சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் பொன்விழாக் கொண்டாட்டம்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் பொன்விழாக் கொண்டாட்டம்

இரண்டு நாள் இலக்கிய விழா
படம்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

12 Nov 2026 - 6:57 am

2 mins read

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், தனது பொன்விழா ஆண்டைக் கொண்டாடும் வகையில், வரும் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் (நவம்பர் 14, 15) விக்டோரியா ஸ்திரீட்டில் உள்ள தேசிய நூலகத்தில் இரண்டு நாள் இலக்கிய விழாவை நடத்தவுள்ளது.

கலாசார, சமூக இளையர்துறை; மனிதவள துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ், சனிக்கிழமை விழாவைத் தொடங்கி வைக்கவுள்ளார்.

அன்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் தொடக்க விழாவில், தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் பாரதி கிருஷ்ணகுமார், முனைவர் பிரகாஷ் (இலக்கியப்பித்தன்), கவிஞர் தங்கம் மூர்த்தி ஆகியோருடன் சிங்கப்பூரின் எழுத்தாளர்கள், அறிஞர்கள், இலக்கிய ஆர்வலர்களும் இவ்விழாவில் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை முழுவதும் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

காலை நிகழ்ச்சியாக இலக்கியக் கருத்தரங்கு நடைபெறும். இதில் அறிஞர்களும் பேச்சாளர்களும் ஒன்றுகூடி, தமிழ் இலக்கியம், இன்றைய காலகட்டத்தில் அதன் தொடர்ச்சியான முக்கியத்துவம் குறித்து விவாதிப்பார்கள்.

பிற்பகலில் நடைபெறும் கவியரங்கில் ஆறு கவிஞர்கள் தங்களது படைப்புகளைப் படைத்து, தமிழ்க் கவிதைகளின் செழுமையையும் பன்முகத்தன்மையையும் வெளிப்படுத்துவார்கள்.

அதனைத் தொடர்ந்து இளைய தலைமுறையினரை உள்ளடக்கிய சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும். ‘இயக்குநர் பார்வை - திரைப்படமாகும் உள்ளூரப் படைப்புகள்’ எனும் தலைப்பில் இடம்பெறும் இந்நிகழ்ச்சி, இளம் தலைமுறையினரிடையே தமிழ்மொழி, இலக்கியச் செயல்பாடுகள் மீதான ஆர்வத்தை வளர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தும்.

கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலான தொடர்புகளை ஆராயும் பாரம்பரியத் தமிழ்ப் பட்டிமன்றத்துடன் பொன்விழாக் கொண்டாட்டங்கள் நிறைவுபெறும்.

தமிழ் இலக்கிய மரபுகளைப் பாதுகாப்பதோடு, புதிய சிந்தனைகளையும் சமகாலப் படைப்பாற்றலையும் ஊக்குவிப்பதில் கழகம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் எடுத்துக்காட்டுகின்றன என்று எழுத்தாளர் கழகம் குறிப்பிட்டது.

தற்போது கழகத்தில் 123 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் வாழ்நாள் உறுப்பினர்கள். மேலும், இளையர் பிரிவில் 23 உறுப்பினர்கள் உள்ளனர்.

தனது பொன்விழாவைக் கொண்டாடும் எழுத்தாளர் கழகம், சிங்கப்பூரைத் தாண்டியும் கழகத்தின் இலக்கியப் பங்களிப்பு விரிவடைந்துள்ளதைச் சுட்டியது.

ஐம்பது ஆண்டுகள் என்பது ஒரு மகத்தான இலக்கியப் பயணத்தை மட்டுமல்ல; சிங்கப்பூரில் தமிழ்மொழியைப் படைப்பாற்றல் மிக்கதாகவும், காலத்திற்கேற்ற வகையில் பொருத்தமானதாகவும், தொடர்ந்து உயிர்ப்புடன் நிலைத்திருக்கச் செய்வதற்கான கழகத்தின் அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுவதாக அது குறிப்பிட்டது. 

மேல்விவரங்களுக்கு: எஸ்.முத்துமாணிக்கம் (தலைவர்) – 9773 2750, பிரேமா மகாலிங்கம் (செயலாளர்) – 9169 6996.

குறிப்புச் சொற்கள்