சமூக விழிப்புணர்வே டெங்கி ஒழிப்பின் அடித்தளம்: தூய்மைத் தூதரின் நம்பிக்கை

சமூக விழிப்புணர்வே டெங்கி ஒழிப்பின் அடித்தளம்: தூய்மைத் தூதரின் நம்பிக்கை

3 mins read
4eaa6078-63e3-46df-998c-4561d45f44e0
தேசிய சுற்றுப்புற வாரியத்தின் ‘தூய்மை, பசுமைத் தூதராக’ கடந்த 2020ஆம் ஆண்டு முதல் சேவையாற்றி வருகிறார் திரு ஹரி ராமகிருஷ்ணன் (வலமிருந்து 2வது). - படம்: ஹரி
multi-img1 of 2

கொளுத்தும் வெயிலோ, கொட்டும் மழையோ வார இறுதி நாள்களில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புப் பேட்டைகளில், வட்டார வீதிகளில் நீல நிற உடையில் ஒரு குழு சுறுசுறுப்பாக உலா வருவதைப் பலர் பார்த்திருக்கலாம். 

டெங்கிக் கொசுக்கள் குறித்த விழிப்புணர்வுடன் வீட்டு வாசல்களுக்கே தேடிவரும் தேசிய சுற்றுப்புற வாரியத்தின் தொண்டூழியர்கள்தான் அவர்கள்.

தேசிய சுற்றுப்புற வாரியத்தின் ‘தூய்மை, பசுமைத் தூதராக’ கடந்த 2020ஆம் ஆண்டுமுதல் பணியாற்றி வருகிறார் திரு ஹரி ராமகிருஷ்ணன், 37.

சுற்றுப்புற வாரியத்தால் முன்னெடுக்கப்படும் பல்வேறு விழிப்புணர்வுப் பிரசாரங்களில் தடம் பதித்துள்ள இவர், இதுவரை கிட்டத்தட்ட 550 மணி நேரத் தொண்டூழியச் சேவையைச் சமூகத்திற்கு அர்ப்பணித்துள்ளார்.

ஊட்டியிலிருந்து சிங்கப்பூர் வரை

தமிழ்நாட்டின் ஊட்டியில் எழில் கொஞ்சும் சூழலில் வளர்ந்த ஹரிக்குச் சிறு வயது முதலே சுற்றுச்சூழல்மீது ஆர்வம். 

ஊட்டியில் நெகிழிப்பைகளுக்கு எதிரான தடையைப் பார்த்துப் பழகியதால், சிங்கப்பூரிலும் சுற்றுச்சுழலில் அதே போன்றதொரு தாக்கத்தை ஏற்படுத்த இவருக்கு ஆசை பிறந்தது.

அதற்கேற்ப, 2020 ஜூன் முதல் சுற்றுப்புற வாரியத்தின் தொண்டூழியராகக் களமிறங்கினார் திரு ஹரி.  தொண்டூழியத் தலைவராக இதுவரை 200க்கும் மேற்பட்ட களப்பணிகளை அவர் முன்னின்று வழிநடத்தியுள்ளார். 

“நாங்கள் வார இறுதி நாள்களில் வீடு வீடாகச் செல்லும்போது, பலரைச் சந்திப்போம். சில நேரங்களில் தூக்கத்தைக் கெடுத்துவிட்டோம் என்று கோபித்துக்கொள்வோரும் உண்டு.

ஆனால், ‘மைஇஎன்வி’ (MyENV) செயலி மூலம் அவர்களின் வீட்டின் அருகிலேயே டெங்கி ஆபத்து இருப்பதைச் சுட்டிக்காட்டி, தேங்கியிருக்கும் தண்ணீரை அகற்றச் சொல்லிக் கொடுக்கும்போது அவர்களின் கோபம் மறைந்துவிடும்,” என்று புன்னகைத்தார் ஹரி.

மறுசுழற்சி குறித்த தவறான புரிதல்கள்

தூய்மையின் தூதர்களாகவும் வலம் வருவது குறித்து பேசிய அவர், மறுசுழற்சி குறித்து நிலவும் சில தவறான புரிதல்களையும் சுட்டிக்காட்டினார். 

‘‘பலர் மறுசுழற்சித் தொட்டிகள் குறித்து அறிந்திருந்தாலும் அத்தொட்டிகளில் உணவுப் பொட்டலங்களின் அட்டைகள், உறைகளை எந்தெந்தப் பெட்டியில் போட வேண்டும் என்பதற்கான புரிதல் இல்லை.

‘‘இன்னும் சிலர் எஞ்சியிருக்கும் உணவுப் பொருள்களுடனே நெகிழி அல்லது இதர பைகளை மறுசுழற்சித் தொட்டிகளில் போட்டுவிடுவர். அவர்களுக்கு மறுசுழற்சித் தொட்டிகளின் நிற வாரியான பயன்பாடு பற்றி விளக்குவோம்,’’ என்று திரு ஹரிஷ் தெரிவித்தார்.

மாண்டரின் கற்கிறார்

தொண்டூழியப் பயணத்தின் முக்கிய அங்கமாக, பன்முகத் தன்மைமிக்க சமூகத்தில்  மூத்தோருடன் இன்னும் சரளமாகப் பழக, சீன மொழி பேசுவதற்கான முறையான பயிற்சியிலும் இணைந்துள்ளார் திரு ஹரி.

‘‘தொண்டூழியத்திற்காச் செல்லும்போது பெரும்பாலான மூத்தோர் மாண்டரின் மொழியில் பேசுவர். மொழி தெரியாததால் என்னால் அவர்களுடன் நீண்ட நேரம் பேச இயலாது. அதனால், விழிப்புணர்வை விதைக்க மொழி தடையாக இருக்கக்கூடாது எனும் நோக்கத்தில் சீன மொழி பேசக் கற்று வருகிறேன்,’’ என்றார் இவர்.

வார இறுதி வந்தாலே அது சமூகப் பணிக்கு என்று ஒதுக்கி வைத்துவிட்டதால், தம் சிறுபிள்ளைகள் கூட ‘அப்பாவுக்கு இன்று தொண்டூழியம் இருக்கும்’ என்பதைப் புரிந்துகொண்டு, தாம் இச்செயல்களில் தவறாது ஈடுபட அயராது ஒத்துழைப்பும் ஊக்கமும் அளிப்பதாகக் கூறினார் இந்தத் தன்னார்வலர்.

மேலும், ‘‘இக்காலத்து இளைய தலைமுறையினர் டெங்கித் தடுப்பு வினாவிடைப் போட்டிகளில் அத்தனை பதில்களையும் சரியாகச் சொல்லி அசத்துகிறார்கள். இத்தலைமுறைக் குழந்தைகள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்பது மிகுந்த நம்பிக்கையளிக்கிறது,’’ என்றும் திரு ஹரி கூறினார்.

தேசிய சுற்றுப்புற வாரியத்தின் ‘தூய்மை மற்றும் பசுமைத் தூதராக’ கடந்த 2020ஆம் ஆண்டு முதல்  சேவையாற்றி வரும் திரு ஹரி ராமகிருஷ்ணன், வெளிநாட்டு ஊழியர் விடுதிகளிலும் விழிப்புணர்வுப் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
தேசிய சுற்றுப்புற வாரியத்தின் ‘தூய்மை மற்றும் பசுமைத் தூதராக’ கடந்த 2020ஆம் ஆண்டு முதல் சேவையாற்றி வரும் திரு ஹரி ராமகிருஷ்ணன், வெளிநாட்டு ஊழியர் விடுதிகளிலும் விழிப்புணர்வுப் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். - படம்: ஹரி

வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் விழிப்புணர்வு

ஹரியின் தொண்டூழியப் பயணத்தில் மிக முக்கியமானது, வெளிநாட்டு ஊழியர்களின் தங்குமிடங்களுக்குச் செல்வது. வீடுகளைப் போல அல்லாமல் நூற்றுக்கணக்கானோர் தங்கியிருக்கும் விடுதிகளுக்குச் செல்கையில் அங்குள்ள ஊழியர்களிடம் பொதுச் சுகாதாரம், டெங்கித் தடுப்பு முறைகளை அவர்களின் பாணியிலேயே தமிழ் மற்றும் எளிய மொழிகளில் விளக்குகிறார் இவர்.

‘‘சரியான முறையில் குப்பைகளை அப்புறப்படுத்தாவிட்டால் விதிக்கப்படும் அபராத விவரங்களை எடுத்துக்கூறும்போது ஊழியர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும். 

‘‘ஆர்வத்துடன் அவர்கள் கேட்பதால்,  வார இறுதி நாள்களை வீணடிப்பதில்லை. சமூகத்திற்காகப் பங்களிக்கிறோம் என்ற நிறைவும் தொண்டூழியர்களுக்கு ஏற்படும்,’’ என்று திரு ஹரி கூறினார்.

குறிப்புச் சொற்கள்