானது. சுதந்திரமில்லாத நிலை. அதுவே வெளியில் இருக்கும் வாழ்வை மதிக்காமல் இருக்கிறோம் என்பதை உணர்த்தியது. அங்குள்ளோரின் கதைகளைக் கேட்டபோது வாழ்வின் நிதர்சனம் புரிந்தது,” என்றார் சரஸ்வதி.
“சிறைவாசம் முடிந்து வெளியில் வந்து வானத்தைப் பார்த்துக் கண்ணீர்விட்டு அழுதேன். இப்போது அத்தருணத்தை நினைத்தாலும் புல்லரிக்கிறது,” என்று கூறினார்.
மறுகணமே, அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்ற கேள்வி தம்மைச் சூழந்ததாகக் குறிப்பிட்டார் சரஸ்வதி. “பிள்ளைகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம், காலில் உள்ள ‘டேக்’குடன் நடந்தால் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள், வெளியில் செல்வது எப்படி,” எனப் பல கேள்விகள் எழுந்ததைச் சுட்டினார்.
ஆதரவுக்குழு, மனநல ஆலோசனைகளின் உதவியுடன் தன்னம்பிக்கையைப் பெற்றதாகவும் சொன்னார். “தவறு செய்துவிட்டோம். தற்போது சரியான பாதையில் பயணிக்கிறோம். இதனை வெளியில் சொல்லத் தயக்கம் தேவையில்லை,” எனும் நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டது.
மற்றொரு பேரிடி
மஞ்சள் நாடா அமைப்பின் ஆதரவுடன் மீண்டும் தொடர்பு மையத்தில் பணி கிடைத்து வாழ்க்கை சமநிலையை எட்டும் தருணத்தில் அடுத்த இடியாக வந்தது இரண்டாம் கட்ட மார்பகப் புற்று நோய்.
“என் வாழ்க்கை மட்டும் ஏன் இப்படி இருக்கிறது,” எனும் கேள்வி எழுந்தது ஆனால், என்னை விடக் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வாழ்வைக் கடந்து வந்தவர்களைப் பார்க்கும்போது, என்னாலும் முடியும் எனும் எண்ணம் பிறந்தது. என்னைப் பார்த்துக்கொண்டதுடன், அடுத்தவர்களுக்கும் ஆதரவாகச் செயல்பட விரும்பினேன்,” என்றார்.
ஊக்கம் அளிக்கும் தொண்டூழியம்
தற்போது, தொழிலியல், சேவைகள் கூட்டுறவு மன்றத்தின் மகளிர் ஆதரவுக் குழுவில் தொண்டூழியம் செய்து வரும் சரஸ்வதி, ‘அல்டிமெட் ஃப்ரெண்ட்ஸ் எஸ்ஜி’ அமைப்புடனும் செயல்பட்டு வருகிறார்.
சிங்கப்பூர்ப் போதைப்பொருள் தடுப்புச் சங்கத்தில், பிரச்சினைகள் உடையோருக்கு உதவும் தலைவராக (Peer Leader) வேண்டுமென விரும்புகிறார்.
“இது எனக்கு ஊக்கமளிக்கிறது. பிறரைப் பார்த்துப் பேசுவது, அவர்களுக்கு ஆதரவளிப்பது எனக்கும் ஆதரவாக இருக்கிறது. பிறரது கதைகளைக் கேட்டு நான் மாறினேன். என் கதைகளைக் கேட்டுப் பலரும் மாற வேண்டும் என நினைக்கிறேன். இதனைத் தொடர்ந்து செய்ய வேண்டும், ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும் என விரும்புகிறேன்,” என்றார் சரஸ்வதி, குரலில் நம்பிக்கையும் உறுதியும் தொனிக்க.