சிங்கப்பூரில் 1956ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிங்கப்பூர் குஜராத்தி சங்கம், கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 28), 70ஆம் ஆண்டுநிறைவைக் கொண்டாடியது.
சங்கத்தின் வரலாற்றைப் பறைசாற்றும் வண்ணம், அந்நிகழ்ச்சியில், ‘எ லெகசி இன் தி லயன் சிட்டி: ஹிஸ்டரி ஆஃப் தி குஜராத்தி கம்யூனிட்டி இன் சிங்கப்பூர்’ எனும் புத்தகம் வெளியீடு கண்டது.
பொங்கோலில் அமைந்துள்ள ‘ஒன் வேர்ல்டு’ அனைத்துலகப் பள்ளி மின்னிலக்க வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஏறக்குறைய 700 பேர் வருகை தந்திருந்தனர்.
19ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல், குஜராத்தியர்கள் கப்பலில் பயணம் செய்து சிங்கப்பூர் வந்ததாகச் சங்கத் தலைவி ஷர்மிலா படேல் விளக்கினார்.
“குஜராத்தியர்களின் பண்பாட்டைக் கட்டிக்காக்கவும், ஒருவருக்கொருவர் பக்கபலமாக இருக்கவும், அவர்கள் சிங்கப்பூருக்கு ஒன்றாக வந்தனர்,” என்றார் அவர்.
“இந்த ஒற்றுமையின் அடிப்படையில்தான், சிங்கப்பூர் குஜராத்தி சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. பல தலைமுறைகளை ஒன்றிணைத்து, சிங்கப்பூரின் பல்லினச் சமுதாயத்தை வளப்படுத்தி, ஒற்றுமை, முன்னேற்றம் போன்ற விழுமியங்களுக்கு இலக்கணமாய் விளங்கும் ஒரு சமூகம் சிங்கப்பூர் குஜராத்தி சங்கம்,” என்று ஷர்மிலா கூறினார்.
சமூகத்திற்குப் பங்காற்றும் ஓர் உன்னத நோக்குடன் சிங்கப்பூர் சமூக உண்டியல் சிங்கப்பூருக்கு (Community Chest Singapore) $15,071 மதிப்பிலான காசோலையைச் சங்கம் வழங்கியது. இந்தியப் பாரம்பரியத்தில் ஒரு வெள்ளி சேர்த்துக்கொடுப்பது வளர்ச்சியைக் குறிப்பதாலும் சங்கத்திற்கு 70 ஆண்டுகளாகியிருப்பதாலும், குறிப்பாக இத்தொகை வழங்கப்பட்டது.
பிரதமர் அலுவலக அமைச்சரும், தேசிய வளர்ச்சி, நிதி இரண்டாம் அமைச்சருமான குமாரி இந்திராணி ராஜா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
“முந்தைய தலைமுறையினர் வர்த்தகத்தில் அதிகம் ஈடுபட்டிருந்தாலும், தற்போது சிங்கப்பூர் குஜராத்திகளில் பலர், சட்டம், தொழில்முனைவு, அரசாங்கச் சேவை உள்ளிட்ட துறைகளில் பங்காற்றி வருகின்றனர்,” என்றார் அவர்.
காத்தோங் சென்டர், சிண்டா போன்ற அடித்தள அமைப்புகளுடன் இணைந்து சமூக ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதில் இச்சங்கம் வகிக்கும் முதன்மைப் பங்கை அமைச்சர் சுட்டினார்.
“இந்த ஒற்றுமையையும், மீள்திறனையும் சிறப்பாகப் படம்பிடித்துள்ளது இப்புத்தகம். மக்கள் தங்களுடைய மரபோடும் கலாசாரத்தோடும் ஒன்றி இருக்கும் அதேநேரம், பல கலாசாரங்களுக்கு இடையில் ஒரு தொடர்பை வளர்த்து, நாட்டின் வளர்ச்சிக்கு நன்முறையில் பங்காற்றலாம் என்பதற்கு இப்புத்தகம் ஒரு சிறந்த நினைவூட்டலாக அமைந்துள்ளது,” என்று கூறினார் குமாரி இந்திராணி.
சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் டாக்டர் ஷில்பாக் அம்புலே, சிங்கப்பூருக்கான பிரிட்டிஷ் தூதர் நிகேஷ் மேத்தா போன்றோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
நூலாசிரியரும் ஆய்வாளருமான திருவாட்டி பாருல் திரிவேதி ஷா, 12 ஆண்டுகளாக இந்நூலுக்காகக் கிட்டத்தட்ட 200 பேரை நேர்காணல் செய்தார். 2023ல் தேசிய மரபுடைமைக் கழகத்தின் பெருந்திட்ட மானியத்தை இப்புத்தகம் பெற்றது.
“மனந்திறந்து பேசி, தங்கள் குடும்பக் கதைகளை என்னோடு பகிர்ந்த அனைவருக்கும் உளமார்ந்த நன்றி,” என்றார் திருவாட்டி பருள்.
நேர்காணலின்போது, “நான் இறப்பதற்குமுன் இந்தப் புத்தகம் வெளியீடு காணுமா?” என்று ஒருவர் கேட்ட தருணம் தம்மை உணர்ச்சிவசப்பட வைத்ததாக அவர் நினைவுகூர்ந்தார். புத்தகத்தில் பதிவு செய்யப்பட்ட சிலர், புத்தகம் வெளியீடு காண்பதற்குமுன் இறந்துவிட்டதாக அவர் கூறினார்.
“அவர்களுடைய கதைகள் நம்மை ஒரு மனிதராக வளப்படுத்துவதோடு, 19ஆம் நூற்றாண்டு முதல் குஜராத்தி சமூகம் எத்தகைய பரிமாண வளர்ச்சியைக் கண்டுள்ளது என்ற புரிதலையும் ஏற்படுத்தும்,” என்றார் அவர்.
அமைப்பின் நெடுநாள் உறுப்பினரும், புத்தகத்திற்குப் பங்களித்தவருமான 69 வயது சேட்டன் எம் பாரிக், நூலை எழுதுவதற்காகப் பழைய, குடும்பப் புகைப்படங்களைப் புரட்டிப் பார்த்ததாகச் சொன்னார்.
தங்கள் சங்கம் எவ்வாறு சிங்கப்பூரில் தோற்றம் கண்டது என்பதை இளம் தலைமுறையினருக்கு எடுத்துச்சொல்ல இதுபோன்று வரலாற்றைப் பதிவிடுவது அவசியம் என்றார் அவர்.
வணிகத்துறை வல்லுநரான 25 வயது ஷ்ருதி கக்லானி, சிங்கப்பூர் குஜராத்தி சங்கத்தின் இளையர் பிரிவான ‘எஸ்ஜிஎஸ் யுவா’வில் உறுப்பினராக உள்ளார்.
15 முதல் 30 வயது வரையிலான குஜராத்தி இளையர்களுக்கு மாதாந்தர நடவடிக்கைகளை ஏற்பாடு செய்கிறது ‘எஸ்ஜிஎஸ் யுவா’.
“நம் பெற்றோர், தாத்தா பாட்டி போலல்லாமல், இன்றைய தலைமுறையினர் கலாசாரத்தையும் பண்பாட்டையும் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. அதனால், நம் அடையாளத்தைக் கொண்டாடவும், நம்முடைய வரலாற்றைப் பதிவிடவும் இந்த புத்தகம் ஓர் உகந்த வழி என்று நினைக்கிறேன்,” என்றார் குமாரி ஷ்ருதி.
“குஜராத்திலிருந்து வந்திருந்தாலும் உங்களுடைய எதிர்காலம் சிங்கப்பூரில்தான் என்பதையே எங்கள் குழந்தைகளுக்கு எடுத்துக்கூற விரும்புகிறோம்,” என்று திரு சேட்டன் குறிப்பிட்டார்.

