உள்துறை அமைச்சின் கல்விமான்கள்: கனவுகளும் லட்சியங்களும்

உள்துறை அமைச்சின் கல்விமான்கள்: கனவுகளும் லட்சியங்களும்

3 mins read
773d7c93-238f-469b-b124-fbf67670db29
உள்துறை அமைச்சின் இளங்கலை உபகாரச் சம்பளத்தைப் பெற்றார் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவில் செயல்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றிவரும் ரம்யா பாய். - படம்: உள்துறை அமைச்சு
Google News Preferred Icon

இவ்வாண்டிற்கான உள்துறை அமைச்சின் உபகாரச் சம்பளங்களைப் பெற்றவர்களுள் ரம்யா பாயும் ஒருவர்.

கடந்த நான்கு ஆண்டுகளாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவில் செயல்பாட்டு அதிகாரியாகப் பணிபுரிந்துவரும் இவர், சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் இளங்கலைப் பட்டக்கல்வி மேற்கொள்ளவிருக்கிறார்.

“பலதுறைத் தொழிற்கல்லூரியில் ஊடக, தொடர்புகள் துறையில் பட்டயம் பெற்றுவிட்டு என்ன செய்வதென்று அறியாது நின்றபோது, என் தந்தை, நண்பர்களின் ஆதரவோடு இப்பணியில் சேர்ந்தேன்,” என்றார் அவர்.

ரம்யாவால் மக்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு அவர்களுடன் எளிதாகப் பேச முடிகிறது என்பதைக் கவனித்த அவரது நண்பர்கள் அவருக்கு அப்பணி ஏற்றதாக இருக்குமென நம்பினர்.

“நான் பரிவுடன் பேசுவதால், என்னால் எவரிடமும் பேச முடியும் என என் நண்பர்கள் கூறினர். மேலும், என் வாழ்வில் சுவாரசியம் போதவில்லை என்றும் அவர்கள் கருதியதால் இப்பணியில் சேர என்னை ஊக்குவித்தனர்,” எனச் சிரித்தவாறு கூறினார் ரம்யா.

தமது தந்தை தம்மைச் சிறு வயது முதலே அரசுப் பணிகளுக்குச் செல்லுமாறு ஊக்குவித்து வந்ததால், அவர் பெரும் ஆதரவாக இருந்தார் என ரம்யா பகிர்ந்துகொண்டார்.

தாம் கையாண்ட பல சம்பவங்கள் தமது மனத்தை உருக்கியதாக அவர் சொன்னார்.

“ஒருமுறை மூன்று இளம் பிள்ளைகளுக்குத் தாயான ஒருவரைக் கைது செய்ய வேண்டியிருந்தது. அப்பிள்ளைகளில் ஒருவர் சிறப்புத் தேவையுடையவர்.

“அக்கட்டத்தில் அத்தாயார் மிகுந்த அழுத்தத்திற்கு ஆளானார். என்னால் முடிந்தவரை அவரைச் சமாதானப்படுத்தி, பிள்ளைகளுக்குத் தேவையான உதவி வழங்கப்படுவதை உறுதிசெய்தேன்,” என்று அவர் கூறினார்.

மற்றொரு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஒருவர், குழந்தைக்குப் பால் வாங்கப் பணமில்லாமல் உடனடியாகத் தயார் செய்யக்கூடிய தேநீரைக் கொடுத்தது தமக்கு வருத்தமளித்ததாகவும் அவர் சொன்னார்.

அதோடு, குழந்தை இருந்த அதே அறையில் போதைப்பொருள் உட்கொள்வதற்கான கருவிகளும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததாக ரம்யா கூறினார்.

அத்தகைய சம்பவங்களைக் குறைக்கத் தடுப்புக் கல்வி அவசியமென அவர் கருதுகிறார். அதன் காரணமாக, மக்களின் செயல்களுக்கும் முடிவுகளுக்கும் பின்னால் இருக்கும் காரணங்களைக் கண்டறியப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் அவர் பயில முடிவு செய்துள்ளார்.

போதைப்புழக்கம் பிற நாடுகளில் அதிகரித்து இயல்பாகிவரும் வேளையில், சிங்கப்பூரில் அப்பிரச்சினையை வேரூன்றவிடாமல் தடுப்பது முக்கியம் என அவர் கருதுகிறார்.

மேம்பட்ட வழிமுறைகளை வடிவமைக்க விரும்பும் கல்விமான்

உள்துறை அமைச்சின் முதுகலை உபகாரச் சம்பளத்தைச் சட்ட அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான திரு எட்வின் டோங்கிடமிருந்து உளவியலாளர் கார்த்திகன் சுப்பிரமணியன் (வலம்) பெற்றார்.
உள்துறை அமைச்சின் முதுகலை உபகாரச் சம்பளத்தைச் சட்ட அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான திரு எட்வின் டோங்கிடமிருந்து உளவியலாளர் கார்த்திகன் சுப்பிரமணியன் (வலம்) பெற்றார். - படம்: உள்துறை அமைச்சு

மனிதர்களின் சிந்தனைகளுக்குப் பின்னால் உள்ள காரணங்கள், அறிவியல் ஆகியவற்றில் கார்த்திகன் சுப்பிரமணியன் கொண்டுள்ள ஆர்வம் அவருக்கு உள்துறைக் குழுவில் உளவியலாளர் பணியைத் தேடித்தந்தது.

அவருக்கு இவ்வாண்டு உள்துறை அமைச்சின் முதுகலை உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. கோல்ட்ஸ்மித்ஸ், லண்டன் பல்கலைக்கழகத்தில் புலனாய்வு உளவியல் துறையில் அவர் முதுகலைப் பட்டக்கல்வியை மேற்கொள்ளவுள்ளார்.

“தற்காலக் குற்றங்களில் தெளிவின்மை அதிகமுள்ளதாகத் தோன்றுகிறது. மக்களும் குற்றவாளிகளும் நெருக்கடிகளின்போதும் அழுத்தத்தின்கீழ் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என்பதைக் கண்டறிந்து அவற்றைத் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வடிவமைக்கப் புலனாய்வு உளவியல் உதவும் என நம்புகிறேன்,” என்றார் அவர்.

பள்ளிகளில் கற்கும் பாடங்களுக்கும் பணியில் எதிர்கொள்ளும் சவால்களுக்குமிடையே இடைவெளி பெரிதாக இருந்தாலும் பாடத்திறன்கள் முக்கியப் பின்னணித் தகவல்களையும் தன்னம்பிக்கையையும் வழங்குவதாக அவர் கூறினார்.

ஓராண்டுக் கால முதுகலைக் கல்விக்குப் பின்னர் மூன்றாண்டுகள் உள்துறை அமைச்சில் சேவையாற்றவுள்ள அவர், அமைச்சு எதிர்கொள்ளும், எதிர்கொள்ளவிருக்கும் நெருக்கடிகளையும் சவால்களையும் சமாளிக்கும் வழிமுறைகளைக் கண்டறிய விரும்புகிறார்.

குறிப்புச் சொற்கள்
உள்துறை அமைச்சுஉபகாரச் சம்பளம்இளங்கலைமுதுகலைகல்வி