பத்தாண்டு நிறைவைக் கொண்டாடும் சிங்கப்பூர் தேசியக் கலைக்கூடம்

2 mins read
1c0062a2-c6e0-4b0b-949c-145c7fe10e91
சிங்கப்பூர் கலைக்கூடத்தின் 10ஆம் ஆண்டு கொண்டாட்டங்களுக்காக நடைபெறும் பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இலவசம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் தேசியக் கலைக்கூடம், நவம்பரில் தனது 10ஆம் ஆண்டு நிறைவை எட்டுகிறது.

அதைக் குறிக்கும் வகையில் நவம்பர் 15, 16ஆம் தேதிகளில் கொண்டாட்டங்கள் நிகழவுள்ளன.

இந்தக் கொண்டாட்ட நாள்களில் முழுவதும் 10க்கும் மேற்பட்ட கண்காட்சிகளைப் பொதுமக்கள் இலவசமாகக் காணலாம்.

சாதாரண நாள்களில் இரவு 7 மணிவரை இயங்கும் கலைக்கூடம், இவ்விரு நாள்களிலும் இரவு 10 மணிவரை பொதுமக்களை வரவேற்கும்.

“சிங்கப்பூர் கலைக்கூடம், வெறும் பத்தாண்டுகளில் மக்களுக்குச் சொந்தமான ஒரு கலாசார அடையாளமாக மாறியுள்ளது,” என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரியும் இயக்குநருமான யூஜின் டான் கூறினார்.

ஆடை, அணிகலன், உணவு, வடிவமைப்பு என மொத்தம் 13 உள்ளூர் வர்த்தகங்களை உள்ளடக்கிய ஒரு சிறப்புச் சந்தை கலைக்கூடத்தில் இடம்பெறும்.

வர்த்தகங்களின் விற்பனைமூலம் ஈட்டப்படும் வருவாயின் ஒரு பகுதி, கலைக்கூடம் மற்றும் வருங்காலத் திட்டங்களை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொண்டாட்டங்கள், நவீன மின்னிலக்க வழிகளிலும் நீடிக்கும். கலைக்கூடத்தின் பத்தாண்டு பயணத்தைப் பறைசாற்றும் விதமாக ஒரு புதிய குறுந்தளம் நிறுவப்படும்.

சிங்கப்பூரை பிரதிபலிக்கும் ‘மைலோ’ வண்டி, ‘டுடு குவே’ போன்ற உள்ளூர் உணவு, பான வகைகளைப் பொதுமக்கள் உண்டு ருசிக்கலாம்.

குர்மித் சிங் உட்பட பிரபல உள்ளூர் கலைஞர்கள் சுவாரசியமான முறையில் சிங்கப்பூர் கலைக்கூடத்தைச் சுற்றிக்காட்டவுள்ளனர். கலைக்கூட பிரதிநிதிகளுடன் இணைந்து கலை குறித்த வெளிப்படையான கண்ணோட்டங்களை அவர்கள் பகிர்ந்துகொள்வார்கள்.

கலைக்கூடத்தின் அர்த்தமுள்ள தருணங்களைச் சித்திரிக்கும் வண்ணத்தில், பொதுமக்களால் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உச்ச நீதிமன்றத்தின் மேல்மாடியில் காட்சிக்கு வைக்கப்படும்.

அத்துடன், சிறுவர்களுக்காக கெப்பல் கலைக்கல்வி மையத்தில் கலை நடவடிக்கைகளும் பட்டறைகளும் இடம்பெறும்.

சிங்கப்பூர் கலைக்கூடத்தின் 10ஆம் ஆண்டு கொண்டாட்டங்களுக்காக நடைபெறும் பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இலவசம். தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றுக்குப் பதிவு அவசியம்.

நிகழ்ச்சி நிரல், பதிவுகள், மேல்விவரங்களுக்கு www.galleryturns10.sg எனும் இணையப்பக்கத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்