துபாயில் முதன்முறையாக நிகழ்ச்சி படைக்கும் ‘ரீஇன்கார்னேஷன்’ இசைக்குழு

துபாயில் முதன்முறையாக நிகழ்ச்சி படைக்கும் ‘ரீஇன்கார்னேஷன்’ இசைக்குழு

படம்: சேது ஃபிரேம்ஸ்

30 Oct 2026 - 6:13 am

2 mins read

சிங்கப்பூரில் பல்வேறு இசை நிகழ்ச்சிகளைப் படைத்துள்ள ‘ரீஇன்கார்னேஷன்’ (Re-inKarnation) இசைக்குழு, தீபாவளிப் பண்டிகையையொட்டி துபாயில் தனது முதல் கச்சேரியை நிகழ்த்தி முத்திரை பதிக்க ஆயத்தமாகி வருகிறது.

‘ரீஇன்கார்னேஷன் ஒரு மாலை: லைவ் இன் துபாய்’ (Re-inKarnation Oru Maalai: Live in Dubai) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் ‘ஃபிர்தவுஸ் ஸ்டுடியோ’வில் வரும் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது.

‘ரீஇன்கார்னேஷன் ஒரு மாலை: லைவ் இன் துபாய்’ என்ற இசை நிகழ்ச்சி, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் ‘ஃபிர்தவுஸ்’ ஸ்டுடியோவில் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது.
‘ரீஇன்கார்னேஷன் ஒரு மாலை: லைவ் இன் துபாய்’ என்ற இசை நிகழ்ச்சி, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் ‘ஃபிர்தவுஸ்’ ஸ்டுடியோவில் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது. - படம்: அக்‌ஷரா கிரியேஷன்ஸ்

ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கான சிங்கப்பூர்த் தூதர் கமல் வாஸ்வானி இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.

இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவை இசையின் வழியாகக் கொண்டாடுவதுடன், சிங்கப்பூர்க் கலைஞர்களின் படைப்புகளை அனைத்துலக மேடையில் அறிமுகப்படுத்துவதும் இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

நீலமணி அறக்கட்டளையின் ஆதரவுடன், ஸ்டோரீஸ் நிறுவனத்தின் பங்களிப்பில், அக்‌ஷரா கிரியேஷன்ஸ் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கிறது.

கர்நாடக இசை பாணியிலான சிறப்பு இசைக்கோப்புகள், நேரடி இசை, டிஜே கலவை ஆகியவற்றுடன் பழைய தமிழ்த் திரையிசைப் பாடல்கள், மலையாளம், இந்தி எனப் பல்வேறு மொழிகளிலும் இசை நிகழ்ச்சி அமையவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் ‘உனக்காகத்தானே (க்ஷீர சாகரா)’ (Unakaaga Thaane (Ksheera Sagara)) என்ற புதிய பாடலையும் இசைக்குழு முதன்முறையாக வெளியிடவுள்ளது. பிள்ளைகளைப் பிரிந்து வாழும் பெற்றோரின் அன்பை மையமாகக் கொண்ட இப்பாடலைக் கௌஷிக் சுரேஷ், அக்‌ஷரா கௌஷிக், தர்ஷனா மகாதேவன் ஆகியோர் பாடியுள்ளனர்.

தேசியக் கலை மன்றத்தின் 2026ஆம் ஆண்டுக்கான இளம் கலைஞர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இசைக் கலைஞர் கௌஷிக் சுரேஷ் இந்நிகழ்ச்சியை வடிவமைத்துள்ளார்.

அவருடன் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற கணேஷ் வெங்கட்ராமன், வயலின் கலைஞர் வெங்கடேஷ், தாள வாத்தியக் கலைஞர் கணேஷ் முருசாமி, டிஜே கஜேந்திரன், கீபோர்டு கலைஞர் ஷேக் மீரா ஆகியோர் மேடையேறவுள்ளனர். சிங்கப்பூரின் இளம் பாடகர்களான ஷிவானி ஹரிஹரனும் அக்‌ஷரா கௌஷிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

தந்தை கௌஷிக் சுரே‌ஷுடன் அக்‌ஷரா கௌஷிக்.
தந்தை கௌஷிக் சுரே‌ஷுடன் அக்‌ஷரா கௌஷிக். - படம்: சேது ஃபிரேம்ஸ்

சிங்கப்பூரில் ‘ரீஇன்கார்னேஷன்’ இசைக்குழு நடத்தியுள்ள நிகழ்ச்சிகளில் பல்வேறு இசை பாணிகளும் வடிவங்களும் இடம்பெற்றுள்ளன.

கடந்த 2025 செப்டம்பர் மாதத்தில் பிஜிபி மண்டபத்தில் வீணைக் கலைஞர் ராஜேஷ் வைத்யாவுடன் இணைந்து நடத்திய ‘ராகங்கள் 16’ நிகழ்ச்சியில் கர்நாடக இசையும் தமிழ்த் திரையிசையும் இடம்பெற்றன.

இவ்வாண்டு ஏப்ரல் மாதம் தமிழ்மொழி மாதத்தையொட்டி நடைபெற்ற ‘ரீஇன்கார்னேஷன் திருவிழா’ நிகழ்ச்சியில், கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் 70க்கும் மேற்பட்ட பாடல்கள் ‘மெட்லி’ வடிவில் வழங்கப்பட்டன.

சிங்கப்பூர்க் கலைப்பள்ளியில் இவ்வாண்டு தமிழ் இளையர் விழாவை முன்னிட்டு செப்டம்பரில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சூப்பர் சிங் அலோங்’ நிகழ்ச்சியில் 60 பாடல்கள் படைக்கப்பட்டன. விஜய் தொலைக்காட்சியின் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சிப் பாடகர்களான பூஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியை 200க்கும் மேற்பட்டோர் கண்டுகளித்தனர்.

தமிழ் முரசின் ‘இளைய தலைமுறை’யும் ‘ரீஇன்கார்னேஷன்’ இசைக்குழுவும் இணைந்து இவ்வாண்டு மே மாதம் நடத்திய ‘ஆரா 10/10’ (Aura 10/10) நிகழ்ச்சியில், பாடல்களின் வழியாக இளையர்களின் வாழ்வியல் கருத்துகள் கலந்துரையாடப்பட்டன.

குறிப்புச் சொற்கள்