நிதி உதவி தேவைப்படும் மாணவர்கள் கல்வியில் பின்தங்கிவிடக் கூடாது என்பதற்காக 2003ஆம் ஆண்டிலிருந்து கல்வி உதவித்தொகையை வழங்கி வருகிறது ஸ்ரீ சாஸ்தா சங்கம்.
இவ்வாண்டு ஸ்ரீ சாஸ்தா சங்கத்தின் சிறப்பு நிதி திரட்டும் இரவு விருந்தில் 25 மாணவர்கள் கல்வி உதவிநிதியைப் பெற்றனர்.
“ஆண்டுதோறும் ஏறத்தாழ 20 முதல் 25 மாணவர்களுக்கு ஸ்ரீ சாஸ்தா சங்கம் நிதியுதவி அளித்து வருகிறது. இந்தக் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்ற நோக்கில், அதற்கான நிதியைத் திரட்டுவதற்காகவே இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம்.
இந்த விருந்தில் கிட்டத்தட்ட 320 பேர் கலந்துகொண்டனர். பாடல், நடனம், கலைஞர்களின் படைப்புகள் மட்டுமின்றி அதிர்ஷ்டக் குலுக்கலும் ஐந்து சிறப்புப் பொருள்களுக்கான ஏல விற்பனையும் இடம்பெற்றன,” என்று கூறினார் ஸ்ரீ சாஸ்தா சங்கத்தின் செயலாளர் ராஜேஸ்வரி.
ஸ்ரீ சாஸ்தா சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த இரவு விருந்து ஒன் ஃபேரர் ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25) நடைபெற்றது.
நிதி திரட்டும் இரவு விருந்தில் தேசிய வளர்ச்சிக்கான இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
ஒவ்வொரு மாணவருக்கும் குடும்பப் பின்னணியைப் பொருட்படுத்தாமல் கற்கவும் வளரவும் தங்களுடைய முழு ஆற்றலை வெளிப்படுத்தவும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
“நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படும்போதே, ‘முதலில் நாம்’ என்ற சமூகம் எவ்வாறு இயங்க வேண்டும் என்பதற்கான உண்மையான வெளிப்பாடாக அது அமையும்,” என்றார் அமைச்சர் இந்திராணி ராஜா.
“கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்கள் தொடர்ந்து கடினமாக உழைக்கவும் குறிக்கோள்களை நோக்கிப் பயணம் செய்யவும் அவர்கள் முன் உள்ள வாய்ப்புகளைச் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ளவும் இந்த ஆதரவு ஊக்கமளிக்கும் என்று நம்புகிறேன். வருங்காலத்தில் அவர்களுக்கு ஆதரவளித்த சமூகத்திற்குத் திருப்பித் தரவும் இது வழிகோலும்,” என்று அவர் கூறினார்.
அறிமுகம் கண்ட சுபாஷ் ஆனந்தன் உபகாரச் சம்பளம்: முதல் இரண்டு கல்விமான்கள்
நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, சுபாஷ் ஆனந்தன் உபகாரச் சம்பளம் அறிமுகம் செய்யப்பட்டது.
“திரு சுபாஷ் புகழ்பெற்ற குற்றவியல் வழக்கறிஞராகத் திகழ்ந்தார். அவர்தான் ஸ்ரீ சாஸ்தா அமைப்பின் உத்வேகமாக விளங்குகிறார். அவரது நினைவைப் போற்றும் வகையில், சுபாஷ் ஆனந்தன் உபகாரச் சம்பளம் அமைக்கப்பட்டுள்ளது,” என்றார் ஸ்ரீ சாஸ்தா சங்கத்தின் சிறப்பு நிதி திரட்டும் இரவு விருந்தின் ஆலோசகர் பிமல் ராம்.
முதல் இரண்டு கல்விமான்களாக, சாரா தர்மராசுவும் கார்த்திகேயன் பாலாஜியும் ஸ்ரீ சாஸ்தா சங்கத்தின் சுபாஷ் ஆனந்தன் உபகாரச் சம்பளத்தைப் பெற்றனர்.
கடந்த சில ஆண்டுகளில் தனது கல்விச் சாதனைகளுக்குக் கிடைத்த சிறந்த அங்கீகாரமாக இந்த உபகாரச் சம்பளம் அமைந்துள்ளது என்று சுபாஷ் ஆனந்தன் உபகாரச் சம்பளத்தைப் பெற்ற கார்த்திகேயன் பகிர்ந்துகொண்டார்.
“இந்த உபகாரச் சம்பளம் பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இது போன்று பல அங்கீகாரங்களைப் பெறுவதற்காக, இன்னும் சிறப்பாகச் செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஊக்கம் பிறக்கிறது,” என்று அவர் சொன்னார்.
