லெங்கொக் பாரு வட்டாரத்தில் மூன்று ஆண்டுகளாகத் அண்டைவீட்டாருக்கு இலவச உணவுகளை வழங்கும் திட்டம்மூலம் உதவி வருகிறார் 48 வயது திருவாட்டி Marlina Yased மர்லினா யஸீத்.
தமது திட்டத்திற்கு திருவாட்டி மர்லினா வைத்த பெயர் ‘ஹெல்த்தி யு அண்ட் மீ’.
“அவசரமாக உணவு தேவைப்படும் மக்கள் இங்கிருந்து உணவு எடுத்துக்கொள்ளலாம். எங்களிடம் 7 பேர் கொண்ட குழு உள்ளது. சலவைத் தூள் போன்ற பொருள்களைச் சிலரால் வாங்க முடியாமல் இருக்கலாம்.அது போன்ற பொருள்கள் வாங்கவும் உதவ விரும்புகிறேன்,” என்று விளக்கினார் திருவாட்டி மர்லினா.
சிங்கப்பூர் கனிவன்பு இயக்கத்தின்கீழ் செயல்படும் 24 இயக்கங்களில் திருவாட்டி மர்லினாவின் ‘ஹெல்த்தி யு அண்ட் மீ’ திட்டமும் ஒன்று.
திருவாட்டி மர்லினா போலவே சமூகத்திற்கு உதவும் திட்டங்களைத் தொடங்கிய ஏறத்தாழ 280 பேர் கெளரவிக்கபட்டனர்.
‘ஒன்றாக சிறந்து விளங்குவோம்’ என்ற கருப்பொருளில் 14வது ‘சிங்கப்பூர் கனிவன்பு தினம்’ வெள்ளிக்கிழமை (மே 29) கொண்டாடப்பட்டது.
சிங்கப்பூர் கனிவன்பு இயக்கம், நில போக்குவரத்து ஆணையத்துடன் இணைந்து தன்னார்வத் தொண்டுகளில் மக்களைஈடுபடுத்த ‘ஒன்மேப்’ செயலியில் ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
மக்கள் ஒருவருக்கொருவர் மரியாதையுடன் நடந்துகொள்ளும்போது அவர்களுக்கிடையே ஒரு பிணைப்பு ஏற்படுகிறது. அந்தப் பிணைப்புதான் சமூகத்திற்கு பங்களிக்க அனைவரையும் தூண்டுகிறது என்று நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கலாசார, சமூக, இளையர்துறைத் தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ பகிர்ந்தார்.
தொடர்புடைய செய்திகள்
“மக்கள் நற்பண்புகளுடன் நடந்துகொள்ள முயன்றாலும் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தங்கள் காரணமாக அவர்கள் கனிவாக நடந்துகொள்ளவது சவாலாக இருக்கும். இருப்பினும் நாம் அனைவரும் முயல வேண்டும்,” என்றார் சிங்கப்பூர் கனிவன்பு இயக்கத்தின் நிர்வாக இயக்குநர் மிஷேல் டூ தேவ்.
சிங்கப்பூர் கனிவன்பு இயக்கத்தின்கீழ் செயல்படும் மற்றோரு திட்டம், கிட்ஸ் பிளேசேஃபர்’.
அந்த திட்டம், இணையப் பயன்பாட்டின் சிக்கல்களைக் கையாளுவதற்குத் தேவையான திறன்களைக் குடும்பங்களுக்கு வழங்கும் ஒரு முயற்சி.
இணையப் பாதுகாப்பை மையமாகக் கொண்டு செயல்படும் ‘கிட்ஸ் பிளேசேஃபர்’ திட்டத்தைத் திருவாட்டி சாண்ட்ராவின் தொடங்கினார்.
திருவாட்டி சாண்ட்ரா விளையாட்டின்மூலம் மின்னியல் வளங்களைப் பாதுகாப்பானதாகவும் இரக்கமுள்ளதாகவும் மாற்ற முயல்கிறார்.
“கனிவாக இருப்பது என்பது நல்லவற்றை பேசுவது மட்டுமல்ல, ஒரு புண்படுத்தும் செய்தியைப் பரவலாக்குவதற்குமுன் நிதானித்து யோசிப்பதே ஆகும்,” என்றார் சாண்ட்ரா.
“நாங்கள் உருவாக்கிய கிட்ஸ் பிளே சேவர் விளையாட்டு முழுவதும் நிஜச் சூழல்களை அடிப்படையாகக் கொண்டது. அதனை எவ்வாறு மேம்படுத்தலாம் என்று நாங்கள் மாணவர்களிடமும் கலந்துரையாடினோம்,” என்று அவர் மேலும் கூறினார்.
சிங்கப்பூர் கனிவன்பு இயத்தில் பெரியோர் மட்டுமல்ல பதினம வயதினரும் பங்களிக்க முன்வருவதைக் காண முடிகிறது.
திருவாட்டி மர்லினாவின் 12 வயது மகன் ரஃபீக், தமது நண்பர்களுடன் அவசரகால சிறப்புக் காவல்படையைப் போலவே ஒரு குழுவை அமைத்து தங்களது வட்டாரங்களை ஒவ்வொரு நாளும் ஒரு மணிநேரம் சுற்றிவந்து ஏதேனும் ஆபத்தான அல்லது சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளை அம்மாவிடம் தெரிவிப்பார்.
திருவாட்டி மர்லினா அதனை தகுந்த அமைப்புகளிடமோ அதிகாரிகளிடமோ தெரிவிப்பார்.
“ஒரு முறை நான் என் நண்பர்களுடன் வட்டாரத்தைச் சுற்றிவந்தபோது, எரிவாயு கலன் ஒன்று அடுக்குமாடி கீழ்த்தளத்தில் கிடப்பதைப் பார்த்தேன். அதுவெடிக்கக்கூடிய ஓர்அபாயகரமான பொருள் என்பதால் உடனடியாக அம்மாவிடம் தெரிவித்தேன்,” என்றார் ரஃபீக்.

