கவலை மறந்து, வரம்பின்றிச் சாப்பிடுவதற்கான திருநாளாக நம்மிடையே பலர் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். ஆயினும், இந்த நன்னாளிலும் நிதானம் காத்தால் எந்நாளும் நலமுடன் வாழலாம் என்பதை பிறருக்கு எடுத்துக்கூறும் சேவையை மேற்கொண்டு வருகிறார் திரு சுனில் உன்னி, 51.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற கடந்த ஓராண்டாக இந்தியச் சமூகத்தினரை இவர் ஊக்குவித்து வருகிறார்.
கழுத்திலுள்ள தைராய்டு சுரப்பி, 15 ஆண்டுகளுக்கு முன்னர் உடலுக்குத் தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்ய முடியாமல் போகும் நிலையான ‘ஹைப்போ தைராய்டிசம்’ தமக்கு ஏற்பட்டதை நினைவுகூர்ந்த சுனில், அந்த அனுபவத்தின்மூலம் பிறருக்கு வழிகாட்டுவதாகக் கூறினார்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட தம் தந்தையின் அணுகுமுறையிலிருந்து பாடம் கற்றுக்கொண்டதாகக் கூறிய திரு சுனில், அவரைப் போன்ற கட்டுப்பாடான உணவு, வாழ்க்கை முறையைப் பின்பற்றத் தொடங்கினார்.
“காலை 8 மணி, நண்பகல் 12.30 மணி, இரவு 7.30 மணி என உணவு வேளையை முறையாக வகுத்துக்கொண்டு, வழுவாமல் கடைப்பிடித்து வருகிறேன்,” என்று திரு சுனில் கூறினார்.
காப்பி, தேநீர் மற்றும் பலகார உணவுகளில் சர்க்கரை அளவைக் குறைத்து அல்லது நீக்கி, இனிப்புக்காக பேரீச்சம்பழம், அத்திப்பழம் போன்ற மாற்றுப்பொருள்களைப் பயன்படுத்தலாம் என்பது அவரது அறிவுரை. உப்பின் அளவைக் குறைப்பதற்கும் அவர் படிப்படியாக முயற்சி மேற்கொண்டார்.
பண்டிகையின்போது பாந்தமாகச் சாப்பிடலாம்
தீபாவளி போன்ற பண்டிகை நேரங்களில் இனிப்பு, கொழுப்பு நிறைந்த பண்டங்களுடன் கொண்டாடுவது இயல்பு என்றாலும் திட்டமிட்டு, நிதானத்தைக் காத்து சாப்பிடுவதன் முக்கியத்துவத்தை திரு சுனில் கூறினார்.
பதப்படுத்தப்பட்ட இனிப்பு வகைகளுக்கு மாறாக கடலை, உலர்பழ வகைகள் ஆகியவற்றையும் சாப்பிடும்படி இவர் அறிவுறுத்துகிறார்.
தொடர்புடைய செய்திகள்
“உங்களது வரைமுறைகளை நீங்கள் உறுதியுடன் வகுக்கவேண்டும். விருந்தோம்பலின் பேரில் அளவுக்கு மீறிச் சாப்பிட விருந்தளிப்பவர் வற்புறுத்தினாலும் அதனை உறுதியாக மறுக்கும் அளவுக்கு நமக்குக் கட்டொழுங்கு இருக்கவேண்டும்,” என்றும் இவர் சொல்கிறார்.
உணர்வும் உணவும் ஒன்றோடு ஒன்று பிணைந்தவை என்பதை உணர்ந்து, உடல்நலத்தையும் மனநலத்தையும் பேண வேண்டும் என்கிறார் இவர்.

