சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளையும் (எஸ்ஐஇடி) சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கமும் (சிண்டா) இணைந்து 15வது முறையாக நன்கொடை கோல்ஃப் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளன.
இந்நிகழ்ச்சி ஆகஸ்ட் 22ஆம் தேதி பிற்பகல் ஒரு மணி முதல் வாரன் கோல்ஃப் & கன்ட்ரி கிளப்பில் நடைபெறவிருக்கிறது.
திரட்டப்படும் தொகை இந்திய மாணவர்களுக்கான கல்வி நிதி, கல்விக்கட்டணத்திற்கான வட்டியில்லாக் கடன் ஆகியவற்றுக்காகப் பயன்படுத்தப்படும்.
அரசு உதவி பெற்ற, தனியார் கல்வி நிலையங்களில் பயிலும் வசதி குறைந்த இந்திய மாணவர்களின் நிதிச்சுமையைக் குறைக்க அது உதவும்.
இந்த வருடாந்தர நன்கொடை கோல்ஃப் போட்டி, கடந்த 15 ஆண்டுகளாக இந்தியச் சமூகத்தின் நன்கொடை திரட்டும் முன்னணித் தளமாக விளங்குகிறது. நன்கொடையாளர்கள், ஆதரவாளர்கள், கோல்ஃப் ஆர்வலர்கள், நிறுவனத் தலைவர்கள் ஆகியோரின் ஆதரவை அது பெற்றுள்ளது.
இந்தப் போட்டி கடந்த 15 ஆண்டுகளில் 1.63 மில்லியனுக்கும் அதிகமான தொகையைத் திரட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் மூலம் மாணவர்கள் 311 பேர், கல்விக் கடன் பெற்றுப் பயனடைந்தனர்.
அத்துடன், தொழிற்கல்விக்கழகம், தொடக்கக்கல்லூரி, பலதுறைத் தொழிற்கல்லூரி, பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயிலும் 500க்கும் மேற்பட்டோருக்கு நிதியாதரவும் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கோல்ஃப் போட்டி முடிவுற்ற பிறகு பங்களிப்பாளர்களுக்கும் நன்கொடையாளர்களுக்கும் விருந்து நிகழ்ச்சி இடம்பெறும்.
எஸ்ஐஇடி-சிண்டா நன்கொடை கோல்ஃப் போட்டி 2025க்கு சிண்டா மூலம் நன்கொடை அளிப்பவர்களுக்கு 2.5 மடங்கு வரிக்கழிவு கொடுக்கப்படும். அவர்கள் கொடுக்கும் தொகைக்கு ஈடான தொகையை அரசாங்கம் வழங்கும் என்று கூறப்பட்டது.
இந்த நன்கொடை முயற்சியில் நிறுவனங்களும் தனிநபர்களும் ஆதரவுத் தொகுப்புகள், பரிசு அல்லது அன்பளிப்புப் பைகளை நன்கொடையாக வழங்குதல், போட்டியில் பங்கேற்றல் ஆகியவற்றின் மூலம் ஆதரவு வழங்குமாறு சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் ஜெயபிரகாஷ் ஜெகதீசன் கேட்டுக்கொள்கிறார்.

