நிதி திரட்டுவதற்கு ஒரு முன்னணி தளமாகத் கோல்ஃப் விளையாட்டு திகழ்ந்தது.
சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளையும் (எஸ்ஐஇடி) சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கமும் (சிண்டா) இணைந்து ஏற்பாடு செய்த ‘அறக்கொடை கோல்ஃப்’ (Charity Golf) போட்டி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) நடந்தேறியது.
வசதிகுறைந்த மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற ஒருமித்த இலக்குடன் வாரன் கோல்ஃப் அண்ட் கன்ட்ரி கிளப்பில் கோல்ஃப் பிரியர்கள் ஒன்றுகூடினர்.
15வது முறையாக நடைபெற்ற இப்போட்டியில் அரை மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான நிதி திரட்டப்பட்டது.
அத்தொகை இந்திய மாணவர்களுக்கான கல்வி நிதிக்கும் கல்விக் கட்டணத்துக்கான வட்டியில்லாக் கடனுக்கும் பயன்படுத்தப்படும்.
இந்த கோல்ஃப் விளையாட்டுப் போட்டியில் நிபுணத்துவ விளையாட்டாளர்கள், நிறுவனத் தலைவர்கள் உள்ளிட்ட 130க்கும் மேற்பட்ட அறக்கட்டளையின் நீண்டகால, புதிய ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.
2007ல் தொடக்கம் கண்ட இப்போட்டிக்கு இன்றுவரை தொண்டூழியர்களின் உழைப்பே அடித்தளம்.
“தொடக்கத்தில் கோல்ஃப் விளையாட்டாளர்கள் சிலர் குழுவாக ஒன்றுகூடி ஒரு நல்ல நோக்கத்திற்காக நிதி திரட்டினோம். பிறகு எஸ்ஐஇடியுடனும் சிண்டாவுடனும் இணைந்து செயல்படத் தொடங்கினோம்,” என்றார் கோல்ஃப் ஏற்பாட்டுக்குழு உறுப்பினரும் இப்போட்டியின் முதல் பதிப்பிலிருந்தே அங்கம் வகித்துவரும் திரு அபுதாஹீர் அப்துல் கஃபூர் .
தொடர்புடைய செய்திகள்
திரட்டப்பட்ட தொகைக்கு பந்தயப்பிடிப்புக் கழகத்தின் மேம்படுத்தப்பட்ட நிதித் திரட்டுத் திட்டத்தின்கீழ் வெள்ளிக்கு வெள்ளி நிகராக ஈடுசெய்யப்படும்.
“இதுவரை பல மாணவர்களை மேற்கல்வி பயில எஸ்ஐஇடி உதவி வந்துள்ளது. நன்கொடையாளர்கள், ஆதரவாளர்கள், பந்தயப்பிடிப்புக் கழகம் ஆகியவற்றின் உதவியுடனும் அரை மில்லியன் வெள்ளிக்கும் அதிக நிதி திரட்டப்பட்டுள்ளது,” என்றார் திரு அபுதாஹீர்.
“திறமையான மாணவர்களுக்கு நிதியாதரவளித்து ஊக்குவிக்கும் தளமே எஸ்ஐஇடி. மேலும், கல்வி நிதியுதவி தேவைப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது,” என்றார் சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன்.
பயனடைந்த மாணவர்கள், சமூகத்திற்கு தங்களால் முடிந்த வகையில் திருப்பிக் கொடுப்பதன் முக்கியத்துவத்தையும் திரு அன்பரசு வலியுறுத்தினார்.
போட்டி அங்கத்தைத் தொடர்ந்து பங்களிப்பாளர்களுக்கும் நன்கொடையாளர்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்ட இரவு விருந்து நிகழ்ச்சியில் போட்டிகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டதோடு சிறப்புரைகளும் நிகழ்த்தப்பட்டன.
“பல்கலைக்கழக மாணவராக இருந்த காலத்திலிருந்தே எஸ்ஐஇடியின் பணியைப் பார்த்து வந்துள்ளேன். மாணவர்கள் கல்வியைத் தொடர எஸ்ஐஇடி எந்தவோர் ஆரவாரமுமின்றி உதவி செய்து வருகிறது. மாணவர்கள் வேலைக்குச் சென்று சமூகத்திற்குப் பங்களித்துள்ளனர்,” என்று எஸ்ஐஇடி உடனான தமது 24 ஆண்டு தொடர்பை நினைவுகூர்ந்தார் அதன் துணைத் தலைவர் ரமேஷ் செல்வராஜ்.
“இது வெறும் நிதி திரட்டலன்று. வருங்காலத் தலைமுறையினரின் எதிர்காலத்திற்கான அடித்தளம்,” என்ற திரு ரமேஷ், நிதி திரட்ட கைகொடுத்த ஆதரவாளர்களிடம் அறக்கட்டளையின் சார்பாக நன்றி தெரிவித்துக்கொண்டார்.
தொடக்கக் கல்லூரிகள், பலதுறைத் தொழிற்கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்விக் கழகம், பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயிலும் 500க்கும் மேற்பட்டோருக்கு எஸ்ஐஇடி ஒவ்வோர் ஆண்டும் நிதியாதரவு அளித்து வருகிறது.
“$500,000 என்பது ஒரு பெரிய தொகை. இதனால், உதவி தேவைப்படும் இன்னும் நிறைய மாணவர்கள் பயனடைவர். குறைந்த வருமானக் குடும்பத்திலிருந்து வந்தால், அந்த நிலையிலிருந்து வெளிவர ஒரே வழி கல்விதான்,” என்றார் எஸ்ஐஇடி துணைத் தலைவர் பன்னீர் செல்வம்.
“இளநிலைப் பட்டக்கல்வி பயிலும் மாணவர்கள் மட்டுமின்றி உயிர் கல்வி பயில விரும்பும் பெரியோர்க்கும் ஆதரவளிக்கிறோம். இதுபோன்ற நிகழ்ச்சிகள்மூலம் விழிப்புணர்வை அதிகரித்து, தங்களை மேம்படுத்திக்கொள்ள விரும்பும் யாரும் நிதிச் சுமையால் பின்தங்கிவிடக் கூடாது என்பதை நினைவூட்ட விரும்புகிறோம்.”
நிதியாதரவு தேவைப்படும் மாணவர்கள் தயங்காமல் முன்வந்து வளங்களை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.