ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 8) நள்ளிரவு 12.30 மணியளவில் தீபாவளி பிறந்த உற்சாகத்தில் பலரும் மகிழ்ந்திருந்த வேளையில், சிராங்கூன் சாலையில் உள்ள ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயம் 20,000 பக்தர்களுக்குப் பிரசாதம் தயாரிக்கும் பணியில் கண்ணும் கருத்துமாக ஈடுபட்டிருந்தது.
ஆண்டுதோறும் தீபாவளியன்று பல்லாயிரம் பேருக்குப் பிரசாதம் தயாரித்து வழங்குவது கோயிலின் வழக்கம். புதுப்பிப்புப் பணிகளுக்காகத் தற்காலிக இடத்திற்கு மாறியிருந்தாலும் தவறாமல் அந்தக் கடமையை இந்த ஆண்டும் நிறைவேற்றுவதில் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயம் குறியாக இருந்தது.
2027ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி ஆலயத்தின் குடமுழுக்கு. அதை முன்னிட்டு மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவதால் பிற ஆலயங்களுடன் இணைந்து பக்தர்களுக்குப் பிரசாதம் தயாரித்ததாகப் பகிர்ந்துகொண்டார் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத் தலைவர் ராஜகாந்த்.
தீபாவளி இவ்வாண்டு ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுவதால் அடுத்த நாளான திங்கட்கிழமை பொது விடுமுறை நாளாக அமைகிறது. எனவே, ஆலயம் இரண்டு நாள்களுக்கும் சேர்த்து 3,000 கிலோகிராமுக்கும் அதிகமான பிரசாதத்தைத் தயாரித்தது.
அவற்றுள் எலுமிச்சைச் சோறு, கேசரி, புளிச்சோறு, சைவ பிரியானி, சக்கரைப் பொங்கல் ஆகியவை அடங்கும்.
காய்கறிகள் வெட்டுவது, சமைப்பது, பொட்டலமிடுவது, பிரசாதங்களை விநியோகிப்பது போன்ற பணிகளில் 100க்கும் அதிகமான தொண்டூழியர்கள் வெள்ளிக்கிழமையிலிருந்து (நவம்பர் 6) ஈடுபட்டனர்.
“ஏறக்குறைய 20,000லிருந்து 22,000 பக்தர்கள் பிரசாதத்தைப் பெற்றுக்கொள்வர்,” என்றார் ஆலயத்தின் தலைமை திருமடப்பள்ளி அ.கோவிந்தன்.
திரு கோவிந்தனின் மேற்பார்வையின்கீழ் ஆலயத்தின் ஊழியர் ஒவ்வொருவரும் தொண்டூழியர்களும் மடமடவென தங்கள் பணிகளைச் செய்தனர்.
காலை 7 மணிகெல்லாம் பக்தர்கள் வரத் தொடங்கியதால் 6.30 மணிக்கெல்லாம் அனைத்தும் தயாராக இருப்பதை அவர்கள் உறுதிசெய்தனர். பிரசாதம் தீர்ந்துவிடாமல் இருக்க திங்கட்கிழமையும் சமையல் பணிகள் தொடரும்.
ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்தின் தலைமை சமையற்காரராகக் கடந்த எட்டு ஆண்டுகளாகச் சேவையாற்றி வருகிறார் திரு கோவிந்தன்.
“இதுதான் எனக்குத் தீபாவளி. இந்தியாவில் உள்ள குடும்பத்தை விட்டு இங்கு வேலை செய்கிறேன். பக்தர்களுக்காகச் சமைக்கும்போது இந்தியாவில் உள்ள அன்புக்குரியவர்களுடன் இருக்கும் அதே திருப்தி கிடைக்கிறது,” என்றார் அவர்.
ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயம் ஆண்டு முழுவதும் வழங்கிவரும் பிரசாதத்தின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக திரு ராஜகாந்த தெரிவித்தார்.
“2023ஆம் ஆண்டு முழுவதும் 53,000 கிலோகிராம் வரை பிரசாதம் வழங்கினோம். அந்த எண்ணிக்கை கடந்த 59,000 கிலோகிராமுக்கு அதிகரித்தது. ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்தில் வழிபாட்டின்மூலம் பக்தி வெளிப்படுவதில்லை. கருணை, கொடை, சேவை ஆகியவை மூலமும் அதை வெளிப்படுத்துகிறோம்,” என்று அவர் கூறினார்.
190 ஆண்டுகளுக்குமேல் சிங்கப்பூரில் வேரூன்றியிருக்கும் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயம், பொங்கல், தீபாவளி போன்ற பொது விடுமுறை காலங்களில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்களையும் காண்கிறது.
சிங்கப்பூரில் வேலை செய்யும் அவர்கள் உறவினர்களையும் நண்பர்களையும் சந்திக்கும் இடங்களில் ஆலயமும் ஒன்று எனக் குறிப்பிட்டார் ஆலயத்தின் துணைத் தலைவர் ந.தனபால்.
