கண்கவர் வண்ணங்களில் வானை மிளிரவைத்த வண்ணப் பறவைகள், பெற்றோர், பிள்ளைகளை உற்சாகமூட்டிய விளையாட்டுகள், மக்கள் கூட்டத்திற்கு மெருகூட்டிய ‘தி கிரேட் சிங்கப்பூர் வொர்க்அவுட்’ உடற்பயிற்சி நிகழ்ச்சி என சிங்கப்பூரின் 59வது பிறந்தநாளுக்கு ஆகஸ்ட் 11ஆம் தேதி சிங்கப்பூர் விளையாட்டு நடுவம் விழாக்கோலம் பூண்டிருந்தது.
இந்த ‘மாஜுலா’ கொண்டாட்டத்தில் ‘செல்லப் பறவைகளின் மிகப்பெரிய கூட்டம்’ மற்றும் ‘ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் செல்லப் பறவைகள் வானத்தில் பறக்கவிட்ட வேட்கை’ என இரண்டு சிங்கப்பூர் சாதனைகளை சிங்கப்பூர் விளையாட்டு நடுவம் படைத்தது.
வந்திருந்தோர், பறவைகளுடன் புகைப்படம் எடுத்து அவற்றுக்கு உணவளிக்கும் அங்கங்களும் இடம்பெற்றன.
பறவைகளின் வண்ணமய சாகசங்கள் ஒருபுறமிருக்க, உள்ளூர் கைவினைஞர்களைக் கொண்டாடும் பொருட்டு, 21 சிறிய வணிகங்கள் பங்கேற்ற ‘அலைவ் ஆர்டிசன்ஸ் மார்க்கெட்’ எனும் கைவினைப் பொருள் சந்தையும் நடைபெற்றது.
“மற்ற உள்ளூர் வணிகர்களின் கைவினைத் திறமையை இதுபோன்ற வணிகச் சந்தைகளின் மூலம் பாராட்டுவது தேசிய தினக் கொண்டாட்டங்களுக்கு மெருகூட்டுகிறது,” என்றார் ஓவியரும் வணிகருமான டேனா லியோரா.
மேசைப்பந்து, வில்வித்தை, குழிப்பந்தாட்டம், பூப்பந்து, கூடைப்பந்து என 10க்கும் மேற்பட்ட விளையாட்டுகளை சிறுவர்களும் பெற்றோரும் வயது பாராமல் விளையாடினர்.
“பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுகளில் சிங்கப்பூருக்கு பல விளையாட்டு வீரர்கள் பெருமை சேர்த்து நம் தேசிய தினக் கொண்டாட்டங்களைச் சிறப்பித்துள்ளனர். அதைக் கருத்தில் கொண்டு, சிறுவர்களுக்கு இதுபோன்ற விளையாட்டுகளின் மீது ஆர்வம் இருந்தால், பெற்றோர் அவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும்,” என்றார் தாயார் ஷர்மிளா பேகம்.
விளையாட்டுகளுடன், சிறுவர்களுக்கான வண்ணம் தீட்டுதல், முகச்சாயம், மெர்லயன் பொம்மை வடிவமைத்தல் எனக் கலை நடவடிக்கைகளும் இடம்பெற்றன.
“நம் நாட்டைச் சார்ந்த அம்சங்களைச் சிறுவர்களிடம் கொண்டுசேர்ப்பதால் இதுபோன்ற நடவடிக்கைகள் முக்கியம் எனக் கருதுகிறேன்,” என்றார் மெர்லயன் பொம்மை தயாரிக்கும் நடவடிக்கையை வழிநடத்திய அனிசா அன்சாரி.
கொண்டாட்டங்களின் உற்சாகத்தைக் கூட்ட சிங்கப்பூர் விளையாட்டு நடுவத்தின் பரந்த திடலில் பலரும் ஒன்றுகூடி பாடல்களின் தாளத்துக்கு ஏற்றாற்போல் உடற்பயிற்சி செய்து, ‘முவே தாய்’ தற்காப்புக் கலை போன்றவற்றில் ஈடுபட்டனர்.
ஆகஸ்ட் 9 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெற்ற இந்த ‘மாஜூலா’ கொண்டாட்டங்களை ‘காலாங் அலைவ்’ விளையாட்டு மேலாண்மை மற்றும் சிங்கப்பூர் விளையாட்டு மன்றம் சேர்ந்து ஏற்பாடு செய்தன. இது, ஆண்டுதோறும் நடைபெறும் ‘கெட் ஆக்டிவ்’ இயக்கத்தின் ஒரு பகுதியாகும்.
சிங்கப்பூரின் 59வது தேசிய தினத்தைப் பறைசாற்றும் விதத்தில் சமூக உணர்வு, குடும்பப் பிணைப்பு நிறைந்து இந்த ‘மாஜூலா’ கொண்டாட்டம் அமைந்திருந்தது.