சிங்கப்பூரர் மூவர் தங்கள் அன்றாடப் பொறுப்புகளுக்கு இடையிலும் நேரம் ஒதுக்கி, ஆப்பிரிக்காவில் இருக்கும் வசதி குறைந்த மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
முகம்மது அஷ்ராவ் ஷாஜகான், 25, சகோதரர்கள் அப்துல் ஹக்கீம் பின் அப்துல் ஜபார், 25, அப்துல் ஹஃபீஸ் பின் அப்துல் ஜபார், 37, ஆகிய மூவரும் இணைந்து ‘எ லிட்டில் பெட்டர்’ (A Little Better) என்ற அறநிறுவனத்தை நடத்தி வருகின்றனர். அந்நிறுவனம் உகாண்டா நாட்டில் வறுமையில் வாழும் மக்களுக்கு ஆதரவளித்து வருகிறது.
உகாண்டாவின் ‘நமிரி’ அறநிறுவனத்துடன் இணைந்து செயல்படும் இவர்கள், பாலிசா, புதேபோ, சிரோன்கோ, புகேதியா, புதலேஜா ஆகிய ஐந்து மாவட்டங்களில் வாழும் மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி வருகின்றனர்.
2024ஆம் ஆண்டு திரு ஹஃபீஸ் தொடங்கிய அந்த அமைப்பு, முதலில் இந்தோனீசியாவின் பாத்தாம் தீவில் உள்ள மக்களுக்கு உதவி வந்தது. இவரது நற்பணிகளைக் கண்ட ‘நமிரி’ அறநிறுவனம், இன்ஸ்டகிராம் வாயிலாக அவரைத் தொடர்புகொண்டது. அதன் விளைவாக, ‘எ லிட்டில் பெட்டர்’ அமைப்பின் சேவை எல்லைகள் ஆப்பிரிக்காவரை விரிவடைந்தன.
2025ஆம் ஆண்டு ‘எ லிட்டில் பெட்டர்’ உகாண்டா மக்களுக்கு உதவும் பணியைத் தொடங்கியது; அவ்வாண்டு ஹஜ்ஜுப் பெருநாளின்போது குர்பான் சேவைக்கும் ஏற்பாடு செய்தது.
நன்கொடைகள்மூலம் திரட்டப்படும் பணத்தைக் கொண்டு அரிசி, மாவு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருள்களைக் குடும்பங்களுக்கு அந்நிறுவனம் வழங்குகிறது. அத்துடன், கிராமப்புறங்களில் சமூகப் பயன்பாட்டுக்கான குடிநீர்க் கிணறுகளையும் அமைத்துத் தருகிறது. இதுவரை 46 குடிநீர்க் கிணறுகளை அமைத்து, கிராமவாசிகள் ஏறத்தாழ 10,000 பேருக்குத் தூய குடிநீர் கிடைக்க அது வழிவகுத்துள்ளது. இவ்வாண்டு இறுதிக்குள் கிணறுகளின் எண்ணிக்கையை 100ஆக உயர்த்துவது இலக்கு.
“மக்களுக்கு உதவும்போது, நாங்கள் அவர்களுக்குச் சேவை செய்கிறோம் என்று நினைத்தே செய்கிறோம். நாங்கள் அங்குச் செல்லாமல் இருந்திருந்தாலும் அந்தக் குடும்பங்கள் தங்களது அன்றாட வாழ்க்கையைத் தொடர்ந்து வாழும் என்பதைப் புரிந்துகொண்டு, பணிவுடன் சேவையாற்றுகிறோம்,” என்றார் அப்துல் ஹஃபீஸ்.
தங்களின் சொந்தப் பணத்தைச் செலவிட்டு, இந்த இளையர் மூவரும் இவ்வாண்டு ஜூன் மாதம் உகாண்டா சென்றிருந்தனர்; தாங்கள் மேற்கொண்ட நற்பணிகளின் விளைவுகளை நேரில் கண்டு மகிழ்ந்தனர்.
“உகாண்டா மக்களிடம் செல்வ வளம் இல்லை; ஆனால் மற்றவர்களுக்குக் கொடுக்க அவர்கள் எப்போதும் தயாராக உள்ளனர். அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதைப் பார்ப்பது மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது,” என்றார் முகம்மது அஷ்ராவ்.
மேலும், “சிங்கப்பூரில் வாழும் நமக்கு ஏராளமான வாய்ப்புகளும் தெரிவுகளும் உள்ளன, ஆனால் அவர்களுக்கு அப்படி இல்லை. தண்ணீர் போன்ற அடிப்படைத் தேவையைப் பெறக்கூட அந்த மக்கள் ஒரு மணி நேரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. சிலருக்கு நாள் முழுவதும் உணவும் கிடைப்பதில்லை,” என்று அவர் கூறினார்.
நமிரி அறநிறுவனத்தின் இயக்குநரான மகால ஸ்வைபு, தம் தந்தையைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டுமுதல் இந்தச் சமூகச் சேவையைச் செய்து வருகிறார். அறநிறுவனங்களின் உதவியுடன் திரு ஸ்வைபுவின் வழிகாட்டுதலுடன் இதுவரை ஐந்து பள்ளிவாசல்கள் கட்டப்பட்டுள்ளன; 100க்கும் மேற்பட்ட குடிநீர்க் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.
“உகாண்டா தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு இரண்டு அமெரிக்க டாலர்க்கும் குறைவாகவே சம்பாதிக்கின்றனர். சில குடிநீர்க் கிணறுகளைக் கால்நடைகளும் பயன்படுத்துவதால், நோய்கள் பரவும் அபாயம் ஏற்படுகிறது. எனவே, சிங்கப்பூர் நண்பர்கள் அளிக்கும் உதவிகளுக்கு மிகுந்த நன்றிக்கடன்பட்டுள்ளோம்,” என்று ஸ்வைபு குறிப்பிட்டார்.


