சிராஜுல் மில்லத் நூற்றாண்டு விழா: சிறந்த முறையில் சேவையாற்றியவர்களுக்கு விருதுகள்

சிராஜுல் மில்லத் நூற்றாண்டு விழா: சிறந்த முறையில் சேவையாற்றியவர்களுக்கு விருதுகள்

3 mins read
ff803067-18f4-454d-b425-5de9ded67ba4
பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர், சேயன் இப்ராஹிம், எம். இலியாஸ் ஆகியோர்க்கு ‘வரலாற்று ஞான தீபம்’ என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது. - படம்: சிராஜுல் மில்லத் நூற்றாண்டு விழா

தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் இயங்கும் சிராஜுல் மில்லத் தமிழ் இலக்கிய பேரவையின் சார்பில் சிராஜுல் மில்லத் நூற்றாண்டு விழா அதன் தலைவர் லயன் ஹாஜி அ. பஷீர் அஹ்மத் சாஹிப் தலைமையில் நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு கவிஞர்கள், தமிழ் ஆசிரியர்கள், சமூக சேவையாளர்கள் என மொத்தம் நூறு பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

புகழ்பெற்ற இலக்கியவாதியாக, ஆற்றல்மிக்க பத்திரிகையாளராக, சீர்மிகு சிந்தையாளராக, சொல்லாற்றல்மிக்க சொற்பொழிவாளராக, முன்மாதிரியான அரசியல்வாதியாக சிராஜுல் மில்லத் என்ற சிறப்புப் பெயருக்குச் சொந்தக்காரரான ஏ. கே. ஏ. அப்துஸ் ஸமது திகழ்ந்தார்.

திருக்குர்ஆனை முதன்முதலில் தமிழில் முழுமையாக மொழிபெயர்த்த (தர்ஜுமதுல் குர்ஆன்) அல்லாமா அப்துல் ஹமீது பாகவியின் புதல்வரான அவர், தந்தையாரின் தெய்வீகப் பணிக்குக் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குமேல் எழுதுகரமாக இருந்து தொண்டாற்றியவர்.

பேரறிஞர் அண்ணாவே, அவரது பேச்சாற்றலை வியந்துப் பாராட்டியுள்ளார். அவர் மறைந்தபோது, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர், ‘மேடையில் வீசிய மெல்லிய பூங்காற்று’ என்று அவரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.

கண்ணியமிகு காயிதெ மில்லத் இஸ்மாயில் சாஹிப்பை வழிகாட்டியாகக் கொண்டு சமுதாய அரசியல் பணிகளில் ஈடுபட்ட அப்துஸ் ஸமது பின்னாளில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர்.

‘இஸ்லாம் எங்கள் வழி! இன்பத் தமிழ் எங்கள் மொழி’ என்று தமிழ் முஸ்லிம்களுக்கு முழக்க வரியையும் முகவரியும் இவர் தந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

1966ஆம் ஆண்டு ஜூலை 17ல் சிங்கப்பூர்த் தேசிய அரங்கில் நடைபெற்ற திருக்குர்ஆன் மாநாட்டில் சிங்கப்பூரின் அந்நாள் பிரதமர் லீ குவான் யூ, காயிதெ மில்லத் இஸ்மாயில் சாஹிப், தமிழவேள் கோ. சாரங்கபாணி ஆகியோரின் முன்னிலையில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இவர் சிறப்புரையாற்றியதாகக் கூறப்படுகிறது.

சிராஜுல் மில்லத் ஆ. கா. அ. அப்துஸ் ஸமதின் சீரிய வாழ்க்கை வரலாற்றை நூலாக்கம் செய்த பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் (காரைக்கால்- ‘சிராஜுல் மில்லத் சிந்தனைகள்’), சேயன் இப்ராஹிம் (கடையநல்லூர்- ‘சிராஜுல் மில்லத் ஒரு சகாப்தம்’), சிங்கப்பூர் செம்மொழி இதழின் ஆசிரியர் எம். இலியாஸ் (சிங்கப்பூர் - ‘உலக அரங்கில் சிராஜுல் மில்லத்’) ஆகியோர்க்கு ‘வரலாற்று ஞான தீபம்’ என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது.

கவிஞர் எம்.ஏ. ஹஜ்ஜி முஹம்மது வரவேற்புரையாற்றிய இந்நிகழ்ச்சியை இனாயத்துல்லாஹ் தொகுத்து வழங்கினார்.

விருதுகளை வழங்கி தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை துணைப் பொதுச்செயலாளர் மெளலானா மெளலவி கே. எம். இல்யாஸ் ரியாஜி, காரைக்கால் பங்குத்தந்தை டாக்டர் பி.பவுல்ராஜ் குமார், நுஸ்ரத் பாத்திமா உள்ளிட்டவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

பன்னூலாசியர் மறைந்த டி.எம். பீர் முஹம்மதின் மகனார், கல்லிடைக்குறிச்சி டி.எம். மீரானுக்கு 50,000 ரூபாய் மதிப்பிலான பொற்கிழியைத் தொழிலதிபரும் தமிழ்நாடு மாநில முஸ்லிம் லீக் செயலாளருமான எஸ்.பி. மில்லத் முஹம்மது இஸ்மாயில், எம்.ஜே பஷீர் அஹமது ஆகியோர் வழங்கினார்கள்.

நூற்றாண்டு விழா சிறப்பு வெளியீடாக சிங்கப்பூர் எம். இலியாஸ் எழுதிய ‘நல்லிணக்க நாயகர் சிராஜுல் மில்லத்’ என்னும் நூலை திருநெல்வேலி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் எல்.கே.எஸ். முஹம்மது மீரான் முகைதீன் வெளியிட, முதல் பிரதியினை வெள்ளம்ஜி எம்.ஜே.அப்துல் ரவூப் பெற்றுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்