தொழில்நுட்பம் நமது அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களை எளிதாக்கியுள்ளது. அதேநேரத்தில், மேம்பட்டுவரும் மின்னிலக்க உலகில் பாதுகாப்பாக இருப்பதற்கு விழிப்புணர்வு மிகவும் அவசியமாகிறது.
இந்தத் தொடரில், பொதுமக்கள் இணையத்தில் விழிப்புடனும் பாதுகாப்பாகவும் இருக்க உதவும் பயனுள்ள செயலிகள், மின்னிலக்கக் கருவிகள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், எளிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து அறிந்துகொள்வோம்.
சிங்கப்பூரில் தொடர்ந்து நிலவிவரும் முக்கிய மின்னிலக்க அச்சுறுத்தல்களில் ஒன்றான மோசடிகள் குறித்து முதலில் பார்ப்போம்.
ஒரு காலத்தில் மோசடிச் செய்திகளை எளிதாக அடையாளம் காண முடிந்தது. பிழைகள் நிறைந்த மின்னஞ்சல்கள், அறிமுகமில்லாத எண்களிலிருந்து வரும் சந்தேகத்திற்குரிய செய்திகள், நம்பமுடியாத பரிசு அறிவிப்புகள் போன்றவை மோசடிக்கான பொதுவான எச்சரிக்கை அறிகுறிகளாக இருந்தன.
ஆனால், இன்று நிலைமை மாறிவிட்டது.
செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) உதவியுடன், உண்மையானவை போலத் தோன்றும் செய்திகள், படங்கள், குரல்கள், காணொளிகளைக்கூட மிக விரைவாக உருவாக்க முடிகிறது. எனவே, ஒரு செய்தி அல்லது காணொளி உண்மையானது போலத் தோன்றுகிறது என்பதற்காக மட்டுமே அதை நம்புவது ஆபத்தானது.
காவல்துறையின் தகவலின்படி, 2025ஆம் ஆண்டில் 37,308 மோசடிச் சம்பவங்கள் பதிவாகின. இவற்றால் ஏற்பட்ட மொத்த இழப்பு ஏறத்தாழ $913.1 மில்லியன்.
இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம், பல சம்பவங்களில் மோசடிக்காரர்கள் நேரடியாகப் பணத்தைத் திருடவில்லை. மாறாக, பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றி, அவர்களாகவே பணத்தைப் பரிமாற்றம் செய்ய வைத்துள்ளனர்.
இன்றைய மோசடிகள் தொழில்நுட்பத்தை மட்டுமல்லாமல், மனிதர்களின் உணர்வுகளையும் குறிவைக்கின்றன.
“உங்கள் வங்கிக் கணக்கு முடக்கப்படும்.”
“உடனடியாகப் பணத்தை அனுப்புங்கள்.”
“வணக்கம், நான் எனது தொலைபேசி எண்ணை மாற்றிவிட்டேன்.”
இதுபோன்ற செய்திகள் பயம், அவசரம் அல்லது நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. நாம் சிந்திப்பதற்கு முன்பே செயல்பட வைப்பதே மோசடிக்காரர்களின் நோக்கம்.
உங்கள் கைப்பேசியில் ஒரு பாதுகாப்புக் கருவி: ‘ஸ்கேம்ஷீல்டு’
சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளை அடையாளம் காணவும் புகாரளிக்கவும் உதவும் ‘ஸ்கேம்ஷீல்டு’ எனும் மோசடித் தடுப்புச் சேவை சிங்கப்பூர் மக்களுக்குக் கிடைக்கிறது.
இதைப் பயன்படுத்த, உங்கள் திறன்பேசியில் உள்ள ‘ஆப்பிள் ஆப் ஸ்டோர்’ அல்லது ‘கூகல் பிளே ஸ்டோர்’ செயலியைத் திறந்து, ‘ஸ்கேம்ஷீல்டு’ என்று தேடுங்கள். அதிகாரபூர்வமான ‘ஸ்கேம்ஷீல்டு’ செயலிதான் என்பதை உறுதிசெய்த பிறகு அதைப் பதிவிறக்கம் செய்யுங்கள். அதிகாரபூர்வ இணையத்தளம்: https://www.scamshield.gov.sg/
இந்தச் செயலியின் மூலம் சந்தேகத்திற்குரிய தொலைபேசி எண்கள், செய்திகள், இணைய இணைப்புகளைச் சரிபார்க்கலாம்.
குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ்அப் போன்ற செயலிகள் வழியாக வரும் இணைய இணைப்புகளை உடனடியாகத் திறப்பதற்குப் பதிலாக, அவை மோசடியுடன் தொடர்புடையவையா என்பதை முதலில் ‘ஸ்கேம்ஷீல்டு’ மூலம் சரிபார்க்கலாம்.
சந்தேகத்திற்குரிய மோசடிகள் குறித்து இந்தச் செயலி வழியாகப் புகாரளிக்கலாம். இத்தகைய புகார்கள், அதேபோன்ற மோசடி முயற்சிகளிலிருந்து மற்றவர்களைப் பாதுகாக்க உதவும் தகவல்களை வழங்குகின்றன.
மேலும், மோசடியாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகளிலிருந்து பாதுகாப்பு பெறவும் இந்தச் செயலி உதவுகிறது. செயலியை நிறுவிய பிறகு, உங்கள் தொலைபேசிக்குப் பொருத்தமான பாதுகாப்பு அம்சங்களைச் செயல்படுத்த, அதில் வழங்கப்படும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.
உங்களுக்கு வந்துள்ள அழைப்பு அல்லது செய்தி குறித்துச் சந்தேகம் இருந்தால், 24 மணி நேரமும் செயல்படும் ‘ஸ்கேம்ஷீல்டு’ உதவி எண்ணான 1799ஐ அழைக்கலாம்.
யாராவது அவசரப்படுத்தினால், நிதானமாகச் செயல்படுங்கள்
தொழில்நுட்பம் நமக்குப் பாதுகாப்பு அளிக்க உதவும். இருப்பினும், நமது விழிப்புணர்வும் செயல்பாடுகளும் மோசடிகளுக்கு எதிரான முக்கியமான பாதுகாப்பாகும்.
உங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவர் திடீரெனப் பணம் கேட்டு செய்தி அனுப்பினால், நீங்கள் ஏற்கெனவே அறிந்துள்ள அவரது தொலைபேசி எண்ணுக்கு நேரடியாக அழைத்துச் சரிபாருங்கள்.
வங்கியிலிருந்து அழைப்பதாக யாராவது கூறினால், அந்த அழைப்பைத் துண்டித்துவிட்டு, வங்கியின் அதிகாரபூர்வத் தொடர்பு வழியாக நீங்களே தொடர்புகொள்ளுங்கள்.
எதிர்பாராத விதமாக வரும் செய்தியில் இணைய இணைப்பு இருந்தால், அந்தச் செய்தி உண்மையானது போலத் தோன்றுகிறது என்பதற்காக மட்டும் அதைத் திறக்காதீர்கள்.
செயற்கை நுண்ணறிவின் திறன் தொடர்ந்து வளர்ந்து வருவதால், ஒரு செய்தி, படம் அல்லது காணொளியின் தோற்றத்தை மட்டும் வைத்து மோசடியை அடையாளம் காண்பது இன்னும் கடினமாகலாம்.
எனவே, இனி நாம் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வி, “இது உண்மையானது போலத் தெரிகிறதா?” என்பதன்று. மாறாக, “இது உண்மையானதுதான் என்பதை நான் சரிபார்த்துவிட்டேனா?” என்பதே.
இந்த வார மின்னிலக்கப் பாதுகாப்புக் குறிப்பு
யாராவது உங்களை அவசரப்படுத்தினால், நிதானமாகச் செயல்படுங்கள்.
நிறுத்துங்கள்! சரிபாருங்கள்! உறுதிசெய்யுங்கள்!
