800 குடும்பங்களுக்கு ரமலான் அன்பளிப்பு வழங்கிய சிண்டா

800 குடும்பங்களுக்கு ரமலான் அன்பளிப்பு வழங்கிய சிண்டா

3 mins read
c7c36a00-9242-403e-a7b5-40781a44890f
பொருள்களைப் பிரித்து, அன்பளிப்புப் பைகளிலிடும் பணியில் சிண்டா தொண்டூழியர்களுடன் இணைந்து ஏஸ்டெக் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டனர். - படம்: சிண்டா

குறைந்த வருமான இந்திய முஸ்லிம் குடும்பங்கள் ரமலான் மாதத்தையும் நோன்புப் பெருநாளையும் சிறப்பாகக் கொண்டாட, சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா) தனது ‘2026 நோன்புப் பெருநாள் அன்பளிப்புப் பை’ திட்டத்தின்வழி ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது.

சிண்டாவுடன் சமூகப் பங்காளிகள், தொண்டூழியர்கள், மாணவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, இத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினர்.

பிப்ரவரி 11ஆம் தேதி பொருள்களைப் பிரித்து பைகளில் இடும் பணிகளும் சனிக்கிழமை (பிப்ரவரி 21) விநியோகப் பணிகளும் நடைபெற்றன. இதன்மூலம் தீவுமுழுவதும் 800 குடும்பங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 3,000 பேர் பயனடைந்துள்ளனர்.

பொருள்களை அடுக்கி வைக்கும் பணியில் சிண்டா தொண்டூழியர்களுடன் இணைந்து ஏஸ்டெக் (Acetek) கல்லூரியைச் சேர்ந்த 48 மாணவர்கள் ஈடுபட்டனர். அவர்கள் இரு பிரிவுகளாகச் செயல்பட்டுப் பொருள்களைத் தொகுத்தனர்.

பொருள்களை அடுக்கி வைக்கும் பணியில் சிண்டா தொண்டூழியர்களுடன் இணைந்து ஏஸ்டெக் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டனர்.
பொருள்களை அடுக்கி வைக்கும் பணியில் சிண்டா தொண்டூழியர்களுடன் இணைந்து ஏஸ்டெக் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டனர். - படம்: சிண்டா

நோன்பு மாதத்தில் குடும்பங்களின் அன்றாடச் செலவுகளைக் குறைக்கும் நோக்கில் பழுப்பு அரிசி, பால், பிரியாணி மசாலா, பேரீச்சம்பழம் உள்ளிட்ட தேவையான மளிகைப் பொருள்களோடு பண்டிகைக்கால உணவு வகைகளும் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அன்பளிப்புப் பையில் இடம்பெற்றன.

விநியோகப் பணிகளில் சிண்டா தொண்டூழியர்கள், ‘ஐஎம்யூத்’ (IMYouth) இளையர் குழுவினர், ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்கம் எனப் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த ஏறத்தாழ 100 பேர் கைகோத்தனர். பயனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று அவர்கள் அன்பளிப்புப் பைகளை வழங்கினர்.

பயனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று அன்பளிப்புப் பைகள் வழங்கப்பட்டன.
பயனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று அன்பளிப்புப் பைகள் வழங்கப்பட்டன. - படம்: சிண்டா

இத்திட்டம் வெறும் பொருளுதவி வழங்குவதைத் தாண்டி, அந்தக் குடும்பங்களுக்கு ஒரு முக்கியச் செய்தியைக் கொண்டுசேர்க்கும் வாய்ப்பாகவும் அமைவதாக சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன் கூறினார்.

“அவர்கள் எக்காரணத்தாலும் தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டதாக உணரக்கூடாது,” என்று திரு அன்பரசு சொன்னார். குடும்பங்களுக்குத் தேவையான அன்பு, ஆதரவு, கவனம் அனைத்தையும் வழங்கி, அவர்கள் சமூகத்தின் ஒரு பகுதி என்ற உணர்வை வலுப்படுத்துவதே இத்திட்டத்தின் தலையாய நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிண்டா போன்ற ஆதரவு அமைப்புகள், பல்வேறு நிறுவனங்கள், தொண்டூழியர்கள் எனப் பலர் எப்போதும் கைகொடுக்கக் காத்திருக்கின்றனர் என்பதையும் இது நினைவூட்டும் என்று நம்புவதாக அவர் சொன்னார்.

‘ஐஎம்யூத்’ இளையர் குழுவினருடன் சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன் (நடுவில்).
‘ஐஎம்யூத்’ இளையர் குழுவினருடன் சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன் (நடுவில்). - படம்: சிண்டா

சுகாதார மேம்பாட்டு வாரியம், முகமது முஸ்தபா & சம்சுதீன் நிறுவனம், சையத் முகமது டிரேடர்ஸ் (சிங்கப்பூர்) நிறுவனம் ஆகியவற்றின் பங்களிப்பால் இவ்வாண்டுத் திட்டம் சாத்தியமானதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

உணவுப் பொருள்களோடு, ஒவ்வொரு பயனாளி குடும்பத்திற்கும் 120 வெள்ளி மதிப்பிலான ‘என்டியூசி ஃபேர்பிரைஸ்’ பற்றுச்சீட்டுகளையும் சிண்டா வழங்கியது.

இந்த உதவி தமக்கு மிகுந்த நிம்மதியை அளித்துள்ளதாகக் கூறினார் மருத்துவத் தளவாடத் துறையில் பணிபுரியும் ஜஹாபர், 54. “நான் இந்த அன்பளிப்புப் பையைப் பெறுவது இது இரண்டாவது முறை. குறிப்பாக, பேரங்காடிப் பற்றுச்சீட்டுகள் என் செலவுகளைக் கணிசமாகக் குறைக்க உதவுகின்றன,” என்றார் அவர்.

மற்றொரு பயனாளியான இல்லத்தரசி சமீரா பேகம், 35, இந்த ஆதரவு மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஊக்கத்தைத் தமக்கு அளித்திருப்பதாக குறிப்பிட்டார். “இதில் உள்ள சில பொருள்களைப் பயன்படுத்தி நான் சமைப்பேன். நோன்பு துறக்கும் நேரத்தில் வசதியற்ற மற்றவர்களுடன் அந்த உணவைப் பகிர்ந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளேன்,” என்று அவர் கூறினார்.

விநியோகப் பணிகளுக்காக அன்பளிப்புப் பைகளை காரில் வைக்கும் தொண்டூழியர்கள்.
விநியோகப் பணிகளுக்காக அன்பளிப்புப் பைகளை காரில் வைக்கும் தொண்டூழியர்கள். - படம்: சிண்டா

தங்களது நேரத்தை ஒதுக்கி சேவையாற்றிய தொண்டூழியர்களும் இதனை அர்த்தமுள்ள பணியாகக் கருதினர்.

இணையப் பாதுகாப்புத் துறையில் பயிலும் 28 வயது மாணவர் சையத் நபீல் அகமது, இதற்கு முன்னதாக சிண்டாவின் கல்வி ஆதரவைப் பெற்றவர். தான் பெற்ற உதவியைத் திருப்பித் தரும் நோக்கிலேயே சிண்டாவுடன் இணைந்து இத்தொண்டூழியத்தில் ஈடுபடுவதாக அவர் கூறினார். “ஒரு காலத்தில் எனக்கும் உதவி தேவைப்பட்டது. இப்போது என்னால் மற்றவர்களுக்கு உதவ முடிவதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்,” என்றார் அவர்.

ரமலான் காலத்தில் இதுபோன்ற திட்டங்கள் மிகச் சரியான நேரத்தில் வரும் வாழ்வியல் நினைவூட்டல்களாக அமைவதாகக் குறிப்பிட்டார் ‘ஐஎம்யூத்’ இளையர் குழுவின் தலைவரான 26 வயது நூர் சாரா முகமது ரஃபி. “சிங்கப்பூரிலும் தொடர்ச்சியான ஆதரவு தேவைப்படும் குடும்பங்கள் இருக்கின்றன என்பதையும் நாம் தொடர்ந்து அவர்களுக்குக் கைகொடுக்க வேண்டும் என்பதையும் நினைவில்கொள்ள இது உதவுகிறது,” என்று அவர் சொன்னார்.

- படம்: சிண்டா

சிண்டாவுடன் இணைந்து முதன்முறையாகத் தொண்டூழியம் செய்த சிங்டெல் நிறுவன ஊழியர் முகமது சுஹைல், 26 இந்த அனுபவம் தமக்கு மனநிறைவு தந்துள்ளதாக சொன்னார். “பயனாளிகளின் முகங்களில் மலர்ந்த புன்னகையைப் பார்த்தபோது, நாங்கள் உண்மையிலேயே சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறோம் என்பதை உணர முடிந்தது,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்