சிங்கப்பூரின் மூத்த கவிஞர்களில் ஒருவரான பாத்தேறல் இளமாறன் வியாழக்கிழமை (மார்ச் 27) காலமானார். அவருக்கு வயது 80.
உடல்நலக்குறைவால் கடந்த மூன்று வாரங்களாக சாங்கி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்ததாக அவருடைய மூத்த மகள் கண்ணகி இளமாறன், 56, தெரிவித்தார்.
கவியுலகிலும் இசையுலகிலும் முத்திரை பதித்தவர்
தமது 18வது வயதிலிருந்து எழுதிவந்த திரு இளமாறன் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளையும் பாடல்களையும் எழுதியுள்ளார்; வானொலி, தொலைக்காட்சிக்கும் பல பாடல்களை எழுதியுள்ளார்.
திரு இளமாறனின் காவடிப் பாடல்கள் உள்ளூரில் தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற பண்டிகைகளில் மிகவும் பிரபலமானவை. ‘முருகன் காவடிப் பாடல்’ ஒலிவட்டு, ‘பூவாட மயிலாட’ பாடல் போன்றவை மக்கள் மனங்களைப் பெரிதும் கவர்ந்தன.
‘முருகன் காவடிப் பாடல்கள்’,’தேறலின் தூறல்’, ‘திங்கள்’, ‘நினைக்க சுவைக்க’, ‘குமுறல்’, ‘சிதறல்’, ‘பனிக்கூழ்’, ‘மண்மணச் சிறுகதைகள்’, ‘அயல்மொழியும் அருந்தமிழும்’, ‘கல்லறை’ போன்ற நூல்களை அவர் எழுதியுள்ளார்.
‘முருகன் காவடிப் பாடல்’, ‘மழலையர் பாடல்கள்’, ‘பட்டுக்கோட்டை பாடல்கள்’, ‘மாமாரி மாகாளி’ எனும் நான்கு ஒலிவட்டுகளையும் வெளியிட்ட திரு இளமாறன், ‘கொள்கை முழக்கம்’ எனும் மாத இதழையும் நடத்தியுள்ளார்.
1981ஆம் ஆண்டில் வெளியான ‘பாத்தேறல்’ எனும் அவருடைய முதல் நூல் வெளியானதை அடுத்து, முன்னாள் மலேசிய அமைச்சர் சாமிவேலு 1989ல் அவருக்கு ‘பாத்தேறல்’ பட்டத்தைச் சூட்டினார்.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தமிழவேள் விருதை 2007ஆம் ஆண்டிலும் கவிமாலை சிங்கப்பூர் அமைப்பு வழங்கும் இலக்கியக் கணையாழி விருதை 2017லும் அவர் பெற்றார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினராகவும் பின்னர் மதிப்புறு செயலாளராகவும் துணைத் தலைவராகவும் இருந்துள்ள திரு இளமாறன், பல தனித்தமிழ்ப் பண்பாட்டு இயக்கங்களிலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.
‘சிங்கைக் கவிஞர்களின் வரலாறும் வரிகளும்’ எனும் ஆவணப்படத் தொடரின் அங்கமாக 2018ஆம் ஆண்டு தமிழ்மொழி விழாவில் அவரைப் பற்றி கவிமாலை சிங்கப்பூர் அமைப்பு ஓர் ஆவணப்படத்தை வெளியிட்டது.
‘சிங்கப்பூர்த் தமிழ்க் கவிதை வட்டத்துக்குப் பேரிழப்பு’
“பாத்தேறல் இளமாறனின் மறைவு மரபுக் கவிதை உலகுக்கு மட்டுமின்றி தமிழுக்கே பேரிழப்பு. பல மரபுக் கவிஞர்களை உருவாக்கியவர். எழுத்தாளர் கழகத்திற்கு இடர் வந்தபோது முன்வந்து செயலாளராகி, கழகத்தின் தலைவர் கவிஞரேறு அமலதாசனின் பதவியை மட்டுமின்றி கழகத்தையே காப்பாற்றியவர் அவர். கழகப் பொறுப்பாளர்கள் கேட்டுக்கொண்டதால் தமது செயலாளர் பதவியை எனக்காக விட்டுக்கொடுத்தவர்,” என்றார் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன்.
ஐஸ் கிரீமுக்குப் ‘பனிக்கூழ்’ என்ற சொல்லை உருவாக்கியது பாத்தேறல்தான் என்றும் அவர் கூறினார்.
தனித்தமிழ்ப் பற்றாளர்
தனித்தமிழ்ப் பற்றுக்காக அறியப்படும் திரு இளமாறன், “மொழித் தூய்மையில் பிடிவாதமாக இருந்தவர். கவிதைகளில் வேற்றுமொழிகளை கலக்கவிரும்பாதவர். மரபுக் கவிஞர்களை ஆதரித்தவர்,” என்றார் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ.
சிங்கப்பூரின் குறிப்பிடத்தக்க கவிஞர்களில் ஒருவராகவும் நல்ல கவிஞராகவும் அவரைப் போற்றினார் கவிஞர் க.து.மு.இக்பால்.
தமிழ்ப்பற்றை விதைத்தவர்
சிறுவயதிலேயே தனக்குக் கவிதையை கவிநயத்துடன் மேடையில் வாசிக்கக் கற்றுக்கொடுத்தவர் தந்தை இளமாறன் என்றார் அவருடைய மகள் கண்ணகி.
“ஒருமுறை அப்பா செல்லமுடியாத நிகழ்ச்சிக்கு நான் பிரதிநிதியாகச் சென்று அப்பாவின் கவிதையை வாசித்து பாராட்டுகளைப் பெற்றது என் மனத்திலிருக்கும் நீங்கா நினைவு. கண்டிப்பான தகப்பனாராக இருந்தாலும் பிள்ளைகள்மீது அதிகப் பாசம் வைத்திருந்தார்,” என்றார் கண்ணகி.
“எதற்கும் அஞ்சாதவர்; எந்த அவையிலும் தவற்றைத் தவறென்று சுட்டிக் காட்டும் வலிமை பெற்றவர். அது அவருடைய தனிச்சிறப்பு,” என்றும் கண்ணகி சொன்னார்.
பாத்தேறல் இளமாறன் தாம் உருவாக்கிய புதிய சொற்களோடு சிறுவர் பாடல் நூலை வெளியிட்டதை நினைவுகூர்ந்தார் அவருடைய பேரன் நந்தன் சிவபிரகாஸ், 19.
“நான் அவருடைய பேரன் என்று சொல்வதில் பெருமைகொள்கிறேன்,” என்றார் நந்தன்.
சமையலிலும் சாதனைகள்
தமிழகத்தின் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள நாட்டுச்சாலையில் பிறந்த திரு இளமாறன் தமது 12வது வயதில் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தார்.
சமையல் உதவியாளராகத் தொடங்கி ‘பாத்தேறல் ஊண்’ எனும் உணவகத்தைத் தொடங்கினார். வெளியிடங்களில் உடனுக்குடன் சமைத்துப் பரிமாறும் சேவையை சிங்கப்பூரில் பிரபலமாக்கினார்.
தாமான் ஜூரோங் காப்பிக்கடையில் தொடங்கி சந்தர் சாலை, சைனா ஸ்குவேர், தக்காஷிமாயா, லியாங் கோர்ட் ஆகிய இடங்களுக்கும் அவர் தம் உணவகத்தை விரிவுபடுத்தினார்.
முன்னாள் அதிபர்கள் வீ கிம் வீ, எஸ் ஆர் நாதன் ஆகியோருக்கும் அவர் உணவு சமைத்து வழங்கியுள்ளார்.
சனிக்கிழமை இறுதிச் சடங்கு
கண்ணகி, தமிழ்க்கோதை, கலைச்செல்வி, மணிமாறச்செல்வன் ஆகிய நான்கு பிள்ளைகளையும் ஒன்பது பேரப்பிள்ளைகளையும் திரு இளமாறன் விட்டுச்சென்றுள்ளார்.
அன்னாரின் நல்லுடலுக்கு பாசிர் ரிஸ் தெரு 13, புளோக் 155, #02-51, சிங்கப்பூர் 510155 என்ற முகவரியில் அஞ்சலி செலுத்தலாம். நல்லுடல் சனிக்கிழமை (மார்ச் 29) மண்டாய் தகனச் சாலையில் மாலை 6.45 மணியளவில் எரியூட்டப்படும். தொடர்பு எண் 96583395, 90875792.