‘சிங்கைத் திருவிழா’: கிராமியக் கலைகளுடன் குதூகலம்

‘சிங்கைத் திருவிழா’: கிராமியக் கலைகளுடன் குதூகலம்

2 mins read
281180c3-b8fb-46f1-ae4b-23aaefcf001b
நிகழ்ச்சி மேடையில் நடனமணிகளுடன் ஏற்பாட்டாளர்கள். - படம்: சிங்கப்பூர்த் தமிழர்ச் சங்கம்

தமிழகக் கிராமியக் கலை மணம் வீசிய தமிழ்மொழி விழாவின் 20வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ‘சிங்கைத் திருவிழா’ என்ற சிறப்பான நிகழ்வைச் சிங்கப்பூர்த் தமிழ்ச் சங்கம், ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள ஃபிரண்ட்டியர் சமூக மன்றத்தில் ஏற்பாடு செய்தது.

ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற அவ்விழாவில் கிட்டத்தட்ட 403 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.

பாரம்பரிய விளையாட்டுகள், பழமொழிப் போட்டிகள் மூலம் குடும்பங்களும் இளையர்களும் தமிழ் ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.

மயிலாட்டம், கரகாட்டம் ஆகியவற்றுடன் சிறார்களுக்கான கைவினைப்பொருள்கள் செய்யும் பயிற்சிக்கும் விளையாட்டுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மேடையில் சிறுவர்கள் நடனமாடி பார்வையாளர்களை மகிழ்வித்தன.

கைவினை நடவடிக்கைகளில் ஈடுபடும் சிறார்.
கைவினை நடவடிக்கைகளில் ஈடுபடும் சிறார். - படம்: சிங்கப்பூர்த் தமிழர்ச் சங்கம்

பங்கேற்பாளர்களுக்குத் தமிழ்மொழிப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பலவிதமான அங்கங்களை ஏற்பாடு செய்திருந்ததாக விழாவின் இளம் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான 23 வயது பிரவீனா உமாபதி சங்கர் கூறினார்.

மற்றோர் ஏற்பாட்டாளரான 23 வயது ம. சாருமதி, “இன்றைய தலைமுறையினர் தமிழைப் பற்றி ஆழமாகத் தெரிந்துகொள்ளும் வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், மொழி சார்ந்த அவர்களின் அணுகுமுறை புதுமையாக உள்ளது. அந்தப் புதுமைக்கு ஈடுகொடுக்கும் வகையில் நிகைச்சிகளை அமைத்தோம்,” என்றார்.

நிகழ்ச்சியில் தமிழில் சரளமாகப் பேச வாய்ப்புக் கிடைத்ததுடன் இந்தியர்களின் மனநலம் பற்றியும் நன்கு அறிந்துகொண்டதாக, நிகழ்ச்சியில் பங்கேற்ற 33 வயது சமிக்‌ஷா கூறினார்.

இளையர்களையும் குடும்பங்களையும் இவ்வாண்டு தமிழ்மொழி விழாவின் கருப்பொருளின்கீழ் ஒன்றிணைப்பதே இவ்விழாவின் நோக்கம் என ஃபிரண்ட்டியர் இந்திய நற்பணிச் செயற்குழுத் தலைவர் இராமநாதன் அண்ணாமலை தெரிவித்தார்.

வகுப்பறையில் தமிழைப் பாடமாகக் கற்றுக்கொள்வதைவிட, விளையாடிக்கொண்டே தமிழைப் பயில்வது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக இளையர்களும் மாணவர்களும் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்