மகளிர் அடையாளத்தைக் கொண்டாடிய விழா

3 mins read
a0059bfe-0b15-43cf-88bb-a4f8fa137e0c
தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான ஜோசஃபின் டியோ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நிகழ்ச்சியில் இடம்பெற்ற சாவடிகளைப் பார்வையிட்டார். - படம்: பே. கார்த்திகேயன்
multi-img1 of 2

சிங்கப்பூர் இந்தியர் சங்க மகளிர் பிரி­வு தனது இரண்டாவது ஆண்டு விழாவை சிங்கப்பூர் இந்தியர் சங்க கட்டடத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி சிறப்பாகக் கொண்டாடியது.

2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பிரிவு, தனிநபர் மேம்பாட்டின் வழியாகவும் சமூக ஒருங்கிணைப்பின் வழியாகவும் அனைத்துத் தரப்புப் பெண்களின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு ஆதரவை அளித்து வருகிறது.

சுமார் 120 விருந்தினர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான ஜோசஃபின் டியோ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

சிங்கப்பூர் இந்தியர் சங்கம் பங்கு

சிங்கப்பூர் இந்தியர் சங்கம் நீண்டகாலம் நிலைத்து நின்று, மாறிவரும் சூழலுக்‌கேற்ப தன்னைப் புதுப்பித்துக்‌கொண்டு வருவதையும் பெண்களுக்‌குத் தொடர்ந்து ஆதரவளிப்பதற்கு அது கொண்டுள்ள வலுவான அடித்தளத்தையும் அமைச்சர் தமது உரையில் பாராட்டினார்.

இந்திய சமூகத்தில் சிங்கப்பூர் இந்தியர் சங்க மகளிர் பிரிவின் தாக்‌கத்தைச் சுட்டிக்‌காட்டிய அமைச்சர் டியோ, பெண்களின் திறன்களை வளர்ப்பதற்கும் வாய்ப்புகளை வழங்குவதற்கும் பெண்களின் சாதனைகளைக் கொண்டாடுவதற்கும் அது மேற்கொண்டுள்ள முயற்சிகளையும் எடுத்துரைத்தார்.

அடுத்த தேர்தலில் அதிக பெண் வேட்பாளர்களைக்‌ களமிறக்க ஆர்வமுண்டு என்ற பிரதமர் லாரன்ஸ் வோங்கின் அண்மைய கருத்துக்களைச் சுட்டிக்‌காட்டிய அமைச்சர் ஜோசஃபின் டியோ, “சிங்கப்பூரின் எதிர்காலத்திற்குச் சிறப்பாகப் பங்களிக்கும் திறன்களைக்‌ கொண்டுள்ள பெண்களை அதிகளவில் அங்கீகரிக்க இதுவே தக்க தருணம்,” என்றார்.

பெண் வர்த்தகர்கள் திறன்

நிகழ்ச்சியின் சிறப்பு அங்கமாக சிங்கப்பூர் இந்தியர் சங்க மகளிர் பிரிவின் புதிய சின்னத்தின் வெளியீடு இடம்பெற்றது. இதைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் பெண் நிறுவனர்கள் சிலர் தங்களது வர்த்தகங்களைச் சாவடிகளின்வழி காட்சிப்படுத்தியிருந்ததைப் பார்வையிட்டு அவர்களுக்‌கு ஊக்‌கமளித்து, புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார் அமைச்சர்.

“மகளிர் பிரிவின் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இன்றைய நிகழ்ச்சியை அமைத்துள்ளோம். இதுபோன்ற நிகழ்ச்சிகள்மூலம் பெண்களுக்கென்று புதிய தொடர்பு வட்டங்களை ஏற்படுத்தி எங்களது இலக்குகளை உங்களுக்கு அறிமுகப்படுத்துவது எங்களது நோக்கமாகும்,” என்றார் சிங்கப்பூர் இந்தியர் சங்க மகளிர் பிரி­வின் துணைத் தலைவர் சுதா தியாகராஜன்.

தத்தம் துறைகளில் ஆற்றல் வாய்ந்த நிபுணர்கள் சிலர் நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்ற அழைக்‌கப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவரான 35 வயது மஹாலக்ஷ்மி வேலாயுதம், ‘மேன்கேம்எஸ்ஜி’ என்ற சுருள்முடிப் பராமரிப்பு வர்த்தகத்திற்கும், ‘டியர் டார்லிங்’ என்ற நிலையான முறையில் தயாரிக்‌கப்படும் ஆடைகள் வர்த்தகத்திற்கும் நிறுவனராகச் செயல்பட்டு வருகிறார்.

“காலம் யாருக்காகவும் காத்திருக்காது. முதல் படியை எடுத்து வைப்பது மிகவும் முக்கியம். அந்த ஒரு தூண்டுதலை மற்ற பெண்களுக்‌குக் கொடுக்க வேண்டும் என்ற நோக்‌கத்துடன்தான் இன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.

“என் தாயாரின் இளவயதில் அவருக்‌கு ஊக்கம் கொடுத்து, வழிகாட்டியாக யாராவது இருந்திருந்தால் மேலும் பல சாதனைகளை அவர் செய்திருப்பார் என்று என்னிடம் அடிக்‌கடி கூறுவார்,” என்றார் அவர். அவ்வகையில் சிங்கப்பூர் இந்தியர் சங்க மகளிர் பிரி­வு பெண்களுக்‌கென்று நெருக்கமான சமூகத்தை உருவாக்கி அவர்களுக்குத் தூண்போல் ஆதரவளித்து வருவதன் அவசியத்தை வலியுறுத்தினார் திருமதி மஹாலக்ஷ்மி.

நூல்களைப் படிப்பதைவிட இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மற்றவர்களின் வாழ்க்கைப் பயணங்களையும் அவர்கள் கடந்து வந்த தடைகளையும் நேரடியாகக் கேட்டறிந்துகொள்ளும்போது மகளிர் அதிகாரம் பெறுதல் (female empowerment) பற்றிய கருத்துகளை மேலும் உணர முடிகிறது என்றார் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினருக்‌கு நினைவுப்பரிசாக வழங்கப்பட்ட ஓவியத்தை வரைந்தவரும் சிங்கப்பூர் இந்தியர் சங்க மகளிர் பிரி­வின் உறுப்பினருமான லெட்சுமி கணபதி, 62.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான ஜோசஃபின் டியோவுடன் சிங்கப்பூர் இந்தியர் சங்க மகளிர் பிரிவுத் தலைவர் திருமதி விஜயா சிகாமணி.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான ஜோசஃபின் டியோவுடன் சிங்கப்பூர் இந்தியர் சங்க மகளிர் பிரிவுத் தலைவர் திருமதி விஜயா சிகாமணி. - படம்: பே. கார்த்திகேயன்

நாற்பது ஆண்டுகளாக வர்த்தகத் துறையில் பணியாற்றிய இவர், தற்போது தேக்‌கா ப்லேஸ் கடைத்தொகுதியில் அமைந்திருக்‌கும் ‘சோல் ஆர்ட்ஸ்’ கடையின் நிறுவனராகச் செயல்பட்டு வருகிறார். பரிசாக வழங்கப்பட்ட திருமதி லெட்சுமியின் ஓவியம் வெவ்வேறு பின்னணிகளைச் சேர்ந்த ஆறு பெண்களைப் பற்றிய அவரது ஆறு-பாகக் கலைப் படைப்பின் ஆறாவது படைப்பாகும்.

“நமது வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்கு நமது விருப்பத்திற்கேற்ப நமக்கு புத்துணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் செயல்களில் ஈடுபட வேண்டும்,” என்றார் அவர்.

நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் விருந்துபசரிப்பு, நடனம், இசைக் கச்சேரிகள், அதிர்ஷ்டக் குலுக்கல் போன்றவற்றில் பங்கேற்றனர். விளம்பரக் கலைஞர்களின் ஆடை அலங்கார நடை அங்கமும் இடம்பெற்றது.

குறிப்புச் சொற்கள்