தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியப் படகோட்டப் போட்டியில் சிங்கப்பூர்க் கொடி

2 mins read
b50d45cc-ca80-48bc-8497-3f831e19dca3
லெஃப்டினண்ட் டேரியஸ் லீ கெங் லீ. - படம்: அனுஷா செல்வமணி

சிங்கப்பூர் கடற்படையில் தேசிய சேவை புரிந்து வரும் லெஃப்டினென்ட் டேரியஸ் லீ கெங் லீ, 21, அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற படகோட்டப் போட்டியில் பங்கேற்று ஆடவர் பிரிவில் இரண்டாம் நிலையை எட்டினார்.

சிங்கப்பூர் குடியரசு கடற்படையில் தேசிய சேவை புரிந்துவரும் லெஃப்டினென்ட் டேரியஸ் லீ கெங் லீ, 21, அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற படகோட்டப் போட்டியில் பங்கேற்று ஆடவர் பிரிவில் இரண்டாம் நிலையை எட்டினார். 
சிங்கப்பூர் குடியரசு கடற்படையில் தேசிய சேவை புரிந்துவரும் லெஃப்டினென்ட் டேரியஸ் லீ கெங் லீ, 21, அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற படகோட்டப் போட்டியில் பங்கேற்று ஆடவர் பிரிவில் இரண்டாம் நிலையை எட்டினார்.  - படம்: இந்தியக் கடற்படைக் கழகம்

சாங்கி தற்காப்புப் படைப்பிரிவில் இருக்கும் அவருக்கு இந்தியக் கடற்படைக் கழகம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் இந்தப் படகோட்டப் போட்டியில் கலந்துகொள்ள அரிய வாய்ப்பு கிட்டியது.

டேரியஸ் அதன் 13வது பதிப்பில் கலந்துகொண்டு சிங்கப்பூர்க் கொடியை உயர பறக்கவிட்டார்.

உலகமெங்கும் இருக்கும் கடற்படை வீரர்களுக்காக ஏற்பாடு செய்யப்படும் ‘அட்மிரல்ஸ் கப் செய்லிங் ரெகட்டா’ எனும் இப்போட்டி, டிசம்பரில் கேரளாவின் எழிமலையில் இடம்பெற்றது.

படைவீரர்களின் சகிப்புத்தன்மையை மதிப்பிடுவதற்கு அப்பாற்பட்டு, படைவீரர்களுக்கிடையே புரிதலையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தும் நோக்கத்தில் இப்போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

முதல் முறையாக இந்தியாவுக்குச் சென்ற லெஃப்டினென்ட் லீக்கு போட்டியில் கலந்துகொண்டதன் மூலம் மட்டற்ற அனுபவங்கள் கிடைத்தன.

“இந்தியா செல்ல இரண்டு நாள்கள் முன்னர்தான் நான் பயிற்சி மேற்கொண்டேன். எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததில் மிகப் பெருமையாக உள்ளது,” என நெகிழ்ச்சியுடன் திரு லீ கூறினார்.

புதிய நாடாக இருந்தாலும் அங்கு தகவமைத்துக்கொள்ள எவ்வித சிரமத்தையும் தாம் சந்திக்கவில்லை என்ற அவர், அதற்கு முக்கியக் காரணம் இந்தியக் கடற்படைக் கழகத்தின் விருந்தோம்பல் எனப் பாராட்டினார்.

நட்புக்கு எவ்வித எல்லைகளும் இல்லை என்பதை இந்தப் போட்டி நன்கு பறைசாற்றியதாகக் கூறிய அவர், இதுபோன்ற போட்டிகள் மூலம் சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு வலுப்படுவதாகச் சொன்னார்.

கேரளாவில் ஒரு வாரம் மட்டுமே இருந்ததை எண்ணி ஒருபுறம் கவலையடைந்தாலும், மறுபுறம் இந்தியாவின் தொன்மையான கலாசாரத்தைப் பற்றி அறிந்துகொண்டதை எண்ணி மகிழ்கிறார் லெஃப்டினென்ட் லீ.

“இந்தியா பற்றி எனக்கு எப்போதும் நல்லெண்ணம் உண்டு. அங்கு சென்ற பிறகு அந்த எண்ணம் இன்னும் மேலோங்கியது. இந்தியக் கடற்படையினர் எங்களுடன் பழகும் விதம் என்னை வெகுவாகக் கவர்ந்தது,” என்று அவர் தெரிவித்தார்.

கேரளாவில் வானிலை டிசம்பரில் சிங்கப்பூரை போலவே இருந்ததாகக் கூறிய லெஃப்டினென்ட் லீ, போட்டியின்போது காற்று பயங்கரமாக வீசியதாகவும் கடல் சீற்றத்துடன் இருந்ததாகவும் சொன்னார். மேலும், ஜப்பானைச் சேர்ந்த படைவீரருடன் நெருங்கிய நட்பை ஏற்படுத்திக்கொண்ட அவர், கூடிய விரைவில் ஜப்பானுக்குச் செல்லவிருப்பதாகவும் பகிர்ந்துகொண்டார்.

இப்போட்டியில் கலந்துகொண்ட பின்னர், பிறருடன் எப்படிப் பழகுவது போன்ற திறன்களை கற்றுக்கொண்டதாகவும் லெஃப்டினென்ட் லீ கூறினார்.

படகோட்டுவதில் எட்டு வயதிலிருந்தே ஆர்வம் காட்டி வரும் அவர், தேசிய படகோட்ட அணியிலும் இடம்பெற்றுள்ளார்.

தொடக்கப்பள்ளியில் படகோட்டும் நடவடிக்கையில் சேர்ந்த பின்னர் அந்த விளையாட்டு மீதான ஆர்வம் தமக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியதாகச் சொன்னார்.

இதுபோன்ற போட்டிகளில் கலந்துகொள்வதால் படகோட்டும் திறனும் மெருகூட்டப்படுவதாக கூறிய அவர், அடுத்து சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் பயிலவுள்ளார்.

குறிப்புச் சொற்கள்