சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றமும், ஹார்மனி சென்டரும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த வருடாந்தர நிகழ்ச்சியான சமய நல்லிணக்கப் ‘பெருநாள்’ கொண்டாட்டம், கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17), ஆர்ச்சர்ட் சிட்டி சென்டர் ஹாலிடே இன் ஹோட்டலில் நடைபெற்றது.
‘வெவ்வேறு சுரங்கள், ஒரே இசை’ எனும் கருப்பொருளில் நடைபெற்ற சமயங்களுக்கு இடையிலான இந்நிகழ்ச்சியில், பல்வேறு சமயங்களைச் சேர்ந்த சமயத் தலைவர்கள், பிரதிநிதிகள், மாணவர்கள், இளையர்கள் என ஏறக்குறைய 150 பேர் கலந்துகொண்டனர்.
முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சரும், உள்துறை மூத்த துணை அமைச்சருமான முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். சமூகங்களுக்கு இடையே பாலமாகத் திகழும் சமயத் தலைவர்களின் பங்களிப்பை அவர் பாராட்டினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய சிங்கப்பூர் முஃப்தி டாக்டர் நசிருதீன் முகமது நசீர், “சிங்கப்பூர் தீவைத் தனது இல்லமாகக் கருதும் ஒவ்வொருவருக்குமானது இக்கொண்டாட்டம். நாம் சகிப்புத்தன்மையுடன் வாழ்வதைத் தாண்டி, உண்மையான நட்பின் அடிப்படையில் செழித்து வளரும் ஒரு சமூகமாக மாற வேண்டும். நாம் எந்த மொழியில் இறைவனிடம் வேண்டினாலும், எந்த நாளில் வழிபட்டாலும், மனிதநலனுக்கான நமது பொதுவான அக்கறைக்கு முன்னால் வேறுபாடுகள் மறைந்துவிட வேண்டும்,” என்று குறிப்பிட்டார்.
மேலும், இந்த மின்னிலக்க யுகத்தில் உலவும் போலித் தகவல்கள் குறித்து எச்சரித்த அவர், “செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பட்டால் சமூகங்களுக்கு இடையே விரிசல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது,” என்றும் கூறினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பல்வேறு சமயத் தலைவர்களும் சிங்கப்பூரின் சமூகக் கட்டமைப்பு குறித்துத் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
இந்து அறக்கட்டளை வாரியத் தலைமை நிர்வாக அதிகாரி சரோஜினி பத்மநாதன், “சிங்கப்பூர் போன்ற பன்முகத்தன்மை கொண்ட சமூகம் செழிக்க ‘சமய நல்லிணக்கம்’ ஓர் அமைதியான பாலமாகத் திகழ்கிறது. கொள்கைகளால் மட்டும் ஒற்றுமையைத் தக்கவைக்க முடியாது; அது நமது அன்றாடச் சொற்கள், செயல்கள் மூலம் வெளிப்பட வேண்டும்,” என வலியுறுத்தினார்.
சிங்கப்பூர் தேவாலயங்களுக்கான தேசிய மன்றத்தின் (NCCS) தலைவரான ஆயர் (Bishop) பிலிப் லிம், “இக்கட்டான காலங்களில் அமைதி என்பது தானாகக் கிடைப்பதன்று; அது நாம் அனைவரும் இணைந்து பேணிக் காக்க வேண்டிய ஒரு பரிசு,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
சமய நல்லிணக்கத்திற்கான அதிபர் ஆலோசனை மன்றத் தலைவர் சாவ் ஹிக் டின், “உலகின் பிற பகுதிகளில் நடக்கும் மோதல்களைக் காண்பது வருத்தமளிக்கிறது. நமது முன்னேற்றத்திற்குக் காரணமான பரஸ்பர மரியாதை எனும் விழுமியத்திலிருந்து நாம் ஒருபோதும் விலகிவிடக் கூடாது,” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மதரஸா மாணவர்களும் பொதுப் பள்ளி மாணவர்களும் அதிக எண்ணிக்கையில் கலந்துகொண்டனர். அடுத்த தலைமுறையினரிடையே சமய நல்லிணக்கத்தை விதைக்கும் நோக்கில் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

