சிங்கப்பூர் அனைத்துலக அறநிறுவனம் (எஸ்ஐஎஃப்) உலகளாவிய சமூகத்தில் பல்வேறு சமூகங்களுடன் இணைந்து பணியாற்றும் தொண்டு அமைப்பாகும்.
இந்த அமைப்பு சமூக மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான நோக்கத்தில் கல்வி, கலாசாரம், சமூகச் செயல்பாடுகளில் உலகளாவிய அளவில் உறவுகளைக் கட்டியெழுப்பி வருகிறது.
இதில் தொண்டூழியர்கள் தங்கள் திறன்களையும் நேரத்தையும் பயன்படுத்தி உலகின் பல பகுதிகளில் பயனுள்ள செயல்பாடுகளை நிகழ்த்தி வருகின்றனர்.
தொண்டூழியர்கள் நால்வரின் அனுபவங்கள் அவர்களின் கடின உழைப்பு, உலகளாவிய சமூகத்தில் அவர்களது பங்களிப்பு ஆகியவை பற்றி இப்பதிவு காண்கிறது.
மகப்பேறு, குழந்தை சேவைகளை மேம்படுத்துதல்
சிங்கப்பூருக்கு அப்பாற்பட்டு தனது மருத்துவக் கரங்களை இந்தியாவிலும் நீட்டியுள்ளார் டாக்டர் ஸ்ரீதர் அருணாச்சலம், 49.
கர்நாடகாவில் மூன்று ஆண்டுகள் தொண்டூழியம் புரிந்த அவர் அங்கிருக்கும் மகப்பேறு, குழந்தை சேவைகளை மேம்படுத்த கைகொடுத்தார்.
சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சிசு, வளர்ச்சி மருத்துவப் பிரிவின் மூத்த ஆலசோகரான டாக்டர் ஸ்ரீதர், கர்நாடகாவில் கிராமப்புறப் பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணிகளுக்கும் குழ்நதை பெற்ற பெண்களுக்கும் கூடுதல் ஆதரவு வழங்கும் நோக்கில் செயல்பட்டார்.
கர்நாடகா முழுவதிலுமிருந்து சுகாதார நிபுணர்களை ஒன்றிணைத்து மாநில அரசின் ஆதரவுடன் பயிற்சி அமர்வுகள் பெங்களூரில் மையமாக நடத்தப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
மண்டியா, மைசூர், தும்கூர், ஹாசன், ராய்ச்சூர், பெல்லாரி, தாவங்கேரி, பெங்களூரு, கோலார் போன்ற முக்கிய இடங்களுக்கு டாக்டர் ஸ்ரீதர் சென்றார்.
கர்நாடகாவின் சுகாதார அமைப்பின் பல்வேறு தேவைகளைத் திறம்பட நிவர்த்தி செய்யும் பயிற்சி திட்டங்களை வடிவமைக்க உதவி வழங்கப்பட்டது.
சேவையை அதோடு நிறுத்தாமல் அவர் அங்கிருக்கும் மருத்துவர்களுக்குப் பயிற்சியளித்து சேவைத் தரத்தையும் மேம்பட வழியமைத்தார்.
இந்தியாவில் தரமான சுகாதாரச் சேவைகளைப் பெறுவதில் சவால்கள் இன்னும் உள்ளதாகக் குறிப்பிட்ட டாக்டர் ஸ்ரீதர், சிங்கப்பூரில் தாம் பெற்ற அனுபவத்தை அங்குள்ள மருத்துவர்களிடம் பகிர்ந்துகொண்டார்.
நோயாளிகளின் எண்ணிக்கை, கிராமப்புறங்களில் வசிப்போர் தரம் வாய்ந்த மருத்துவமனைகளை நாடுவது போன்ற சிரமங்கள் இருப்பதாகச் சொன்ன டாக்டர் ஸ்ரீதர், மகப்பேறு, குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைக்கும் முயற்சிகளில் இறங்கினார்.
குழந்தை இறப்பு விகிதம் குறிப்பிடத்தக்க அளவு குறைந்ததாகச் சொன்ன அவர், சிங்கப்பூரிலிருந்து மருத்துவக் கருவிகள் இந்தியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருக்கும் மருத்துவர்களுக்குப் பாவனை பயிற்சி வழங்கப்பட்டதாகக் கூறினார்.
“அவர்களுக்கு கல்வியறிவையும் வளங்களையும் வழங்கினோம். அவர்களிடம் இருந்த சில தவறான எண்ணங்களையும் மாற்றினோம்,” என்றார் டாக்டர் ஸ்ரீதர்.
கிராமப்புற இடங்களில் அதிக ஆபத்துடைய கர்ப்பங்கள் ஏற்படுவதாகத் தெரிவித்த டாக்டர் ஸ்ரீதர், இந்தப் பயிற்சி மூலம் சிறந்த உள்கட்டமைப்பு கொண்ட பாதுகாப்பான சிசு மருத்துவச் சேவை வண்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகச் சொன்னார்.
முன்னர் நோயாளிக்கு இறப்பு நேரிட்டால் மருத்துவரைக் குறைகூறுவது தற்பொழுது அங்கு குறைந்துள்ளதாகக் கூறிய டாக்டர் ஸ்ரீதர், மருத்துவமனையில் தரமான தணிக்கை நடப்பில் இருப்பதாகச் சொன்னார்.
அந்திமகாலப் பராமரிப்புக்கான விழிப்புணர்வு
இளம் வயதிலிருந்தே தொண்டூழியம் புரிவது என்றால் டாக்டர் ராமசாமி அகிலேஸ்வரனுக்குப் பேரார்வம்.
எஸ்ஐஎஃப்புடன் அவரது தொண்டூழியப் பயணம் 2009ல் தொடங்கியது. அந்திமகாலப் பராமரிப்பு குறித்து பெரிதும் அறியப்படாத மருத்துவர்களுக்கு அவர் இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் கல்வியறிவு புகுட்டினார்.
டாக்டர் அகிலேஸ்வரன், 66, கூ தெக் புவாட் மருத்துவமனையில் அந்திமகால மருத்துவத்தில் மூத்த ஆலோசகராகவும் நிபுணராகவும் உள்ளார்.
உலகளவில் இன்னும் பல நாடுகளில் அந்திமகாலப் பராமரிப்பு மேம்படவில்லை எனக் கருதும் அவர், ஜகார்த்தாவுக்கு முதலில் தொண்டு புரிய சென்றபோது அங்கு அந்திமகாலப் பராமரிப்பு மருத்துவர்கள் பெரிதாக இல்லை என்றார்.
ஜகார்த்தாவுடன் இந்தோனீசியாவின் பாண்டுங்கிலும் இந்தியாவிலும் அந்திமகாலப் பராமரிப்பு சார்ந்த பயிற்சிகளை அவர் வழங்கியுள்ளார்.
பயிற்சி பெறுபவர்கள் துடிப்புடன் பல திறன்களைக் கற்றுக்கொண்டதாக பகிர்ந்துகொண்ட டாக்டர் அகிலேஸ்வரன், இந்தோனீசியாவில் மொழி ஒரு சவாலாக இருந்தாலும் அங்கு கிடைத்த மொழிபெயர்ப்புச் சேவைகள் தமக்கு மிகவும் உதவியாக இருந்ததாகச் சொன்னார்.
தாய்மொழி தமிழாக இருந்தாலும் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், குஜராத்தி ஆகிய இதர இந்திய மொழிகளைப் பேச டாக்டர் அகிலேஸ்வரனுக்குத் தெரியும் என்பதால் அவருக்கு இந்தியாவில் சேவை செய்வது எளிதாக இருந்தது.
இந்தியாவில் அண்மையில் அந்திமகாலப் பராமரிப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், சிங்கப்பூருடன் ஒப்பிடுகையில் இதர நாடுகளில் விழிப்புணர்வு குறைவு என்றார்.
பல நாடுகளில் அந்திமகாலப் பராமரிப்பு புற்றுநோயாளிகள்மீது மட்டும் அதிக கவனம் செலுத்துவதாகக் குறிப்பிட்ட டாக்டர் அகிலேஸ்வரன், சிறுநீரகக் கோளாறு, பக்கவாதம் போன்ற இதர நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கும் வழங்கப்பட வேண்டுமென்றார்.
ஆரம்பக் கல்வியில் கவனம்
ஏதோ ஒரு சிறிய வகையில் சமூகத்திற்கு உதவ வேண்டுமென்ற உந்துதல் முனைவர் க.காவேரிக்கு எப்போதும் இருந்து வந்தது.
இந்தோனீசியாவின் பாண்டுங்கில் ஆரம்பக் கல்விக்கு உதவி அங்குள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சியளித்த டாக்டர் காவேரி, 52, தனக்கு அங்கு மொழி ஒரு சவாலாக இருந்தாலும் அதை எதிர்கொண்டு திறம்படச் சேவையாற்றினார்.
இந்தோனீசிய பாலர் பள்ளி ஆசிரியர்கள் சங்க (ஐஜிடிகேஐ) உறுப்பினர்களை சந்தித்து டாக்டர் காவேரி முதலில் பாண்டுங்கைப் பற்றி அறிந்துகொண்டார். பிறகு அந்த ஆசிரியர்களுடன் பேசி அங்குள்ள சூழலைப் புரிந்துகொண்டார்.
சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் ஆரம்பக் கல்வி பிரிவில் மூத்த விரிவுரையாளரான டாக்டர் காவேரி, இந்தோனீசிய ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்க முன்வந்தார்.
இந்த அனுபவம் தமக்கு எண்ணற்ற நினைவுகளை அள்ளித் தந்ததாக பகிர்ந்துகொண்ட அவர், இரண்டு கட்டங்களைக் கொண்ட தொண்டூழியத் திட்டத்தைப் பற்றி விளக்கினார்.
அங்கு பள்ளி மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கற்பதைக் கண்டு டாக்டர் காவேரி மலைத்துப் போனார். முதற்கட்ட பயிற்சி நேரடியாக நடந்ததாகவும் இரண்டாம் கட்ட பயிற்சி கொவிட்-19 பெருந்தொற்றால் மெய்நிகர் வழியாக நடந்ததாகவும் கூறிய டாக்டர் காவேரி, மெய்நிகர் பாணியிலும் மாணவர்கள் துடிப்பு குறையாமல் இருந்ததை நினைவுகூர்ந்தார்.
தரம் வாய்ந்த கலந்துரையாடல்கள் மூலம் மாணவர்களை ஈடுபடுத்துவது, குடும்பங்களுடன் பங்காளித்துவம் வைத்துக்கொள்வது, வகுப்பறை நிர்வாகம் குறித்த பயிலரங்குகள் முதற்கட்டத்தில் நடத்தப்பட்டது.
இரண்டாம் கட்டத்தில் எஸ்ஐஎஃப் ஒரு கருத்தரங்கையும் ஏற்பாடு செய்திருந்தது. வேறொரு நாடாக இருந்தாலும் அங்கு ஆசிரியர்களின் கல்வி முறையை வலுவடையச் செய்த டாக்டர் காவேரி, பாண்டுங்கில் மாணவர்களின் கற்றல் அனுபவத்தில் இசை பங்கு வகிப்பதாகக் கூறினார்.
அங்கிருக்கும் ஆசிரியர்களுக்கு ஆரம்பக் கல்வி தொடர்பான விழிப்புணர்வு அதிகமாகவே இருப்பதாக டாக்டர் காவேரி சொன்னார்.
சமூகச் சேவை திட்டத்துக்கு ஆதரவு
சமூகச் சேவை, தொண்டூழியம், ஆலோசனை வழங்குவது திருவாட்டி அஞ்சலை தேவிக்கு புதிதன்று.
கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக எஸ்ஐஎஃப்புடன் இணைந்து சேவையாற்றிவரும் திருவாட்டி அஞ்சலை, 67, ஆலோசனை நிறுவனம் ஒன்றில் இயக்குநரகாவும் ஆலோசகராகவும் உள்ளார்.
2017லிருந்து 2019 வரை அவர் மும்பையில் சமூகத் துறை திட்டத்திற்கான மேலாண்மை திறன் பயிற்சியளித்து வந்தார்.
அரசாங்க சார்பற்ற அமைப்புகளுக்கு மேலாண்மை திறன் பயிற்சி வழங்கிய திருவாட்டி அஞ்சலை, தாம் அளித்த பயிற்சிகள் மூலம் அமைப்புகள் பயன் கண்டதைப் பற்றி பகிர்ந்துகொண்டார்.
இப்பயிற்சி மூலம் மும்பையில் இதர பயிற்றுவிப்பாளர்களுக்குப் பயிற்சியளித்த திருவாட்டி அஞ்சலை, வியட்னாமிலும் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
ஹனோயில் பாடத்திட்டம் வடிவமைத்தல், கற்றல் முறை இரண்டிலும் பயிற்சியளித்த திருவாட்டி அஞ்சலை, பயிற்சி மேற்கொண்டவர்கள் மிக உற்சாகத்துடன் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டார்.
எஸ்ஐஎஃப் இத்தகைய திட்டங்களை இன்னும் அதிக நாடுகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டுமென திருவாட்டி அஞ்சலை கேட்டுக்கொண்டார்.