லிட்டில் இந்தியாவில் மட்டுமன்றி சமூக ஊடகங்களிலும் தீபாவளிக் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கிவிட்டன.
பல்வேறு அமைப்புகள் தங்களது இன்ஸ்டகிராம், முகநூல், யூடியூப் பக்கங்களில் தீபாவளியையொட்டி அர்த்தமுள்ள, வேடிக்கையான, சுவாரசியமான காணொளிகளைப் பதிவேற்ற தொடங்கிவிட்டன.
‘gov.sg’யின் குடும்ப காணொளி
கடந்த ஆண்டு தீபாவளியின்போது குடும்பத்தினர் அனைவரும் கைத்தொலைபேசிகளில் மூழ்கியிருந்ததால் இவ்வாண்டுத் தீபாவளிக்கு அவர்களிடம் கூறாமல் நண்பர்களுடன் வெளிநாட்டுச் சுற்றுலா பயணம் செல்ல துடிக்கும் பாட்டியின் பார்வையில் ‘gov.sg’யின் ‘ஃபேமிலி அசெம்பிள்!’ காணொளி அமைந்துள்ளது.
தீபன் குடும்பத்தின் இல்லத்தில் நடக்கும் தீபாவளிக் கலாட்டாவை மையமாகக் கொண்டு காணொளி படைக்கப்பட்டுள்ளது. கொண்டாட்ட ஏற்பாடுகளின்போது நடக்கும் கலவரம், சிக்கல்கள், பிரச்சினைகள் போன்றவற்றை அனைவரும் இணைந்து எவ்வாறு கையாள்கின்றனர் என்பதே காணொளியின் கருவாக உள்ளது.
ஆனால், இவை அனைத்துக்கும் நடுவே ஒரு விதிமுறை. தேவையின்றி கைத்தொலைபேசி பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
தீபாவளிக்கு முந்தைய தினம் வீட்டைச் சுத்தம் செய்து, பலகாரங்களைத் தயாரித்து அனைவரும் முழுவதுமாக சோர்வடைந்த பின்னர், குடும்பத்தின் நினைவுகளைப் பாட்டி பதிவு செய்துள்ளதும் அவர் உண்மையில் வெளிநாட்டிற்குச் செல்லத் திட்டமிடவில்லை என்பதும் புலப்படுகிறது.
தீபாவளி நாளன்று அனைவரும் எண்ணெய் தேய்த்து தலைக்குளித்து, புத்தாடை, ஆபரணங்கள் அணிந்து, பாட்டியிடம் ஆசி பெற்று குடும்பத்துடனும் நண்பர்களுடனும் கோலாகலாமாக விழாவைக் கொண்டாடுகின்றனர்.
“ஒளியில் ஒன்றிணைவோம், மரபுகளைக் கொண்டாடுவோம்” என்ற கருத்துடன் அந்த இரண்டு நிமிடக் காணொளி முடிவுற்றது.
‘கைன்ட்னெஸ் எஸ்ஜி’யின் ஒற்றுமை காணொளி
ஒரு பெண்மணியின் இளம் பருவத்தில் அவரது வீட்டில் நடக்கும் தீபாவளிக் கொண்டாட்டத்தை மையமாகக் கொண்ட ‘கைன்ட்னெஸ் எஸ்ஜி’ அமைப்பின் ‘தியா’ காணொளி மனதை நெகிழச் செய்கிறது.
தொடக்கநிலை நான்காம் வகுப்பில் படிக்கும்போது ஜோதியின் இல்லத்தில் தீபாவளிக்கு முந்தைய நாள் ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கின்றன. வீட்டைச் சுத்தம் செய்யும் தாயார், அலங்கரிக்கும் தந்தை, பலகாரங்கள் செய்யும் பாட்டி என அழகிய குடும்பம்.
வீட்டை அலங்கரிக்கும் வேளையில் ஒரே மின்சார சாக்கெட்டில் நிறைய சாதனங்களைப் புகுத்துவதால் அவர்கள் வீட்டில் மட்டுமன்றி அவர்களது மாடி முழுவதும் மின்சாரத் துண்டிப்பு ஏற்படுகிறது.
மூன்று அண்டைவீட்டாரும் ஒன்றுகூடி தங்களைத் திட்டவுள்ளதாக அஞ்சும் ஜோதிக்கு ஆச்சரியமளிக்கும் வண்ணம் அவர்கள் நிலைமையைப் புரிந்துகொள்கின்றனர்.
வாசலில் ஏற்றிவைத்த விளக்கை ஏந்தி ஜோதி மன்னிப்புக் கோருகையில், காற்றினால் விளக்கு அணையும் நிலையை அடைய, அண்டைவீட்டார் அனைவரும் கைகளால் விளக்கு அணைவதைத் தடுக்கின்றனர். பின்பு, அடுத்த நாள் அனைவரும் ஒன்றாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
சிறு விளக்கு இருளில் பிரகாசத்தை ஏற்படுத்துவது போல் அன்பு, பரிவு, பாசம் ஆகியவற்றின்வழி அனைவரும் பிறரின் வாழ்வில் ஒளியேற்ற முடியுமென்ற கருத்துடன் மூன்று நிமிடக் காணொளி முடிவடைகிறது.
சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் துடிப்பான பாடல்
சுகாதார மேம்பாட்டு வாரியம் இவ்வாண்டு தீபாவளிக்கு “நல்லா இருங்க” என்ற தலைப்பில் துடிப்பான பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
தொலைக்காட்சிக் கலைஞர்கள், பாரம்பரிய நடனமணிகள், அழகு அலங்காரங்கள் எனப் பல அம்சங்கள் நிறைந்த வண்ணமயமான காணொளியில் உப்பு, சர்க்கரை போன்றவற்றை தீபாவளித் தின்பண்டங்களில் குறைத்துகொண்டு மக்கள் தங்கள் ஆரோக்கியத்தைப் பேண ஊக்குவிக்கப்படுகிறது.
ஆரோக்கிய தெரிவு சின்னம் கொண்ட உணவு பொருள்களைத் தேர்வு செய்வது, உடலையும் மனதையும் சீராக வைத்திருப்பதன்வழி தீபாவளியைக் கொண்டாடுவது, தீப ஒளியைப் போல் அனைவரும் ஒளிமயமாக மிளிர்வது என பல்வேறு கருத்துகளை அந்த ஒரு நிமிடப் பாடல் உள்ளடக்கியுள்ளது.
சிங்கப்பூரர்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும் அர்த்தமுள்ள வகையிலும் தீபாவளியைக் கொண்டாட பல்வேறு காணொளிகள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டு வருகின்றன.
