பெண்களுக்குத் தயக்கங்களையும் சவால்களையும் உடைத்து, தங்களின் திறமைகளை வெளிப்படுத்த சிறந்த தளமொன்றை அமைத்துத் தருவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு ‘ஷீ ஷைன்ஸ்’ (She Shines) அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் அக்டோபர் 31ஆம் தேதி ‘மகளிர் திருவிழா’ லிட்டில் இந்தியாவில் இடம்பெற்றது.
“ஷீ ஷைன்ஸ்’ என்பது என் கணவரின் யோசனை. இந்தப் பெயரை அவர்தான் முன்மொழிந்தார். ஒவ்வொரு பெண்ணும் ஒளிரும் நட்சத்திரம். பெண்கள் திருவிழாவைப் பெண் தொழில்முனைவர்களுக்காகச் செய்ய விரும்பினேன். அவர்கள் தங்கள் எல்லைகளைத் தாண்டி வெளியே வரவேண்டும், மற்றவர்களுடன் பழக வேண்டும், தங்கள் திறன்களை வெளிப்படுத்த வேண்டும். அதற்காக அவர்களுக்கு இந்தத் தளத்தை வழங்குகிறேன்,” என்றார் ஷீ ஷைன்ஸ் நிறுவனர் பிரியா.
பெண்கள் முன்வந்து பெரிய அளவில் ஒளிர வேண்டும். பெண்கள் வியாபாரம் கற்கவும் தங்கள் வணிகத்தை முன்வைக்கவும் வேண்டும். வாடிக்கையாளர்கள் யார் என்பதைப் புரிந்துகொள்ளும் வகையில் ஆரோக்கியம், மனநலம் சார்ந்த நிகழ்வுகளையும் எதிர்காலத்தில் ‘ஷீ ஷைன்ஸ்’ செய்ய விரும்புகிறது என்று அவர் மேலும் கூறினார்.
இந்த விழாவில் பல்வேறு பெண் தொழில்முனைவர்கள் விற்பனை அரங்குகளை அமைத்திருந்தனர்.
“இந்த ஆண்டு மே மாதம் நாங்கள் ‘இஷா அண்ட் புளூம்ஸ்’ என்ற எங்களின் இணையவழி நிறுவனத்தைத் தொடங்கினோம். எங்களுக்கு மிகப்பெரிய வரவேற்புக் கிடைத்தது. எங்களின் இந்திய ஆடைகளைவிடப் பாகிஸ்தானிய ஆடைகள் மிகவும் தனித்துவமானவை. இந்தப் பெண்கள் திருவிழாவில் வாடிக்கையாளர்களை நேரில் சந்தித்து விற்பனை செய்வது நல்ல அனுபவத்தையும் வரவேற்பையும் அளித்தது,” என்று சொன்னார் இஷா அண்ட் புளூம்ஸ் துணை நிறுவனர் சுபைதா.
பாரம்பரியப் பருத்தி, ஜம்தானி புடவைகள், பிரத்யேகப் பாகிஸ்தானிய ஆடைகள், கைகளால் செய்யப்பட்ட சோப்பு, நறுமண, ஆரோக்கிய, அழகு சாதனப் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, அரங்குகளில் விற்கப்பட்ட தனித்துவமான பொருள்களை வாங்கி ஆதரவளித்தனர்.
கலந்துகொண்ட பெண்களை உற்சாகப்படுத்தும் விதமாக அதிர்ஷ்டக் குலுக்கல் நடத்தப்பட்டது. சிறந்த புடவை, சிறந்த உடை அணிந்து வந்த பெண்களுக்குச் சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
மேலும் விழாவில் பெண்களின் உடல்நலம், மனநலம் சார்ந்த கலந்துரையாடலும் இடம்பெற்றது.
