மனநிறைவு தரும் நீண்டகாலத் தொண்டூழியம்

மனநிறைவு தரும் நீண்டகாலத் தொண்டூழியம்

3 mins read
febf5fb6-1655-428a-b8e6-ef2d8266cddd
சிண்டாவின் திட்டங்களில் தொடர்ந்து பங்கேற்கும் அனிந்திதா சந்தா. - படம்: சிண்டா

தமக்கு உதவி செய்த சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தில் (சிண்டா) இணைந்து சமூகத்திற்குத் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் எனும் விருப்பத்துடன் பத்தாண்டுகளாகத் தொண்டூழியராகப் பங்காற்றி வருகிறார் அனிந்திதா சந்தா.

உதவிக்குக் கைம்மாறாகத் தொண்டூழியம் செய்யும் அனிந்திதா

தமது உயிர் மருத்துவ அறிவியல் பட்டப்படிப்புக்கான முழுச்செலவையும் ஏற்கும் வகையில் சிண்டா உதவித் தொகை வழங்கியதைச் சுட்டிய அவர், தமது வாழ்வில் நிலையான வேலைவாய்ப்புக்கு வழிவகுத்த அமைப்புடன் இணைந்து பணியாற்ற முடிவெடுத்ததாகக் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை (மே 24) சிண்டாவின் சார்பில் வீடு வீடாகச் சென்று உதவிப் பொருள்களை வழங்கும் ஆகப் பெரிய முன்னெடுப்பில் ஈடுபட்ட அவர், “எனக்கு உதவித் தொகை கிடைத்தபோது அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன். எனது உயர்கல்வியை முடித்து, நல்ல பணியில் அமரலாம் எனும் நம்பிக்கை பிறந்தது. தற்போது, சிண்டாவின் சார்பில் பல்வேறு தரப்பினரைச் சந்தித்து ஆதரவளிக்கும்போது அவர்களுள் என்னைப் பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது,” என்று புன்னகையுடன் பகிர்ந்தார்.

சிங்கப்பூரின் பரபரப்பான வாழ்க்கைக்கு நடுவில் தனிமையை உணரும் பலரைச் சந்திக்க நேரிடுவதைச் சுட்டிய அவர், சிண்டா உள்ளிட்ட அமைப்புகளும் தன்னார்வலர் குழுக்களும் மேற்கொள்ளும் முன்னெடுப்புகளால் தாங்கள் தனித்து விடப்படுவதில்லை என்பதை உணர்வதாகச் சொன்னார்.

மருத்துவத் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றும் அவர், “சுகாதாரத் துறையில் பணியாற்றுவதால் வாரநாள்களில் தொடர்ந்து தொண்டூழியம் செய்ய நேரம் கிடைக்காது. ஆனால், கிடைத்த நேரத்தில் நிச்சயம் வந்துவிடுவேன். இது எனக்கு எதையோ சாதித்த மகிழ்ச்சியைத் தருகிறது,” என்று கூறினார்.

கடந்த பத்தாண்டுகளாக வீடுவீடாகச் சென்று உதவி வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு முன்னெடுப்புகளில் பங்காற்றிய அவர், பல நேரங்களில் பேச ஆள்கிடைத்ததே மகிழ்ச்சி என்பதுபோல மூத்தோர் பலர் மகிழ்ச்சியடைவது தொண்டூழியம் செய்யும்போது கிடைக்கும் கூடுதல் இன்பம் என்றார்.

தாம் மட்டுமின்றி, தமது கணவரையும் தொண்டூழியத்தில் ஈடுபடுத்தி மகிழ்கிறார் அனிந்திதா. “இருவரும் இணைந்து ஈடுபடும்போது பெருமிதமும் மனநிறைவும் அடைகிறோம். இதனை ஒரு குடும்பத்தின் வழக்கமாக மாற்ற வேண்டும் என நினைக்கிறேன். வளரும் பருவத்தில் இதனைப் பார்க்கும் எனது மகளும் இதைக் கற்றுக்கொள்ளவேண்டும் என விரும்புகிறேன்,” என்றும் அவர் தெரிவித்தார்.

நீண்டகாலத் தொண்டூழியர் ருக்மணி

பணிகளுக்கிடையிலும் தொடர்ந்து தொண்டூழியப் பணியில் ஈடுபடும் தொழில்நுட்ப வல்லுநர் ருக்மணி.
பணிகளுக்கிடையிலும் தொடர்ந்து தொண்டூழியப் பணியில் ஈடுபடும் தொழில்நுட்ப வல்லுநர் ருக்மணி. - படம்: பே.கார்த்திகேயன்

கடந்த பத்து ஆண்டுகாலத்தில் வீடுவீடாகச் சென்று உதவி வழங்கும் முன்னெடுப்பு பன்மடங்கு மேம்பட்டதுடன், இவ்வாண்டு ஆகப் பெரிய முன்னெடுப்பாக வளர்த்துள்ளதைப் பார்ப்பதில் பெருமகிழ்ச்சியடைந்தார் நீண்டகாலத் தொண்டூழியர் பழநியப்பன் ருக்மணி, 58.

ஞாயிற்றுக்கிழமை (மே 24) 1,000 வீடுகளைச் சென்றடைந்த சிண்டாவின் முன்னெடுப்பில் பங்கேற்ற அவர், “தொடக்கத்தில் சில குடியிருப்புகளுக்கு மட்டும் சென்றோம். அதுவும் எல்லாத் தரவுகளும் விவரங்களும் காகித வடிவில் இருக்கும். தற்போது, எல்லாம் மின்னிலக்கமயமாகிவிட்டன. பணிச்சுமை குறைந்து கூடுதல் வீடுகளைச் சென்றடைய முடிகிறது,” என்று சொன்னார்.

“சிண்டாவைப் பிரதிநிதித்துச் செல்லும்போது, அங்குள்ள தேவைகளுக்கேற்ற திட்டங்கள், அவை குறித்த தகவல்கள் ஆகியவற்றைத் தெரிந்திருக்க வேண்டும். அதற்கென பயிற்சி மேற்கொண்டு பங்களிப்பதில் மகிழ்ச்சி,” என்றும் அவர் கூறினார்.

“பத்தாண்டுகளாக இத்திட்டத்தில் பங்கேற்றாலும், 1,000 வீடுகளைச் சென்றடைதல் என்பது சவாலானதாகவே தோன்றியது. இது திருவிழா போன்றது. ஊர் கூடி தேர் இழுப்பதுபோல அமைந்தது. அதில் நானும் பங்காற்றியது மனநிறைவான அனுபவம்,” என்று அவர் பகிர்ந்துகொண்டார்.

இளையர்கள் பலரும் இம்முன்னெடுப்பில் பங்காற்றியதில் மகிழ்ச்சி தெரிவித்த அவர், முந்தைய தலைமுறையினருக்குக் குடும்ப ஆதரவு இருந்தது. தற்போது, சமூகம்தான் குடும்பம் போன்றது. அந்த எண்ணம் வளர்வதில் மகிழ்ச்சி,” என்றார் ருக்மணி.

இளையர்கள் அனைத்துத் திட்டங்களுக்கும் புது ஆற்றலை அளிப்பதாகவும் அது பிறருக்கும் புத்துணர்வளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்